Published Date: January 7, 2022
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிலுரையாற்றினார். இதையடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இன்றைய சட்டமன்றத்தில், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பது குறித்த சட்ட முன்வடிவை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.
அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே. மாநகரம், பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும் "2021 - 22ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன்படி அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவினங்களுக்காக 3 ஆயிரத்து 19 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் முதல் நவம்பர் 14ம் தேதி வரை கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Media: KALAIGNAR NEWS