தேசிய அளவில் தமிழகத்தில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Published Date: September 23, 2022

CATEGORY: ECONOMY

சென்னை: தேசிய அளவில் தமிழகத்தில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பண வீக்கத்துக்கு  உற்பத்தி அல்லது தேவை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். பொதுவாக பொருளாதார அடிப்படையில் அரசின் நிதிக் கொள்கையானது உடனடியாக பணவீக்கத்தை பாதிக்காது. ஆனால், ரிசர்வ் வங்கி ஏதேனும் அறிவித்தால், உடனடியாக பாதிப்பு ஏற்படும்.

கொரோனா முதல் அலை காரணமாக உற்பத்தியும், தேவையும் குறைந்தது. இதனால், கையில் பணப்பழக்கம் அதிகரித்தாலும், உற்பத்தி பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை.  இதனால் திடீரென பணவீக்கம் அதிகரித்தது. எனவே பணவீக்கம் குறைய தமிழகத்தில் பெட்ரோல் விலையைக் குறைக்கும்படி மத்திய நிதியமைச்சர் கூறினார். ஆனால் நாங்கள் ஏற்கனவே குறைத்து விட்டோம். இது போதும் என்று தெரிவித்தோம்.

மேலும், மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த ஆண்டு மொத்தக்கடன் பெரும் வரம்பு இவ்வளவு தான் என்று கட்டளையிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு தமிழகத்துக்கு ரூ.83,955 கோடிதான் என்று கூறியுள்ளது. இதனால் மாநில அரசின் உரிமை மறுக்கப்படுகிறது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் செலவை நாம் அதிகரித்துள்ளோம். பொதுவாக கடந்த ஆண்டு குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம், 14 வகை பொருட்கள், பொங்கல் பொருட்கள், மருத்துவ செலவுகள் என திட்டமிடாத வகையில் ரூ.20 ஆயிரம் கோடியை செலவிட வேண்டியிருந்தது. அதே நேரம் அரசின் கடமை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும். பொது விநியோகத் திட்டத்துக்கு, கடந்த 2 கொரோனா ஆண்டுகளில், தலா ரூ.13 ஆயிரம் கோடி என இரு மடங்கு செலவழித்துள்ளோம்.  

அதே நேரம் கடனையும், வருவாய் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தியுள்ளோம்.

முதல்வர் அறிவித்துள்ள முக்கியமான திட்டங்களுக்கு நிதி சீரமைப்பை நிதித்துறை செய்துள்ளது. ஒரே ஆண்டில் பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களுக்கு செலவழித்தும் வருவாய்,  நிதி பற்றாக்குறையை பொருளாதாரம், வளர்ச்சியையும் பாதிக்காமல் குறைத்துள்ளோம். அதேநேரம் பணவீக்கமும் குறைந்துள்ளது. மத்திய அரசு இதை தெரிவித்துள்ளது. தேவையற்ற செலவைக் குறைத்து, தேவையான செலவுகளைச் செய்தால், இது போன்ற விளைவுகள் உருவாகும்.

டாஸ்மாக் வருவாய் குறைவு

இதற்கு முன் 2003 முதல் 14 வரை குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் 11 ஆம் ஆண்டுகளில் நிதி மேலாண்மை சிறப்பாக இருந்தது. 2014 முதல் 19 வரை மிகவும் சரிந்து விட்டது. தொடர்ந்து, கொரோனா காலத்தில் மிகவும் மோசமாக்கிவிட்டது. தற்போது நிதிநிலைமை மாறியுள்ளது. இது தவிர,  தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் தொடர்ந்து குறைந்து கொண்டேதான் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Media: The Hindu