Published Date: November 25, 2021
CATEGORY: EVENTS
இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நிதியமைச்சர் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புகழாரம்
மதுரை, நவ. 25: இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, உடனுக்குடன் அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மதுரை ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பி. மூர்த்தி , பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினர். கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
நிதியமைச்சர் என்ற முறையில் 10 லட்சத்திற்கு அதிகமாக நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்புகள் எனது கையெழுத்திற்காக வரும். அப்போது இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்கான கோப்புகள் வந்தன.
அதனை பார்க்கும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தகைய அக்கறையோடு இலங்கை தமிழர் நலனில் செயல்படுகிறார் என தெரிகிறது. கடைசி 30 நாட்களில் 25க்கும் மேற்பட்ட கோப்புகளில் இலங்கை தமிழர்களின் மறு வாழ்வு மையங்களுக்கு வீடு, உணவு, இலவச எரிவாயு இணைப்பு, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை மட்டுமல்லாது, இங்கே குடியுரிமை பெற்றுள்ள தமிழர்கள் என்னென்ன திட்டங்கள் எல்லாம் பெறுகிறார்களோ, அவை அனைத்தும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து முதல்வர் செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சென்னையில் என்னை சந்தித்து உரையாடிய போது பல்வேறு கருத்துக்களை அவரிடம் தெரிவித்தேன். இங்குள்ள இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கின்ற தமிழர்களுக்கு எத்தகைய நலத் திட்டங்கள் அளிக்கப்படுகிறதோ, அதேபோன்று இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
அவர்களின் நலன் காக்கப்பட அந்தந்த மாநில அரசுகளை அதன் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அத்தகைய திட்டங்கள் நிறைவேற்றித்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தயாராக இருக்கிறது என தெரிவித்தேன்,
இதுகுறித்த பயிற்சிக்கு அங்கிருந்து வருகை தந்தால், அவர்களுடைய பணிகளை சிறப்பித்து தருவோம். எங்களின் உறவுகள் எங்கிருந்தாலும், அவர்களின் நலன்காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இதுவரை செய்யப்படாத திட்டங்களும் இனி ஒவ்வொன்றாக நிறைவேற்றித்தர முதல்வர் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.
Media: Dinakaran