Published Date: January 8, 2022
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY
சட்டப் பேரவையில் நேற்று நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021-22ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது: -
2022ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை முன்வைக்கிறேன். துணை மதிப்பீடுகள் மொத்தம் ₹3.719.65 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. 2021-22ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டப் பேரவையில் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும், இத்துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும்.
2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கரும்பு வழங்க கூடுதலாக ₹887.66 கோடி அரசு அனுமதித்துள்ளது. கொரோனா காலத்தின் போது அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களின் நிவாரண நடவடிக்கையாக மளிகை பொருள் விநியோகத்தில் மீத தொகையான ₹132.59 கோடி அரசுஅனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் ₹1020.25 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. 15வது நிதிக் குழுவில் சுகாதார துறைக்கான மானியத்தை பயன்படுத்துவற்காக ₹805.93 கோடி அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் ₹300 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும். 25.10.2021 முதல் 14.11.2021 வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நட வடிக்கைகளுக்காக, அதன் தொடர்புடைய துறைகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ₹300 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 2ம் கட்டத்தின் உடனடி செலவினங்களை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பங்கு மூலதன தொகையாக ₹3 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டு துணை மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் ₹1000 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வளர்ச்சிபணி மற்றும் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் வழங்க தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு ₹418.61 கோடி அரசு அனுமதித்துள்ளது
துணை மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சிதுறையின் கீழ் ₹138.15 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலை நிலுவை தொகை வழங்க 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன் - பணமாக ₹182.14 கோடி அரசு அனுமதித்துள்ளது.
7.5 சதவீதம் முன்னுரிமை ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் கல்லுரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக ₹74.28 கோடி - அரசு அனுமதித்துள்ளது. 2021-22ம் ஆண்டில் செலுத்தக்கூடிய அனைத்து மாநில போக்குவரத்து நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்குவதற்கு அனைத்து மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு முன் பணமாக ₹ 97.75 கோடி அரசு அனுமதித்துள்ளது.
18,966 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு - மற்றும் அடுப்பு வழங்குவதற்கு ₹ 8.66 கோடி அரசு அனுமதித்துள்ளது. ஆரம்ப கட்ட செலவினங்கள் மேற்கொள்ள முன் பணமாக ₹7.15 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள் திருத்த வரவு செலவு மதிப்பீடுகளில் மொத்த செலவினத்தில் ஒரு சதவீதமாக உள்ளது..
Media: Dinakaran