Published Date: September 11, 2022
CATEGORY: POLITICS
தமிழகத்தின் தென்மாவட்டங்களின் பிரதான நகரமாக மதுரை உள்ளது. எனினும், மதுரை மட்டுமல்லாமல் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு நிமித்தமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்காக வெளியேற வேண்டிய சூழல் உள்ளது.
மதுரைக்கு பல ஆண்டுகளாக போதிய முதலீடுகளும், தொழில் நிறுவனங்களும் வரவில்லை என்பதும், இதனால் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை என்பதும் தென்மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் கூறும் குறையாகவே இருந்து வந்தது.
தற்போது தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையை சேர்ந்தவர். இந்நிலையில், மதுரைக்கு முதலீடுகளையும், தொழில் நிறுவனங்களையும் கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் என ஏற்கெனவே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த மக்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், ட்விட்டரில் நேற்று ஒருவர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம், “மதுரையில் நிறைய முதலீடுகளும், தொழில் நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும் தேவை. மதுரை இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்காக சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களை சார்ந்திருக்கின்றனர். சிப்காட் எஸ்டேட், டைடல் ஐடி பார்க் போன்றவை மதுரையில் இல்லாததே முக்கிய பிரச்சினை” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இதுகுறித்து ஏற்கெனவே தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம். நீங்கள் நினைப்பதை விட மதுரைக்கு நல்ல செய்திகள் மிக விரைவில் வந்து சேரும்” என்று தெரிவித்துள்ளார்.
Media: TAMIL.SAMAYAM.COM