தகவல் தொழில் நுட்பத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் செயற்கரிய பணியினை முன்னெடுத்து அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவடையும் இந்தத் தருணத்தில் அவர் வழியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து பல தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நமது அரசு செயல்படுத்தி வரும் முன்னோடித் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்பு வாய்ந்த நமது அரசில் அமைச்சராகப் பங்கெடுத்து மாண்புமிகு முதல்வர் அவர்களின் பேராதரவோடு தகவல் தொழில் நுட்பத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் செயற்கரிய பணியினை முன்னெடுத்து அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
அதுமட்டுமன்றி மதுரை மத்தியத் தொகுதி மக்களான உங்களுக்கு நான் பொறுப்பு வகிக்கும் துறையின் வழியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நான் எண்ணற்ற பணிகளைச் செயல்படுத்தியும் வருகிறேன். அந்த வகையில் கடந்த ஜூன் 2024 முதல் நவம்பர் 2024 வரையிலான எனது 6 மாத கால செயல்பாட்டு அறிக்கையினை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்திய திட்டப்பணிகள்.
நமது மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். மக்களுக்குத் தேவையான சாலை, தண்ணீர், கழிப்பறை, பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
கடந்த ஜூன் 2024 முதல் நவம்பர் 2024 வரையிலான 6 மாத காலத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகளின் விவரம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளில் ரூ.30 லட்சத்தில் கூடுதல் கழிப்பறை கட்டிடங்கள்
மதுரை மத்தியத் தொகுதி, மதுரை மாநராட்சி வார்டு 52 மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரம் பூங்கா அருகிலும், தெற்கு கோபுரம் பழைய எஸ்.பி அலுவலகம் அருகிலும் இரு இடங்களில் 2 கழிப்பறை வளாகங்களை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
அன்று தெற்கு சித்திரை வீதியில் 10 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கீழச்சித்திரை வீதியில் 20 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய கழிப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு அதனை கடந்த 18.06.2024 அன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
1. வார்டு 76, மேலவாசல் பகுதியில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையக் கட்டிடடம் கட்டி கடந்த 18.06.2024 அன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
2. வார்டு 76, திடீர் நகர்ப் பகுதியில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலைக் கட்டிடடம் கட்டி கடந்த 18.06.2024 அன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
3. வார்டு 61, எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய கூடக் கட்டிடடம் கட்டி கடந்த 04.08.2024 அன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
4. வார்டு 56, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கலை அரங்க மேடையினை அமைத்து அதனை கடந்த 12.09.2024 அன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
5. 56, கரிமேடு சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி பள்ளியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை கட்டிடத்தை கடந்த 12.09.2024 அன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
6. சிம்மக்கல் பகுதி, வார்டு 55, கீழ அண்ணா தோப்பு பகுதியில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை கட்டிடத்தை கடந்த 13.11.2024 அன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான திராவிடமாடல் அரசு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட ஆதரவற்ற விளிம்பு நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கான புதிய திட்டங்களை வகுத்து சமூகத்தில் அம்மக்களை தலைநிமிரச் செய்து வருகிறது. அவற்றுள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை மட்டுமன்றி ஏழைப்பெண்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி உள்ளிட்ட தொழில் உபகரணங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மத்திய தொகுதி மக்களுக்காக எனது அலுவலகத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு எனது சட்டமன்ற அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம் மூலமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு, வருவாய்த்துறை அலுவலகர்களிடம் முறையாகச் சமர்ப்பித்து எவ்வித இடையூறுமின்றிப் பயனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற்றுத் தருகிறோம்.
இது தவிர எனது சொந்த நிதியின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
மேலே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதை தவிர கல்வி, மருத்துவம், வாழ்வாதார உதவி என கோரும் தகுதியானவர்களை கண்டறிந்து நிதி உதவி மற்றும் தேவைகளை நிறைவேற்றி வருகிறேன்.
அரசு வழங்கும் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, அரசு வழங்கும் சான்றிதழ்களை அரசு அலுவலகங்களுக்குச் சென்று வாங்கும் பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்க மக்கள் வாழும் அவரவர் பகுதியிலேயே விண்ணப்பித்துப் பெறுவதற்கு ஆங்காங்கே இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-21 காலக்கட்டத்தில் நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் தொடங்கி எனது சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதி மக்களுக்கு இலவச சேவையை அளித்து வருகிறேன்.
இதுவரை வழங்கப்பட்ட சேவைகளில் பட்டியல், உங்கள் பார்வைக்கு…
சமூக நீதிக்காகவும் சமுதாய சமத்துவத்துக்காகவும் கல்வியை அடிப்படையாக வைத்து திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேல் திட்டமிட்டு சட்டங்களை உருவாக்கி அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் உயரிய நோக்கத்துடன் 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்" பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 118 கல்லூரிகளில் 5699 பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர்.
அதேபோல் அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் அவர்களது உயர்கல்வித் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்வதற்கும் "தமிழ்ப்புதல்வன்” எனும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 09.08.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று, உயர்கல்வி பயில வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்தொகையானது, நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் 13 பொறியியல் கல்லூரிகள், 33 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 2 மருத்துவக் கல்லூரிகள், 7 தொழிற்பயிற்சி நிலையங்கள், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி, ஒரு பல்கலைக்கழகம், 27 பார்மசி மற்றும் 1 வேளாண்மைக் கல்லூரி உட்பட 97 கல்லூரிகளில் முதற்கட்டமாக 9779 மாணவர்கள் பயன்பெற்று உள்ளனர். மேலும் வரும் காலங்களில் கூடுதலாக மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற திட்டங்களைத் தீட்டுவதை முக்கியமான பணியாகக் கருதுகிறார். சுமார் 2.7 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பலன் அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்திட, மதுரையில் 210 மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கி நான் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் எதிர்பாராத தீ விபத்துக்களைத் தடுக்க, திடீர் நகரில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்க வேண்டி இருந்தது. போக்குவரத்து நெருக்கடியான நேரத்தில் கோயில் பகுதிக்கு தீயணைப்பு வாகனம் துரிதமாக வருவதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோயிலின் கிழக்குப் பகுதியில் அம்மன் சன்னதிக்கு செல்லும் கோபுரத்திற்கு வடக்கிலுள்ள வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்தால் சேதமடைந்தது. அப்போது, தீயணைப்பு வீரர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவசர நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட கோயில் பகுதியில் தீயணைப்பு நிலையம் அவசியம் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனை வலியுறுத்தி அப்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் உடனடியாகக் கோவில் இணை ஆணையருக்குக் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு, இதனை எச்சரிக்கையாகக் கொண்டு விபத்து மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினேன்.
இதன் தொடர்ச்சியாக, மீனாட்சி அம்மன் கோயிலுக்கென பிரத்யேக தீயணைப்பு நிலையம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, கோயில் மேற்கு கோபுரம் அருகே திடீர் நகர் தீயணைப்பு நிலையக் கட்டுப்பாட்டில் தற்காலிகமாக செயல்படும் வகையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வட பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான தொடக்கப் பணிகளை விரைவுபடுத்தினேன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான பிரத்யேக புதிய தீயணைப்பு நிலையம் ரூ.1.17 கோடியில் 3,053 சதுரடி பரப்பளவில் அமைத்திட முடிவெடுத்து ஒரே நேரத்தில் இரு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடம், வீரர்கள் தங்கும் அறைகள், ஓய்வறைகள் என தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதனைத் கடந்த 07.10.2024 அன்று திறந்து வைத்தார். மதுரை மத்தியத் தொகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் பகுதியில் பிரத்யேகமாக எனது முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தீயணைப்பு நிலையம் கோயில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுத்திட வழி செய்யும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 25-ம் தேதி முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் 2-ம் கட்டத்தினை, மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்திடச் சென்றபோது, 7-ம் வகுப்பில் பயின்று வரும் விஷ்வா என்ற மாணவரிடம் நான் உரையாடினேன். அப்பொழுது ஊட்டச்சத்து குறைபாட்டினால் அம்மாணவர் வயதிற்கேற்ற சராசரி உடல் எடையை விடக் குறைவாக இருப்பதை அறிந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்தியிருந்தேன். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைக் கடந்த 11 மாதங்களாக அம்மாணவருக்கு வழங்கி தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்து கண்காணித்து வந்தேன். தற்போது மாணவர் விஷால் உரிய எடையினை எட்டிய நிலையில், கடந்த 28.07.2024 அன்று அம்மாணவனுக்கு புதிய சைக்கிள் ஒன்றைப் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினேன்.
மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்கும் வகையில், புதிய தாழ்தள சிறப்புப் பேருந்துகளை கடந்த 27.10.2024 அன்று நமது மதுரை மத்திய தொகுதியில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தேன். 9 புதிய பேருந்துகள் ரூபாய் 8.24 கோடி மதிப்பீட்டில் மதுரை நகருக்குள் இப்பேருந்துகள் சுற்றி வரும்.
இப்பேருந்தின் முக்கிய அம்சம் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்கும் வகையில் இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன் அதிலிருந்து சறுக்குப்பாதை உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறியவுடன், பேருந்தில் அதன் உரிய இடத்தில், பெல்ட்டால் வீல் சேர் நகராமல் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
1. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் திருவிழாக்களின் போது தேரோட்டம் நடைபெறும். அவ்வாறு மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் தேரோட்டம் நடைபெறும் போது, பெரும் இடையூறாக உயரே செல்லும் மின் கம்பிகள் இருக்கும். எனது முயற்சியினால், தமிழ்நாடு மின்வாரியம் மூலம் இப்பகுதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகளை புதைவட மின்கம்பிகளாக அமைத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சித்திரை வீதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தேன்.
2. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டிடத்தை, ஆய்வு செய்தேன். விரைவில் பணிகள் நிறைவேற்றிட வலியுறுத்தினேன்.
3. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலைச் சுற்றியுள்ள தெற்கு சித்திரை வீதி மற்றும் மேலக்கோபுர வீதியில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, அதனைத் துரிதப்படுத்திடவும், அவ்வீதியில் கழிவுநீர் சாலையில் செல்லாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தியுள்ளேன்.
4. கீழச்சித்திரை வீதி மீனாட்சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு அதன் பராமரிப்பை மேம்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளேன்.
5. மதுரை மத்தியத் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 52, அவ்வை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், NNT சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.124 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பள்ளிக் கட்டிடக் கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தேன்.
6. பழமையான ஆரப்பாளையம் நீரேற்று நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியினை ஆய்வு செய்தேன். புதிய திட்டங்களை அங்கு செயல்படுத்துவதற்காக மதுரை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளேன்.
மதுரை மத்தியத் தொகுதியில் நலிவடைந்த, வாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொன்றும், அக்குடும்பத்தில் உள்ள பெண்களின் மூலம் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 வருமானம் ஈட்டிட இத்திட்டம் வழி செய்யும் வகையில் இத்திட்டத்தைத் தொடங்கினேன். இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் நான் தொடங்கி வைத்த ஒருங்கிணைந்த தையற் தொழில்கூடத்தில் ஓராண்டு தையல் தொழில் முனைவோர் பயிற்சியினை 11 பெண்கள் முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
மகளிருக்கு இலவசமாக நவீன தையல் இயந்திரம்:
பெண்கள் தாங்களே ஒரு தொழிலைத் தொடங்கவும், தொழிலை வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், சமூகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க உதவிட முடியும் என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
அந்த வகையில், இத்திட்டத்தில் இணைந்து வருமானம் ஈட்டியதோடு தொழில் முனைவோருக்கான ஓராண்டு பயிற்சியினை நிறைவு செய்த மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த மகளிர் 11 பேருக்கு தனித்து தையல் தொழில் செய்வதற்கு மதுரை ராஜ்மஹால் சில்க்ஸ் நிறுவனம் அவர்கள் தங்கள் CSR நிதியில் வழங்கிய நவீன தையல் இயந்திரங்களை கடந்த 13.11.2024 அன்று இலவசமாக வழங்கினேன்.
இனி அவர்கள் தனித்துத் தையல் தொழில் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அதை விற்பனை செய்து பொருளீட்ட அத்தனை நடவடிக்கைகளும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள்.
1) AVGC - XR கொள்கை கலந்தாய்வுக் கூட்டம்:
சென்னை தலைமைச் செயலகத்தில், எனது தலைமையில், தமிழ்நாடு மாநில AVGC - XR கொள்கை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 29.07.2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த் IAS , AVGC - XR துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்துறை, சட்டத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
https://x.com/OfficeOfPTR/status/1818535303256150426
2) திறன் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
மாணவர் சமூகம் பெருமளவில் பயனடையும் வகையில் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 17 மதிப்புமிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையின் ICT ACADEMY நிறுவனம் கடந்த 30.07.2024 அன்று மேற்கொண்டது.
https://x.com/OfficeOfPTR/status/1818584560742920268
3) BRIDGE24 மாநாடுகள்:
பட்டதாரி இளைஞர்களுக்கு சரியான வெளிவைப்புகள் கிடைக்கச்செய்வதை நோக்கமாகக் கொண்டு, உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் ICT அகாடமி கோவை [20/08/2024], பூனே [23/08/2024], மதுரை [30/09/2024] மற்றும் ஹைதராபாத் [14/11/2024] நகரில் ஒருங்கிணைத்த BRIDGE 24 எனும் மனித வளம், வளர்ச்சி & அணுகல் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினேன்.
Cbe: https://x.com/ptrmadurai/status/1826850851085791262
Pune: https://drive.google.com/drive/folders/1lhLqBxKKCoJy4E3yZBjmAWnigaCeAfRd?usp=drive_link
Hyd: https://www.facebook.com/share/p/18UTaN9fuS/
Mad: https://drive.google.com/drive/folders/18q8vUcsIu2yqE2t6RuyqTD5iOHzEoDA_?usp=drive_link
4) ”கணித்தமிழ்’ மென்பொருள்:
கணிணித் துறையில் தமிழின் பயன்பாட்டை பெருக்குதல் மற்றும் இளம் தலைமுறையினர் பிழையின்றி தமது தாய்மொழியை எழுதுவதற்கு உதவுதல் ஆகிய நோக்கங்களுக்காகத் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கிய- ‘கணித்தமிழ்’ மென்பொருளையும், ‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்’ புத்தகத்தையும் கடந்த 27.08.2024 அன்று வெளியிட்டேன்.
https://drive.google.com/drive/folders/11AOHHGao_8aFrSGnM8tir0DOVMH5hp-K?usp=drive_link
5) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நீடித்த வளர்ச்சிக்கான கல்வி மையம்:
மதுரை தொகுதி மாணவ, மாணவியர் நீடித்த வளர்ச்சி தொடர்பான கல்விப்புலத்தில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் ICT அகாடமி நிறுவனம் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவியுள்ள HONEYWELL CENTER FOR SUSTAINABLITY STUDIES நீடித்த வளர்ச்சி தொடர்பான கல்வி மையத்தினைத் கடந்த 03.09.2024 அன்று திறந்து வைத்தேன்.
https://drive.google.com/drive/folders/1mT2kPfYafA1z2Tu_hyaX0km7Ylyj13kL?usp=drive_link
6) Connect Madurai & Coimbatore- 2024:
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), தகவல் தொழில்நுட்பத்துறையின் எல்காட் நிறுவனத்தின் ஆதரவுடன் “வளர்ச்சிக்கான மாற்றத்தை வழங்கக்கூடிய தொழில்நுட்பத்தைத் தழுவிக்கொள்ளுதல்” என்கிற தலைப்பில் 26/09/2024 அன்று கோவையிலும், “தொழில்நுட்ப சூழலை இணைத்தல்” என்ற தலைப்பில் 03/10/2024 அன்று மதுரையிலும் ஒருங்கிணைத்த Connect 2024 மாநாடுகளைத் துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினேன்.
https://www.facebook.com/share/p/1EKRNZTB9s
https://drive.google.com/drive/folders/1BVP8D-rTArnUuNArIvbipFijlp_FTMEC
7) கோவை விளாங்குறிச்சி தகவல் தொழில்நுட்பப் பூங்கா:
தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கான இடத்தேவையை கருத்தில்கொண்டு, கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 09.11.2024 அன்று திறந்துவைத்தார்.
https://x.com/ptrmadurai/status/1854112551736340862
8) iAccelerate : தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் புத்தாக்க திறன் வளர் மையமான iTNT hub இன் “iAccelerate” எனும் புத்தாக்க நிறுவனங்களுக்கான நான்கு மாதப் பயிற்சி திட்டத்தினைத் கடந்த 22.11.2024 அன்று தொடங்கி வைத்தேன்.
https://x.com/TNDIPRNEWS/status/1862076151340101999
சட்டப்பேரவையில் 28/06/2024 அன்று நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத் துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் உரையில் வேலை வாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி உள்ளிட்டவற்றில் தகவல் தொழில்நுட்பத்துறை மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளை எடுத்துரைத்தேன்.
மேலும் அரசு கேபிள் நிறுவனம் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் முறையற்ற மேலாண்மையால் அரசு கேபிள் நிறுவனத்தில் நிதிநிலை மற்றும் செயல்பாடுகள் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை குறிப்பிட்டு, நமது கழக ஆட்சியில், அரசு கேபிள் சேவைக்கு புத்துயிர் அளித்து விரிவுபடுத்தி மேலும் செயல் திறனுடன் இயங்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விளக்கினேன்.
● பெருகிவரும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் இடவசதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் பெருங்குடி தொழில் பேட்டையில் 3.60 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
● ஊரகப் பகுதிகளில் அத்தியாவசிய அரசு சேவைகளை மக்கள் எளிதாக அணுகி பெற்றிட, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அதிவேக இணைய அலைக்கற்றை வசதியைக் குறைந்த கட்டணத்தில் வழங்கும்.
● குறைந்த கட்டணத்தில் இணையதள தொலைக்காட்சி சேவைகளை, TANFINET நிறுவனத்தின் கண்ணாடி இழை கம்பி வடம், இணைய சேவைகள் மற்றும் பிற இணைய சேவைகள் நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் வழங்கும்.
● தமிழ்நாடு ஆழ்நிலை தொழில்நுட்பக் கொள்கை (Tamilnadu Deep Tech Policy) உருவாக்கப்படும்.
● தமிழ்நாட்டை அறிவுசார் சொத்துரிமையின் தலைநகராக உருவாக்கிடவும், அறிவுசார் சொத்துரிமை வணிகமயமாக்கலை ஊக்குவிக்கவும் “தமிழ்நாட்டில் புத்தமை” (IN2TN) எனும் மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்.
● அரசு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு திறன் பயிற்சி: ICTACT நிறுவனம் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு தனது இலவச உறுப்பினர் சேவை மூலம் 16 திறன் பயிற்சி சேவைகளை வழங்கும்.
● கணித்தமிழ் தொடர் சொற்பொழிவு : கணிணித் தமிழை மாணவர்கள் ஆர்வலர்களிடையே கொண்டு சேர்க்க தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாதம் தோறும் கணித்தமிழ் தொடர்பான புதிய சொற்பொழிவுகள் நடத்தப்படும்.
● மூன்றாண்டுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்தப்படும்.
https://x.com/ptrmadurai/status/1808149533865697797
https://x.com/ptrmadurai/status/1806614166704374169
1. சென்னையில் நடைபெற்ற ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் 6வது வருடாந்திர தலைமைத்துவ கருத்தரங்கில், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன் (08.06.2024).
https://x.com/OfficeOfPTR/status/1800030482182045978
2. காக்னிசென்ட் நிறுவனம் ஒருங்கிணைத்த 'Cognizant Horizons 2024' மாநாட்டில் கலந்துகொண்டு, அந்நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் திரு. ராஜேஷ் நம்பியார் அவர்களுடன் 'Revving up TN's Tech Growth' எனும் கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்று கருத்துரை வழங்கினேன் (13.06.2024).
https://x.com/OfficeOfPTR/status/1802626352212054379
3. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திய MSSRF ‘Hunger Free World’ மாநாட்டில் கலந்து கொண்டேன் (07.08.2024).
https://drive.google.com/drive/folders/1nR_ee2tW0hvazgFCBMEhln3IMZMDwu-h?usp=drive_link
4. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்திய “IE Thinc, Our cities” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘Urban Planning in the Era of Climate Change’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினேன் (12.08.2024).
https://drive.google.com/drive/folders/1RjDnWIiRLyVdMC3z1bPkcG0Qt1fcCblO?usp=drive_link
5. நமது சுதந்திர தின விழா அன்று Zifo நிறுவனமும் Quiz Federation of India நிறுவனமும் இணைந்து நடத்திய “Zifo Open Quiz 2024” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன் (15.08.2024).
https://drive.google.com/drive/folders/1K5LRsbZpInhKpbDl_JJzGa7jzXjr1sWL?usp=drive_link
6. O.P. Jindal Global University நடத்திய “India-US Higher Education Forum” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவின் வளர்ந்து வரும் மனிதவள மூலதனம் குறித்தும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தேன். அமெரிக்க உயர்கல்விமுறையின் சிறப்பம்சங்களான கல்வித்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் இடையே பாலமாகச் செயல்படும் திறன்களைத் தக்க வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை எடுத்துரைத்தேன் (13.09.2024).
https://x.com/ptrmadurai/status/1858347695389155501
7. தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் ICT அகாடமியுடன் இணைந்து elets அமைப்பு சென்னையில் ஏற்பாடு செய்திருந்த "World Education Summit-2024 " எனும் தலைப்பிலான 30வது கல்வி குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதோடு, சிறப்பாகச் செயல்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கினேன் (24.09.2024).
https://www.facebook.com/share/p/1AhRAvWjTv/
8. சென்னையில் நடைபெற்ற The Asia HRD Congress சர்வதேச மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினேன் (09.10.2024).
https://drive.google.com/drive/folders/1V4ExhgWqfyH9bOI6k2KtTtMP5wBNPHuA?usp=drive_link
1) லயோலா கல்லூரியில் பொறியியல் துறையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நடந்த நூற்றாண்டு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியினைத் தொடக்கி வைத்தேன் (05.08.2024).
https://drive.google.com/drive/folders/11q-TEKNlzVd1qOqJJ9aE-7G3Oc82AClr?usp=drive_link
2) வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சுகாதாரம் மற்றும் கல்வியில் தமிழ்நாட்டில் அழியாத முத்திரையைப் பதித்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மிஷனரிகளின் பாரம்பரியத்தை எடுத்துரைத்தேன். சுகாதார பராமரிப்பில் AI ன் பங்களிப்பு மற்றும் தரவு உந்துதல் பகுப்பாய்வு போன்ற கண்டுபிடிப்புகள் மருத்துவத் துறையில் ஏற்படுத்தி வரும் புரட்சி பற்றியும் எடுத்துரைத்தேன் (23.11.2024).
https://www.facebook.com/share/p/14mtd1v7xQ/
3) இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி டெல்லியிலுள்ள O.P. Jindal Global University நடத்திய கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிதரூர் அவர்களுடன் கலந்து கொண்டு “The Constitution & the Idea of India: A 75 year journey” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினேன். ஜனநாயகத்தின் சிறப்பையும் அது தன் சுயத்தை இழக்காமல் எவ்வாறு பரிணமிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன் (24.11.2024).
https://www.facebook.com/share/v/15iGhUyuiE/
1) சென்னைக்கான ரஷ்ய துணைத் தூதர் திரு ஓலெக் அவ்டீவ் அவர்களின் அழைப்பை ஏற்று, ரஷ்ய துணைத் தூதரகம் சார்பில் நடைபெற்ற ரஷ்ய தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன் (11.06.2024).
https://x.com/OfficeOfPTR/status/1801209449832419599
2) இந்தியாவுக்கான பின்லாந்து தூதர் மேதகு திரு.கிம்மோ லாஹ்டெவிர்டா தலைமையிலான பின்லாந்து தூதுக்குழுவினரை, கௌரவத் தூதர் திரு. சிதம்பரம் மற்றும் ஆலோசகர் திரு.சன்னா ஓரவா ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன். மின் ஆளுமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் பின்லாந்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து எங்களது பேச்சு வார்த்தைகள் அமைந்திருந்தன (12.06.2024).
https://x.com/ptrmadurai/status/1802561488592437577
3) பிரெஞ்சு தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பிரெஞ்சு குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன் (12.07.2024).
https://drive.google.com/drive/folders/176RfgEWWHk8ataXTZYW8XlIuG6sQ7L8T?usp=drive_link
4) சென்னையிலுள்ள IIT ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாண ஆளுநர் திருமதி.மிசல் லூகேன் கிரிஷம் அவர்கள் மற்றும் அவரது தலைமையிலான தூதுக் குழுவினருடனான வட்ட மேசை அமர்வில் கலந்துகொண்டேன். தமிழ்நாடு - நியூ மெக்சிகோ இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் பரஸ்பர வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதிலும் எங்கள் விவாதங்கள் அமைந்திருந்தன (05.08.2024).
https://drive.google.com/drive/folders/1D9RHA35IWxprmPzXyEZLOSGUnc4C8GIE?usp=drive_link
5) தமிழ்நாடு தொழில்நுட்ப மைய (iTNT Hub) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து வருகைபுரிந்த டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய தூதுக்குழுவினரை (Austrade Digitech Delegation) சந்தித்து கலந்துரையாடினேன். சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய நாட்டின் துணைத் தூதர் திருமதி. சிலாய் ஜாகி, மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் திரு. அப்துல் எக்ரம் ஆகியோர் உடன் இருந்தனர் (22.11.2024).
https://x.com/TNDIPRNEWS/status/1862012400377176408
https://drive.google.com/drive/folders/1yRJrHyRfagPYcVlUcrVoUSgGbYEkvxMf?usp=drive_link
உலகின் பெரும்பாலான நாடுகளைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் முதன்மைப் பிரதிநிதிகள், அரசு நிர்வாகிகள், புதிய தொழில் நிறுவனங்கள் பங்கு பெறும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாடான GITEX இல் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டு, பல்வேறு கருத்தரங்குகளில் சிறப்புரை வழங்கினேன் (17.10.2024).
https://drive.google.com/drive/folders/1AZMIKkwq3Ynur_lIiclf01UEyW6UxHgw?usp=drive_link
சிங்கப்பூரில், உலகளாவிய பொருளாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த “Singapore Fintech Festival” நிகழ்ச்சியில் பங்கேற்று “ CMPD Policymaker’s Keynote : Innovate, Integrate, Elevate- Policies for a Digital Economy” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினேன் (06.11.2024).
https://www.facebook.com/share/p/18MwHRGj8d/
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் “Economic Reforms and Inclusive Growth” என்ற தலைப்பிலான கருத்தரங்க அமர்வில் பங்கேற்றேன். உலகளாவிய வாய்ப்புகளுக்கு நமது இளைஞர்களைத் தயார்படுத்தும் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துகொள்ளும் நிர்வாக முறையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமான எனது கருத்துக்களை பதிவு செய்தேன் (10.11.2024).
https://www.facebook.com/share/p/1EDsHstc9k/
தலைமுறைகள் தாண்டி நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட, மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்துக்கொள்ள முழுமுதற் காரணமானவர் என் தாத்தா தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள் ஆவார்.
நீதிக்கட்சியின் முக்கிய தலைவராக, முன்னாள் சென்னை மாகாண முதல்வருமான என் தாத்தா தமிழவேள் பி.டி. ராஜன் அவர்களின் 50 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது வரலாற்றை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட “தமிழவேள் பி.டி. ராஜன்- நினைவுகளில் 50” என்ற டிஜிட்டல் நூலினை கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 25.09.2024 அன்று வெளியிட , கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் முதல் பிரதியினை பெற்றுக் கொண்டார்.
விரைவில் இப்புத்தகம் அச்சு வடிவில் கூடுதல் தரவுகளோடு அச்சுப் பதிப்பாக வெளியிடப்படவுள்ளது.
https://x.com/mkstalin/status/1838838709652984158
நீண்ட நெடிய வரலாறு கொண்ட திராவிட இயக்கத்திற்கு ஓர் எழுச்சியைத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிமிகு அணி எனில் அது இளைஞரணி தான். அந்த அணியினை உருவாக்கியதில் பெரும் பங்காற்றியவர் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவார். அவருக்கு பின் அந்த அணியினை மிகவும் ஆக்கத்தோடும், ஆற்றல் மிக்கதாகவும் திறம்பட நடத்தி செல்வதில் அருமை சகோதரர் அவர்களின் பங்கு அளப்பறியது. கழக ஆட்சியில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறையில் அவர் ஆற்றிய பணிகள் மகத்தானது. தொடர்ந்து அவர் துணை முதல்வர் பொறுப்பேற்று தமிழ்நாட்டு மக்கள் பாராட்டும் வண்ணம் சிறப்பாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அவரது 48-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழாக்களை நடத்தினோம்.
• வார்டு 59 மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை மாநகர் மாவட்ட அயலக அணி சார்பாக 837 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினோம்.
• வார்டு 59 மஹபூப்பாளையம் Y M C A சிறப்பு பள்ளியில் எல்லிஸ் நகர் பகுதிக் கழகம் சார்பாக நாற்காலிகள், தலையணை, தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.
• வார்டு 61 S.S காலனி 61வது வட்டக் கழகம் சார்பாக மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்குப் புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.
கோரிப்பாளையம் பாலம் கட்டும் பணி விரைவு பெறுகிறது
மதுரையின் இதயப்பகுதியான கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் வைகை ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான மேம்பால கட்டுமானப் பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விரைந்து நடைப்பெற்று வருகிறது.
அப்பல்லோ சந்திப்புப் பாலம்
கடந்த ஆண்டு மதுரை - தொண்டி சாலையில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த பணிகள் விரைவு பெற்று மேலமடை சந்திப்பில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
வண்டியூர் கண்மாய் மேம்பாட்டு பணிகள்
மதுரை வண்டியூர் கண்மாயை மேம்படுத்தி அங்கு முன்பு இருந்த பூங்கா மற்றும் வண்டியூர் கண்மாயை ரூ.99 கோடியில் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்திச் சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற மகத்தான திட்டங்கள் மூலம் மக்களைத் தேடிச் சென்று உதவி வருகிறது. அதே கொள்கையை நான் பொது வாழ்க்கைக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறேன். எனது அலுவலகத்தைத் தேடி மக்கள் வருவதைக் குறைக்கும் வகையில் நான் ஆங்காங்கே சில ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்.
மதுரை மகபூப்பாளையத்தில் எனது மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இலவச இ-சேவை மைய வசதியோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனது இல்ல வளாகத்தில் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மேலும் எனது குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண் 7305519999, வாட்சப், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com, இந்த அறிக்கையில் உள்ள QR code மூலமாகவும் எந்த நேரமும் புகார்களையும், கோரிக்கைகளையும் மக்கள் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தொகுதிக்குட்பட்ட 16 வார்டுகளில் 25 இடங்களில் புகார் பெட்டி நிறுவப்பட்டு அதன் மூலம் மக்கள் என்னைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பெறப்படும் புகார்கள் துறை ரீதியாக அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது தொடர் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் பணியாற்றிய பிறகு, எனது முன்னோர்கள் வழியில் சமூகநீதி காத்திட திராவிட இயக்கத்திற்கு என்னை அர்ப்பணித்திட வேண்டும் என்கிற ஆவலோடு, பொது வாழ்க்கைக்கு வந்த என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, அரவணைத்து, இரண்டு முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து தற்போது அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திய என் தொகுதி வாக்காளர் பெருமக்களாகிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் திறம்பட பணியாற்றி வருகிறேன். இந்தத் துறையின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டில் இந்தத் துறையினால் ஏற்படவுள்ள மாற்றத்திற்கும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறேன்.
நாடு போற்றும் திராவிட மாடல் அரசை வழிநடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்து மதுரை மாநகர் மேம்பட பல்வேறு பணிகளை செய்வதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் என்னை பணித்துள்ளார்.
மதுரை மக்களின் எண்ணங்களுக்கேற்ப, எனக்கு வாக்களித்த உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக என்றென்றும் பணியாற்றுவேன் என உறுதிபட கூறுகிறேன். நன்றி. வணக்கம்.
தங்கள் அன்புள்ள
பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன்.