நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

Published Date: December 10, 2022

CATEGORY: CONSTITUENCY

சென்னை, டிச.9:-  தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீடு கொண்டுவரப்பட்டு,  அதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஅய்அய்)  சார்பிலான 12வது வருடாந்திர நிதிநிலை மாநாடு சென்னையில் 07.12.2022 அன்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு நிதிஅமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் முடிந்துள்ளன.  கொரோனா நோய்த் தொற்று,  கனமழை உள்பட பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தைச் சீராக வைத்துள்ளோம்.  வருவாய் பற்றாக்குறை ரூ.16,000 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 14வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம்.  கடந்த 15 மாதங்களில் 10பில்லியன் டாலர் முதலீட்டைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஃபின்டெக்’ போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்கள் மூலம் அதிக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாகக் குறைந்திருந்த ஜிடிபி வளர்ச்சி விகிதம் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.  அடுத்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின்  முதலீட்டை மூன்று மடங்காக அதிகரிக்கத்  திட்டமிட்டுள்ளோம்.  இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Media: Viduthalai