அரசு கணக்குக்கு வரவேண்டிய தொகை ரூ2000 கோடி: நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

Published Date: November 1, 2021

CATEGORY: ECONOMY

அரசு கணக்குக்கு வரவேண்டிய தொகை ரூ2000 கோடி: நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

பல்வேறு ஆய்வுகள், திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசு கணக்கு ரூ2000 கோடி வர வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியது:

       கருவூல அமைப்புகளின் கண்காணிப்புக்கு வெளியேயுள்ள வங்கி கணக்குகளுக்கு அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவது பல்வேறு தரவுகள் சுட்டிக் காட்டப்பட்டன. அத்தகைய நிதிகளை கண்டறிய இரட்டை கணக்கெடுப்பு முறை தொடங்கப்பட்டது. இதனை கண்காணித்து செயல்படுத்த நிதி துறையின் மூத்த அதிகாரியின் கீழ் சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டது. நிதித்துறை சிறப்புச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் தலைமையிலான இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை செய்தது. 

      அரசுத்துறைகள் அரசால் நடத்தப்படும் சங்கங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் கருவூலத்திற்கு வெளியே இருப்பில் வைக்கப்பட்டிருந்த ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் மூலமாக இப்போதுவரை அரசின் கணக்குக்கு ரூ1946. 31 கோடி வரவேண்டியிருக்கிறது. இதுபோன்ற தொகைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

        முக்கிய திட்டங்களில் போலி:

     பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி இல்லாத நபர்கள் பிரிக்கப்படுவர். இதன் மூலமாக அரசுக்கு சேமிப்பு ஏற்படும். மேலும், நகை கடன் தள்ளுபடியிலும் பல்வேறு தவறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை சீர் செய்வதன் மூலமும் கணிசமான தொகை சேமிப்பாகும். இறப்புச் சான்றிதழ் களுடன் முதியோர் ஓய்வூதியத் தொகை பெறுவோர் ஒப்பிட்டு பார்க்கப்பட்டனர. அதில், இறந்த பலருக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டிருக்கிறது. 

      நகையை இல்லாமல் சில இடங்களில் பணம் அளித்துள்ளனர். தவறு செய்தோர் மீது முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 

       பொருளாதார நியாயத்துக்கு ஏற்ப, சமூக நீதி அடிப்படையில் தகுதியானவர்களுக்கு அரசு திட்டங்களை வழங்குவதை நோக்கமாகும்.  திமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதியானவர்கள் மட்டுமே முதியோர் ஓய்வூதியம் வழங்க முனைப்பு காட்டி வருகிறோம். அரசின் கருவூலத்தை தாண்டி வெளியே உள்ள  தொகைகளை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள நிதித்துறை சிறப்புச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் தலைமையிலான சிறப்பு குழுவின் காலம் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

     நிதிகள் மடைமாற்றம்: மானியக் கோரிக்கைகள் ஒப்புதல் அளித்த நிதிகளை வேறு செயல்பாடுகளுக்கு மாற்ற நிதித்துறையின் ஒப்புதலைப் பெறவேண்டும். இனி நிதித்துறையின் ஒப்புதலைப் பெறாமல் அதுபோன்ற மாற்றத்தை செய்ய முடியாது என்ற விதியைக் கொண்டு வரவுள்ளோம். பணம் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். 

      கடந்த 2015-16ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தின் போது தேசிய மற்றும் மாநில பேரிடர்  நிதிகள் மூலமாகரூ1, 800 கோடி பணம் வழங்கும் அதிகாரிகளிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகை செலவிடப்பட்ட விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     முன்னோட்டக் காட்சி: அரசின் கணக்குகள் சார்பில் வங்கிகள் உள்ள தொகை விவரங்களுக்கும், அரசுத் துறைகளில் உள்ள தகவல்களுக்கும் முரண்கள் அதிகமாக உள்ளன. ரூ2000 கோடி அளவுக்கு அரசு கணக்கு திரும்ப வர வேண்டி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வங்கி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். பணப்பரிவர்த்தனைக்கான  உரிமங்களை பெறவேண்டியுள்ளது. இந்தப் பணிகள் விரைந்து மேற்கொள்வோம். பயிர், நகைக்கடன்கள் தள்ளுபடி போன்ற பணிகளின் போது நிதித் துறையின் கீழ் உள்ள கூட்டுறவு தணிக்கைத் துறையும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுப்போம். இதன் மூலம் முறைகேடுகள் , தவறுகள் நிகழாமல் தடுக்கப்படும். 

    வருவாய் பற்றாக்குறை: மூலதன பணிகளுக்காக நிகழாண்டில் ரூ42,000 கோடி செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ 13,000 போடி அளவுக்கு செலவிட நடவடிக்கை எடுத்துள்ளோம். கடன் மற்றும் செலவினங்களை பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ 10,000 கோடி குறைவாக இருக்கும். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை நிச்சயம் குறைப்போம் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.  கிருஷ்ணன், சிறப்புச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Media: Dinamani