Published Date: February 3, 2024
CATEGORY: EVENTS & CONFERENCES

உத்தமபாளையம் : ஐ.டி. துறையில் தமிழகத்தில் இருந்து 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மாதந்தோறும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப் பள்ளி வைர விழாவில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசினார்.
ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளி, தொடக்க பள்ளிகளின் வைர விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் எம்.எஸ். பிராபகர் வரவேற்றார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராசன் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்து பேசியதாவது:-
எந்த ஒரு சமுதாயம் முன்னேற கல்வி வேண்டும். இன்று பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் , தமிழகத்தைப் போல் கல்வி கிடைப்பது வேறு எங்கும் இல்லை. சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பணியில் கிறிஸ்தவ அமைப்புக்கள,மிஷனரிகள் பங்கு அதிகம்.
தமிழகத்தில் 200 ஆண்டுகள் கடந்த கல்லூரிகளும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டமே கல்வியில் முதலிடம் பெறுகிறது. காரணம் அங்கு நிறைய கிறிஸ்தவ அமைப்புகள் இருந்தன. அந்த வரிசையில் இந்த பள்ளி 60 ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி வருகிறது. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டி உள்ளது.
உலக அளவில் வேலை வாய்ப்புகளை அள்ளி தரும் ஐ.டி., துறை மூலம் தற்போது 10 ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் மாதந்தோறும் தமிழகத்திற்கு கிடைக்கிறது. அதை 30 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
அடுத்த வாரம் சென்னயில் பெரிய ஐ.டி. நிறுவனங்களை அழைத்து கான்பரன்ஸ் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்திற்கு வேலை வாய்ப்பை வழங்கும் ஒரு திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என்றார்.
எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, பி.டி.ஆர். விஜயராஜன், பி.டி.ஆர். பிரபாகரன், நிர்வாக குழு தலைவர் எம்.எஸ்.கே.ரவீந்திரன், பொருளாளர் சேவியர் சுந்தர பாண்டியன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியைகள் கலாராணி, மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஓய்வு ஒவிய ஆசிரியர் சங்கர வேலு கவுரவிக்கப்பட்டார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Media: Dinamalar