Published Date: January 25, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளையும், எனது கோரிக்கையையும் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2016-ம் ஆண்டில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தபோது மதுரை மத்திய தொகுதிக்கான வாக்குறுதிகளாக நான் எதையும் முன்வைக்கவில்லை.
எனினும் வெற்றிபெற்று சட்டப் பேரவை உறுப்பினராகி தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வந்தேன்.
2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு, ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படும் என்ற 3 வாக்குறுதிகளை அளித்தேன்.
ஜன.21-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மதுரை மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.
அதில் மதுரை மத்திய தொகுதி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் இடம்பெறச் செய்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வரின் ஆதரவுடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியுடன் இணைந்து இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Media: Hindu Tamil