தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் 100% கணினிமயமாக்கப்பட்டிருப்பதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Published Date: July 19, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் 100% கணினிமயமாக்கப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். நபார்டு வங்கியின் 44வது நிறுவன நாள் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பங்கேற்று பேசியதாவது:

கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு நபார்டு வங்கி முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக கிராமப்புற விவசாயிகளுக்கு வேளாண்மைக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து அதிக வருமான ஈட்ட வழிவகை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளது. 

நான் நிதி அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் கணினிமயமாக்கும் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினேன். அதன் விளைவாக தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் 100% கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நபார்டு வங்கி மூலம் ரூபாய் 2800 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று இருப்பது பாராட்டத்தக்கது என்றார்.

நபார்டு வங்கி முதன்மை மேலாளர் ஆனந்தன் பேசுகையில், நபார்டு வங்கி தமிழக வளர்ச்சிக்காக ரூபாய் 56 ஆயிரம் கோடி அளித்துள்ளது. குறிப்பாக ஊரக கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 38 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2025 -2026 ஆம் நிதியாண்டுக்கான நபார்டு வங்கியின் செயல்திறன் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சீனிவாசன் எம்.எஸ். சுவாமிநாதன், ஆராய்ச்சி மைய தலைவர் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Media: Dinamani