என்னை 2 முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்கள் ஆதரவுதான் என்பதை என்றென்றும் மறவேன்.

/

என்னை 2 முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்கள் ஆதரவுதான் என்பதை என்றென்றும் மறவேன்.

May 2022 - Nov 2022

திராவிட மாடல் என்ற ஒற்றைக் கொள்கையின் மூலம் தமிழகத்தை வழி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலாலும், ஆதரவினாலும் நிதியமைச்சர் என்ற வகையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நான் பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதைத் தொகுதி மக்களான நீங்கள் நன்கு அறிவீர்கள். அதற்கு வலு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் அவர்கள் எனக்குக் கூடுதலாகப் புள்ளியியல் துறையையும் ஒதுக்கியதற்கு முதல்வர் அவர்களுக்கு என் நன்றியினை இந்த அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கெல்லாம் முழு முதற்காரணமாக அமைந்தது, என்னை 2 முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்கள் ஆதரவுதான் என்பதை என்றென்றும் மறவேன்.

அதனால்தான் நான் ஆற்றி வரும் பணிகளை  என்னைத் தேர்ந்தெடுத்த மக்களான நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அறிக்கையாக ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை எனது கடமையாகக் கருதி சமர்ப்பித்து வருகிறேன்.

 

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக எனது பணிகள்

சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய திட்டங்கள்.

 

சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நமது மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்குத் தேவையான சாலை, தண்ணீர், கழிப்பறை, பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறேன். கடந்த ஆட்சிக் காலத்தில் 150 திட்டங்களை செயல்படுத்தியதோடு முழுமையாக 100% எனது தொகுதி மேம்பாட்டு நிதியினை மக்களுக்குப் பயன்படுத்தியுள்ளேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கடந்த மே 2022 – நவம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் முடித்து திறந்து வைத்த திட்டப்பணிகள்.

 

  1. வார்டு எண் 51ல் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம்.
  2. வார்டு 51 கிருஷ்ணன் கோவில் தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை.
  3. வார்டு 75 வசந்தநகர் 2வது தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதி  ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை.
  4. வார்டு 22 கணேசபுரம் தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை.
  5. வார்டு 75 சுந்தரராஜபுரம் மெயின் தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை கட்டிடம்.

 

இது தவிர நகர உட்கட்டமைப்பு மேம்படத் தேவையான இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்துள்ளேன். 

 

செல்லூர் - தத்தனேரி இணைப்புப் பாலம்.

கடந்த 2011 ஆம் திமுக அரசால் கட்டப்பட்ட செல்லூர் மேம்பாலம் அப்பகுதியின் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்தது. இப்பாலப்பணிகள் நிறைவடைய என் தந்தையார் மேற்கொண்ட முயற்சிகளை மதுரை மக்களான நீங்கள் நன்கறிவீர்கள்.

பத்து வருடங்கள் கடந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆற்றோர சாலைகள் மேம்படுத்தப்பட்டது. 

தத்தனேரி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ரயில்வே அண்டர் பிரிட்ஜ் மூலம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் கோரிப்பாளையத்திற்கும், கோரிப்பாளையத்தில் இருந்து வைகை வடகரை ரோட்டில் வரும் வாகனங்களும் அண்டர் பாஸ் மூலமே தத்தனேரி பகுதிக்கும் சென்று வந்த நிலையில் கனரக வாகனங்கள் அப்பகுதியைக் கடக்க வாய்ப்பின்றி இருந்தது. தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதிகள் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்தன.

கோரிப்பாளையத்தில் இருந்து வைகை வடகரை சாலைக்கு செல்லும் வாகனங்கள், ஏற்கனவே உள்ள செல்லுார் பாலத்தையொட்டி ரயில்வே தடத்தை கடக்கும் வகையில், அதன் பக்கவாட்டில் புதிதாகக் கூடுதல் இணைப்புப் பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ரூ.9.5 கோடிக்கு நிர்வாக அனுமதி  அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் 11 கண்களுடன், 320 மீட்டர் நீளத்திற்கு 7.5 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது...

 

ஜெய்ஹிந்த்புரம்-டிவிஎஸ் நகர்- பழங்காநத்தம் இணைப்பு பாலம்

பழங்காநத்தம் - டி.வி.எஸ் நகர் பாலத்தின் மற்றொரு பகுதியாக உள்ள வெங்கடாசலபுரம், ஜெய்ஹிந்த்புரம் இணைப்பு பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் தற்போது அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த இணைப்பு பாலத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்துள்ளேன். இந்த பாலத்தின் பணிகள் 18 மாதங்களில் நிறைவடைய உள்ளது. 251 மீட்டர் நீளம் கொண்டதாக இந்தப் பாலம்  அமைய உள்ளது.

 

கோரிப்பாளையம்-சிம்மக்கல் பறக்கும் மேம்பாலம்

மதுரை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பட எண்ணற்ற திட்டங்களை என் தந்தையார் உருவாக்கி நிறைவேற்றியுள்ளார். மெஜுரா கோட்ஸ் மேம்பாலம், செல்லூர் பாலம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போன்றவை எனது தந்தையார் பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களின் முயற்சியில் உருவானவையே. 

ஆகவே எனது கடமையாக மதுரை மாநகர் உட்கட்டமைப்பு மேம்பட பல திட்டங்களை முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். 

அதன்படி மதுரை மாநகரில் மிக முக்கியமான சந்திப்பாக விளங்கக் கூடியது கோரிப்பாளையம் சந்திப்பு. இந்தப் பகுதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நிற்கும் நிலை உள்ளது.

இதனால், இந்தப் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று 199 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது என மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை மாநகராட்சி மேற்கு நுழைவாயில் தொடங்கி சிம்மக்கல் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரையிலும், பீபீ குளம், செல்லூர் பகுதிகளை இணைக்கும் வகையிலும், ஏவி பாலம் அருகே கூடுதலாக வைகை ஆற்றுப் பாலம் ஒன்று அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பாலம் நமது மதுரை மத்திய தொகுதி, மதுரை தெற்குத் தொகுதி மற்றும் மதுரை வடக்குத் தொகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நலத்திட்ட உதவிகள்

முதியோர் ஒய்வூதியம் / கணவனை இழந்தவர்கள் & மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை

அமைச்சராக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். தகுதியற்ற நபர்கள் ஓய்வூதியம் பெறுவதைக் கண்டறிந்து அவர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து நீக்கி தகுதியுள்ள பயனாளிகளுக்குப் புதிதாக ஓய்வூதிய, ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 1630 பயனாளிகளுக்கு முதியோர், கைம்பெண் & கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளைப் பெற்றுத்தந்துள்ளேன். எனது அலுவலகப் பணியாளர்களின் மூலம் தகுதியான நபர்கள் கண்டறியப்பட்டு. அவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வருவாய்த்துறை அலுவலகர்களிடம் சமர்ப்பித்து முறையாக எவ்வித இடையூறுமின்றி பயனாளிகளுக்கு உதவித்தொகை பெற்றுத்தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி, கொரோனா நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களான சக்கர நாற்காலி, மோட்டார் நாற்காலி, கைப்பேசி, காது கேட்கும் கருவி, ஊன்றுகோல், செயற்கை கால், கண் கண்ணாடி போன்ற அரசு வழங்கும் திட்டப்பலன்களைப் பெற்றுத் தந்துள்ளேன்.

மேலும் மாற்றுத் திறனாளிகள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து அல்லல்படக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டருகே முகாம்கள் நடத்தி அவர்கள் வீடுகளுக்கே நேரில் சென்று திட்டப்பலன்களை அளித்துள்ளேன்.

 

சிறப்பு மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம். 

மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லைத் தந்து அவர்களுக்கென தனித் துறையையும், நல வாரியத்தையும் உருவாக்கி அவர்களின் நலன் காத்தது தலைவர் கலைஞர் அரசு. அவர்தம் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் செல்லும் ஒருவர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டார். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்புத் தொகையான மாதம் ரூ.1500-ஐ காத்திருப்போர் பட்டியலில் உள்ள 9,173 பயனாளிகளுக்கு வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமான “RIGHTS” என்ற திட்டம் 1,709 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக நலத்திட்ட உதவிகள். அவர்களுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான ஒருங்கிணைந்த சிறப்பு மதிப்பீட்டு முகாம் மூன்று கட்டங்களாக நமது மதுரை மத்தியத் தொகுதியில் நடத்தினேன்.

3 முகாம்களைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நான் நேரில் சென்று அவர்களுக்குத் தேவையான அரசுத் திட்டப் பலன்களை வழங்கினேன்.

 

நலத்திட்ட உதவிகள் பயனாளிகள் என்ணிக்கை & மதிப்பு

இனங்கள்  பயனாளிகள் எண்ணிக்கை மதிப்பு
முதியோர் உதவித்தொகை 1001 12,000,000.00 
ஆதரவற்ற விதவை உதவித்தொகை
487
5,844,000.00 
கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை
44 528,000.00 
மாற்றுத் திறனாளி உதவித்தொகை
54 648,000.00 
தையல் இயந்திரம்
16 96,368.00 
தேய்ப்புப் பெட்டி
18 87,948.00 
பார்வையற்றவர்களுக்கான ஊன்றுகோல் & கண்ணாடி
5 2,650.00 
மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசி
27 365,823.00 
சக்கர நாற்காலி
5 39,500.00 
சக்கர நாற்காலி (சொந்தப் பணம்)
58  
மூன்று சக்கர சைக்கிள் 
2 18,100.00 
பேட்டரி பொருத்திய சக்கர நாற்காலி 
3 318,000.00 
C.P. சக்கர நாற்காலி
2 20,800.00 
நடை பழகு சாதனம்
2 4,290.00 
முழங்கை ஊன்றுகோல்
1 600.00 
செயற்கை அவயம்
4 320,000.00 
காது கேட்பு கருவி
26 144,560.00 
கொரோனா நிவாரண நிதி (RS. 50,000)
14 700,000.00 
கொரோனா நிவாரண நிதி (RS. 3,00,000)
2 600,000.00 
மொத்தம்
1771
21,738,639.00 

 

 

புதிய பேருந்து வழித்தடங்கள்

நமது மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்கள் வேண்டி வந்த 2 கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தது மன நிறைவைத் தந்தது. ஏனெனில் 2 கோரிக்கைகளும் ஏழை எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் வாழும் எல்லீஸ் நகர் போடி லைன் பகுதி மக்களிடமிருந்தும், தத்தனேரி, அருள்தாஸ்புரம் பகுதிகளிலிருந்தும் வந்த கோரிக்கைகள். தாங்கள் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கும் செல்வதற்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கோரியிருந்தனர். அவர்கள் கோரிக்கையினை ஏற்றுக் கீழ்க்கண்ட 2 வழித்தடங்களையும் துவக்கி வைத்தேன். அப்பகுதி மக்களோடு பேருந்தில் பயணித்து மகிழ்ந்தேன்.

1. *5B* - மாட்டுத்தாவணி - அண்ணா நிலையம் - அரசு இராஜாஜி மருத்துவமனை - சிம்மக்கல் - பெரியார் பேருந்து நிலையம் - எல்லீஸ் நகர் - பழங்காநத்தம் - திருப்பரங்குன்றம்.

2.  *77BVJ* - மாட்டுத்தாவணி - அண்ணா நிலையம் - அரசு இராஜாஜி மருத்துவமனை - செல்லூர் - தத்தனேரி - அருள்தாஸ்புரம் - ESI - கொன்னவாயன் சாலை - பாத்திமா  கல்லூரி - விளாங்குடி.

 

பன்னடுக்கு வாகன நிறுத்தம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த ஏதுவாக புதிதாகப் "பன்னடுக்கு வாகன நிறுத்தம்" கட்டப்பட்டுள்ளது. ரூ.41 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன அப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் அலைச்சலின்றி கோயில் சென்று வரவும் வசைதியாக அமைந்துள்ளது.

 

**பெட்டி செய்தி 1**

ஆர்.ஓ ப்ளாண்ட்

மஹபூப்பாளையத்தில் அமைந்துள்ள எனது மத்திய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO water) வழங்கிடும்  வகையில் புதிய ஆர்.ஓ.ப்ளாண்ட் ஒன்றை நிறுவியுள்ளேன். பொதுமக்கள், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அந்த ஆர்.ஓ ப்ளாண்ட் அமைந்துள்ளது.

 

**பெட்டி செய்தி 2**

தொழிலணங்கு

1989ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் உருவாக்கி, பின்னர் 2006-11 காலக்கட்டத்தில் 185000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினர்களாக பங்கு பெறச் செய்து அவர்களுக்குச் சுயதொழில் உருவாக்கித் தந்து வாழ்வில் வெற்றி பெறச்செய்தது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு.

ஆனால் கடந்த ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தனது நோக்கத்தில் இருந்து தவறியது. அக்குழுக்களை மீண்டும் ஒருங்கிணைத்து, பயிற்சி அளித்து,  புதிய தொழில்களை உருவாக்கி பெண்களை தொழில் முனைவோர் ஆக்கிட பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது திமுக அரசு.

அதன் முதற்கட்டமாக தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில், பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "தொழிலணங்கு" என்ற மாபெரும் நிகழ்வை மதுரை மத்தியத் தொகுதியில்  நடத்தினேன். 

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர், திரு.சிவராஜா ராமநாதன் அவர்களின் ஒத்துழைப்பில் பல சிறுதொழில் நிறுவனங்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களோடு இணைந்து செயல்பட ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

**பெட்டி செய்தி 3**

அம்மன் சேவைப் பிரிவு உணவகம்  

மனிதநேயமும், செயல்திறனும் தான் திமுக ஆட்சியின் சிறந்த அடையாளங்கள். அந்த வகையில் அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அங்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கும், மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் அம்மன் சேவைப்பிரிவு உணவகத்தை திறந்து வைத்தேன். கடந்த பல ஆண்டுகளாக இங்கு உணவகம் நடத்தி அரசுக்கும் நட்டம் ஏற்படுத்தியும், மக்களுக்குத் தரமற்ற உணவும் வழங்கி வந்தவர்களைக் கண்டறிந்து அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதன் மூலம் அரசுக்கு வருவாயும், மக்களுக்குத் தரமான உணவும் கிடைத்திட வழி செய்துள்ளேன்.

 

**பெட்டி செய்தி 4**

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 99வது பிறந்தநாளினை முன்னிட்டு மதுரை 

1. மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

2. சுந்தர்ராஜபுரம் மதுரை மாநகராட்சி   மேல்நிலைப்பள்ளி 

3. மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

ஆகிய பள்ளிகளில் அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி, அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினேன். 

 

**பெட்டி செய்தி 5**

உடனடி சாலை வசதி

கடந்த 26.07.2022 அன்று மூன்று மாவடியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு தொழில் பயிற்சி நிலையம் மகளிர்) விடுதியினைத் திறந்து வைத்த நிகழ்வின்போது விடுதிக்கும்  வாசல் பகுதிக்கும் வழி அமைக்கப்படாமல் தற்காலிகமாக கட்டைகளை அடுக்கி வழி அமைத்திருந்தனர். அரசு திட்டமிட்டு, பல கோடி செலவு செய்து பல நல்ல முயற்சிகளை மேற்கொள்ளும்போது அதை செயல்படுத்தும் நிலையில் உள்ள அரசு அலுவலர்கள் முழுமையாகப் பணிகளைக் கண்காணித்து நிறைவேற்றவேண்டும் என அந்த நிகழ்விலேயே குறிப்பிட்டு விரைவில் வாசல் முதல் விடுதிக் கட்டிடம் வரை சாலை அமைத்திட வேண்டும்  என அறிவுறுத்தினேன். பின் 7 நாட்களில் அங்கு வழி ஏற்படுத்தப்பட்டதோடு தார்ச்சாலையும் அங்கு அமைக்கப்பட்டது.

 

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக செயல்பாடுகள் 

மனிதவள மேலாண்மைத் துறை

 

அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 75வது சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் அரசுப் பணியாளர்களுக்கு 31 சதவீதத்திலிருந்து 34% ஆக அகவிலைப்படியை (3%) அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி, இந்த கூடுதல் அகவிலைப்படி 01.07.2022 முதல் ரொக்கமாக  வழங்கப்படுவதற்கான அரசாணை 18/08/2022 அன்று வெளியிடப்பட்டது.

அரசுப் பணியாளர்களுக்கான ஆணையை பின்பற்றி மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 31% ஆக இருந்த அகவிலைப்படி 01.07.2022 முதல் 34%ஆக உயர்த்தி வழங்க அரசாணை 18.07.2022 அன்று வெளியிடப்பட்டது. 

அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதல் கட்டிடம்: மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, மாண்புமிகு முதல்வர் அவர்களால் 11.07.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. ( Image )

ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ்: அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் IPPB இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது ( Tweet link for iamge)

மனித வள சீர்திருத்தக் குழு: 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக 'மனித வள சீர்திருத்தக் குழு' ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு. M.F. ஃபாரூக்கி தலைமையில் அமைக்கப்பட்டது.  அக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் 4/11/2022 அன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் நடைபெற்றது

 

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) இணைந்து உருவாக்கிய தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு (TNHPS) அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வின் (2018-19) சுருக்க அறிக்கை (ஒரே Baseline Survey) 11/10/2022 அன்று தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது. 

 

நிதித்துறை

பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதில் சாதனை:

2021-2022 நிதியாண்டிற்கான நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை திருத்தப்பட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டதை விட இறுதிக் கணக்கில் ரூ. 9,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், 2020-2021 ஆம் ஆண்டு 4.61% ஆக இருந்த  நிதிப் பற்றாக்குறை சாதனை என்று குறிப்பிடத்தக்க வகையில் 2021-2022 ஆம் நிதியாண்டில் 3.38% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

 

கடன் பெறுவதற்கான திறன் அதிகரிப்பு:

ஒன்றிய அரசு கட்டாயப்படுத்திய கடன் எல்லையை விட மிகக்குறைவான அளவிற்கே கடன் பெற்றிருப்பதனால் மாநிலத்தின் சுயமரியாதையை நிலை நிறுத்தியிருப்பதோடு, இனிவரும் காலங்களில் (15வது நிதிக்குழு பரிந்துரைகளின் காலமான 2026ஆம் ஆண்டு வரை) கடன் பெறுவதற்கான திறனை அதிகரித்துள்ளோம். சில நிபுணர்கள் அச்சப்படும்படி அடுத்த சில ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் சரிவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் அத்தைகைய நிகழ்வை தமிழ்நாடு எதிர்கொள்வதற்கான திறனை இந்த கூடுதல் கடன் பெறுவதற்கான சக்தி மற்றும் நாங்கள் மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.

 

கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம்:

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை வருவாய் பற்றாக்குறை கடன் மற்றும் வட்டி செலுத்துதலின் வளர்ச்சி குறைக்கப்பட்டுள்ளதாலும். பொதுவிநியோகத் திட்டம் போன்ற அவசியமான செலவுகளை அதிகரித்ததாலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மிகச்சிறப்பான அளவிற்குப் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி, நுகர்வோர் விலை பண வீக்கத்தின் இந்திய சராசரி 7% ஆனால் தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.1% மட்டுமே.

 

பொதுத்துறை நிறுவனங்களின் நிதிதிலை குறித்து பகுப்பாய்வு செய்வதற்கான குழு: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நிதிநிலை மற்றும் இயக்கம் குறித்து பகுப்பாய்வு செய்வதற்காக ஆலோசகர்களை நியமிப்பது தொடர்பான அரசாணை( GO NO 141 24/05/22 ) வெளியிடப்பட்டு தற்போது  50 பொதுத்துறை நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி வளங்களை திரட்டுவதற்கான அம்சங்களை ஆராயக் குழு: நிதித்துறையின் கீழ் நிதி வளங்களை திரட்டுவதற்கான அம்சங்களை ஆராயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு விவரங்களை இந்தக் குழு திரட்டும். இந்த நிதிகளை, தமிழ்நாடு அரசின் துறைகள் எந்தெந்த வகையில் திறம்பட கையாள்கின்றன என்பதையும் இக்குழு ஆய்வு செய்யும். 

புதிய சார் கருவூல அலுவலகக் கட்டிடங்கள்: நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் ரூபாய் 1.11 கோடி செலவிலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ரூபாய் 1.4 கோடி செலவிலும் கட்டப்பட்ட சார் கருவூல அலுவலகங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

GST: 

அரிசி, தயிர், மோர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரி, சாமானிய  மக்களைப் பாதிக்கும் என்பதால் இவை மீதான வரி விதிப்பு குறித்து சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு வழங்கிய முன்மொழிவுகளை ஏற்றுக் கொள்ள இயலாது என சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது, அதிகாரிகள் அளவில் நடைபெற்ற கூட்டங்களிலும் (Fitment Committee) தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. (PR 23/07/22 )

தமிழ்நாடு அரசின் சார்பாக சண்டிகரில் நடைபெற்ற 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களின் தற்போதைய நிலை பணவீக்கத்தின் விளைவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் கால வரையறையை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைத் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்தார். 

விருதுகள்

 

1. தனியார் ஊடக நிறுவனமான கலாட்டா வழங்கிய 2021 ஆம் ஆண்டிற்கான ‘Change Maker of the Year’ விருது 

2. (Galatta Awards - Change Maker of the Year - PTR Palanivel Thiagarajan, Minister for Finance & Human Resources)

3. NIT - திருச்சி NIT கல்லூரியின் 2021ஆம் ஆண்டிற்கான ‘தனிச்சிறப்புடைய முன்னாள் மாணவர் விருது’ (Distinguished Alumnus Award) வழங்கபட்டது. 

 

அயல்நாட்டு பயணங்கள்

 

பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் நிறுவன தலைவர்கள், அரசு நிர்வாகிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்ப்பது, வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து உரையாடவும், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், மாணவர் அமைப்புகளிடம் தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிக்குக் காரணமான திராவிட மாடல் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும் மேற்கொண்ட அயல்நாட்டு பயணங்கள் அமைந்தது.

 

அமெரிக்கா (23.05.2022 – 25.05.2022)

நிதித்துறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது, தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கான (TNIFMC) முதலீடுகளைத் திரட்டுவது, நந்தனத்தில் அமைய உள்ள நிதி தொழில்நுட்ப பூங்காவிற்கு (Fintech Park) நிறுவனங்களை ஈர்ப்பது, தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறுவனங்களை அமைத்துள்ள பேங்க் ஆப் நியூயார்க் போன்ற பல்லாயிரக்கணக்கானோரை பணியமரத்தக்கூடிய நிறுவனங்களின் கிளைகளை மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் அமைப்பது, மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தடம் பதித்துள்ள நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட ஈர்ப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் விதமாக இப்பயணம் அமைந்தது.

 

ஆஸ்திரேலியா (27.10.2022 – 01.11.2022)

மேற்கு ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் திரு. ரோஜர் கூக் அவர்களின் அழைப்பினை ஏற்று, எனது தலைமையில் மூவர் குழு, அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றோம். இந்தப் பயணத்தில் 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று, தமிழ்நாடு- ஆஸ்திரேலியா இடையேயான கூட்டுறவு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம்.  

ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், அந்நாட்டில் தமிழக இளைஞர்களுக்குத்  திறன் சார் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக அந்நாட்டின் தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் மற்றும் விக்டோரியா,  நியூ சவுத் வேல்ஸ் மாகாண அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொண்டேன். அத்தோடு  இணையம் சார்ந்த அரசு சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டேன்.

 

இங்கிலாந்து 01.06.2022 – 02.06.2022

இவ்வாண்டு (2022) ஜூன் மாதம் மேற்கொண்ட இங்கிலாந்து பயணத்தில் ஆக்ஸ்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற @OxfordUnion அமைப்பில் "The House Believes The Raj Lives On" என்ற தலைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினேன். 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சைத் வர்த்தகப் பள்ளி (@OxfordSBS) மாணவர்களிடம் "Designing Policy support for Business and Entrepreneurship" என்கிற தலைப்பில் உரையாற்றினேன். அத்தோடு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களின் அமைப்பான @oxfordind ஒருங்கிணைந்த நிகழ்ச்சியில் "திராவிட மாடல்" குறித்து விளக்கினேன்.

 

தேசிய அளவிலான கருத்தரங்குகள்

 

பல்வேறு அரசியல், பொருளாதார விவகாரங்களில்  தமிழ்நாட்டின்  தனித்துவமான பார்வையினைப் பதிவு செய்ய நான் பங்கேற்ற பல்வேறு தேசிய அளவிலான கருத்தரங்குகள், விவாத நிகழ்ச்சிகள் அமைந்தன அவற்றில் சில.

TIOL 

டெல்லியில் நவம்பர் 7 & 8 ஆகிய தினங்களில் 'Model Taxpayers’ at TIOL National Taxation Awards 2022' விருது வழங்கும் விழாவில் "சீர்திருத்தவாத மாநிலம்" (Reformist State) என்கிற பிரிவில் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட விருதினை தமிழ்நாடு அரசின் சார்பாக பெற்றுக்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் சீரிய தலைமையின் கீழ் அவரது வழிகாட்டுதல்படி எவ்வாறு தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பது குறித்து உரையாற்றினேன். 

 

The Southfirst - Dakshin Dialogues

ஹைதராபாத்தில் இவ்வாண்டு செப்டம்பர் 17 அன்று The South first ஊடக நிறுவனம் ஒருங்கிணைத்த DakshinDialogues கலந்துரையாடல் நிகழ்வில் தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. K.T. ராமா ராவ், ஆந்திர மாநில  நிதியமைச்சர் திரு. புக்கனா ராஜேந்திரநாத் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர்  ஆகியோருடன்   கலந்துகொண்டு கூட்டாட்சி, மாநில உரிமைகள் குறித்த தமிழ்நாட்டின் கண்ணோட்டத்தைப் பதிவு செய்தேன். 

 

India at 75: The Way Forward - Ten ways to reinvigorate India's Democracy

இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மும்பையில் உள்ள நிகழ்த்து கலைகளுக்கான(Performing Art) தேசிய மையத்தில் (NCPAMumbai) நடைபெற்ற 'The Anil Dharker Literature Live!' நிகழ்வில் ‘சுதந்திர இந்தியா 75: முன்னோக்கி செல்லும் வழி’ என்கிற தலைப்பில் ஆற்றிய  உரையில் இந்திய ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்கான 10 வழிகளை முன்வைத்தேன். 

 

Measures on Economic, Science, IT ad core development of Tamilnadu -  AIM

இவ்வாண்டு மார்ச் 25 அன்று ,  அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில்  நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை வகித்து, தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயிலும் முப்படை வீரர்கள், ரஷ்யா, ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், நேபால், பூட்டான் மற்றும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினருக்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தகவல் தொழில்நுட்பம் அறிவியல் மற்றும் இதர துறைகளில் முன்னேற்றங்கள் குறித்து விவரித்தேன்.

 

சிறப்புப் பணிக் குழு (Special task force): கருவூல அமைப்புகளின் கண்காணிப்புக்கு வெளியே வங்கிக் கணக்குகளில் அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதாக பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டி அதைத் தொடர்ந்து, அத்தகைய கணக்குகளை முழுமையாகச் சரி செய்யவும் அதில் பயன்படுத்த இயலாத நிதியையும் பயன்படுத்தக்கூடிய விதியைக் கண்டறிய நிதித் துறையின் மூத்த அதிகாரிகளின் கீழ் ஓர் சிறப்புப் பணிக் குழு (Special task force)  அமைக்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் (para 23) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்புப் பணி குழு உருவாக்கப்பட்டது (GO No.199) . அக்குழு மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு துறைகள் மற்றும் உண்மைகளால் பயன்படுத்தப்படாத சுமார் 2000 கோடி ரூபாய்  நிதி இருப்பது கண்டறியப்பட்டது. 

 

பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதர்களுடன் சந்திப்பு மற்றும் தூதரக நிகழ்ச்சிகள்: 

அமைச்சர் என்கிற முறையில் பல்வேறு நாடுகளின் தூதர்கள்/ தூதர்களுடனான சந்திப்பில் தமிழ்நாட்டோட பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முதலீடுகளை ஏற்பது குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். அத்தோடு பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மற்றும் வணிகக் கூட்டமைப்புகள் சார்பாக ஒருங்கிணைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் குறித்தும், தமிழக அரசுப் பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளேன்.

 

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்க ஆலோசனைக் குழு

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும்பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், அரவிந்த் தத்தார் தலைமையில் சிறப்பு வாய்ந்த உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. 

 

தணிக்கை அமைப்புச் சீர்திருத்தம்

அரசுத் தணிக்கை அமைப்பு முறையில் தேவையான அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அலுவலர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் தணிக்கை தலைமை இயக்குனர் (Director - General of Audit) என்கிற பொறுப்பை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். 

2021-22 திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அறிவித்ததற்கு ஏற்ப தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் உள் தணிக்கை செயல்பாடுகள் நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மற்ற அனைத்துத் துறைகளின் உள் தணிக்கை செயல்பாடுகள் நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

 

**பெட்டி செய்தி 4**

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 

பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காக்கும் மதுரை மண்ணின் அடையாளமாக விளங்குவது ஜல்லிக்கட்டு விளையாட்டு. மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும் கூட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்திப்பெற்றது. ஆனால் அலங்காநல்லூரில் தற்போது போட்டி நடக்கும் பகுதி குறுகலானது. வசதியற்றது. பொதுமக்கள் வாழுமிடத்திற்கு அருகில் உள்ளது. எனவே மாற்று இடம் வேண்டி ஊர் மக்கள் கேட்டதற்கிணங்க திமுக அரசு புதிய அரங்க  மைதானம் ஒன்றைக் கண்டறிய ஆணை பிறப்பித்தது. அதன்படி அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. 

 

கலைஞர் நூலகம்

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர் கலைஞர் அவர்களின் பெயரில் மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மதுரை இளைஞர்களின் அறிவு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டு வரும் இந்நூலகம் மதுரை மாநகர மேம்பாட்டு திட்டங்களில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. வருன் ஜூன் 3, 2023 அன்று தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் அன்று நூலகம் திறக்கப்பட உள்ளது.

 

மதுரை மாநாட்டு மையம் – தமுக்கம் (Madurai Convention Centre)

மதுரை மாநகராட்சி சார்பில் பொலிவுறு நகரத் திட்டத்தின்(Smart City) கீழ், தமுக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் ரூ.47 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "மதுரை மாநாட்டு மையம்" (Madurai Convention Centre) மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. 

இம்மையத்தில் முதல் நிகழ்வாக அமைந்த 2022 புத்தக கண்காட்சியினை செபடம்பர் மாதம் 23ஆம் தேதி நான் திறந்து வைத்தேன். 

 

காலை உணவுத் திட்டம்

நீதிக்கட்சி ஆட்சியில் மதராஸ் மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் வந்த தலைவர்களால் அத்திட்டம் மேம்படுத்தப்பட்டு இன்றுவரையிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது மதிய உணவுத் திட்டம். அதன் பலன் தான் இன்று ஏழை வீட்டுப் பிள்ளையும் கல்வி கற்று உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கும் நிலை. 

அந்தத் திட்டத்தின் நீட்சியாக உருவானதுதான் காலை உணவுத் திட்டம். ஏழை மாணவர்கள் காலை உணவை உண்ணாமல் அக்கல்விக்கூடம் வருகிறார்கள் என்ற ஆய்வின் அடிப்படையில் காலை உணவும் பள்ளியில் வழங்கப்படும் என அறிவித்தார் முதல்வர். அந்தத் திட்டத்தின் தொடக்கம் நம் மத்திய தொகுதியில் அமையப்பெற்றதை எண்ணி மகிழ்ந்தேன். 

நமது மதுரை மத்திய தொகுதியில் வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் ஆதி மூலம் பள்ளியில் அத்திட்டம் தொடங்கப்பட்டது. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அத்திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவச் சிறார்களோடு உணவு உண்டு மகிழ்ந்தார்.

 

சமுதாய வளைகாப்பு விழா.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டேன்.

மக்கள் நலன் சார்ந்த சிந்தனை, மனிதநேயம், இரக்கம் ஆகிய மூன்று பண்புகளின் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். கர்ப்பிணித் தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருக்க அவர்களுக்குச் சரியான முறையில் ஊட்டச்சத்து கிடைத்திட வழி செய்யும் வகையில்  இவ்வகை விழாக்களை அரசு நடத்துகிறது.  நம் பண்பாட்டு அடையாளமாக இவ்விழா விளங்குவதும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து இவ்விழாவில் பங்கேற்பதை எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான, நெகிழ்வான ஒன்றாகக் கருதுகிறேன்.

 

பெட்டி செய்தி

பார்வதியின் கண் பார்வையில் நல்ல முன்னேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானையின் கண்களில் உண்டான வெண்புரையை நீக்குவதற்கான முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை, கண்காணிப்பு, எனது பரிந்துரையில் பேரில் வந்த தாய்லாந்து மருத்துவர்களின் வழிகாட்டுதலின் பலனாக தற்போது பார்வதியின் கண்களில் வெண்புரை குறைந்து பார்வைத் திறன் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் எளிதில் அடையாளம் கண்டு தனது துதிக்கையினை என்னை நோக்கி நீட்டுகிறது. வயது காரணமாக கொஞ்ச உடல் தளர்ந்தாலும் அதன் நினைவுகள் மங்கவில்லை.

 

செஸ் ஒலிம்பியாட் 

விளையாட்டு மேம்பாட்டுக்காகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். அவ்வகையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் ஒரு மிகச்சிறந்த நிகழ்வாகும்.

தமிழ்நாடு முழுவதும் அதற்கான வரவேற்பு நிகழ்வை இன்னும் சிறப்பாக்கியது. தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்சென்ற தொடர் ஜோதியை மதுரையில் பெற்று, வீரர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி அனுப்பினேன்.

 

மக்கள் குறை தீர்ப்பு

தொகுதி மக்கள் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கைகளைப் பெற்று அதன் மேல் நடவடிக்கை எடுத்திடும் வகையில் பல வழிமுறைகளை உருவாக்கியுள்ளேன்.

மகபூப்பாளையம் பகுதியில் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மற்றும் எனது இல்ல வளாகத்தில் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

16 வார்டுகளில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே 25 புகார் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் எனது குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண் 7305519999, வாட்சப், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com,  QR code மூலமாகவும் எந்த நேரமும் புகார்களையும், கோரிக்கைகளையும் அளிக்க வழி செய்துள்ளேன்.

புகார் மற்றும் கோரிக்கை கடிதங்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டு அதன் தகவல்களைச் சேகரித்து அதன் மீது தொடர் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை வகுக்க இயலும்.

நன்றி

 

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. வருவாய் பெருக்கும் வழிகளையும், கடன்களைக் குறைக்கும் வழிகளையும் ஆராய்ந்து வருகிறேன். ஆரோக்கியமான வழியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வருகிறேன்.

அதே சமயம் என்மீது அளவற்ற பாசமும் அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள தொகுதி மக்களுக்குப் பணியாற்றுவதே என் தலையாயக் கடமையாகக் கருதுகிறேன். அந்த வகையில் பல புதிய திட்டங்கள், நன்மைகள் தொகுதி மக்களுக்குக் கிடைத்திடும் வகையில் என் பணியை அமைத்துக்கொண்டு நடைபோடுகிறேன்.

தொடர்ந்து உங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் பணியாற்றுவேன். நன்றி.

 

நன்றி. 

தங்கள் அன்புள்ள 

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.