30 இளம் வல்லுனர்கள்: திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் மூலமாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 30 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.

Published Date: September 30, 2022

CATEGORY: EVENTS & CONFERENCES

 

சென்னை செப் 29: முதலமைச்சரின் புத்தாய்வுத திட்டத்தை முதல்வர்    மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 30 இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினிகளை அவர் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்துத் துறைகளிலும் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களின் ஆற்றலையும், திறமையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத் திட்டங்கள், சேவைகள் வழங்கும் பணி மேம்படும்.

30 இளம் வல்லுனர்கள்: திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் மூலமாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 30 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.

இதன் பிறகு நீர் வளங்கள் மேம்பாடு, வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகள் உருவாக்கம், அனைவருக்கும் வீடு, கல்வித் தரத்தை உயர்த்துதல், சுகாதாரக் குறியீடு மேம்பாடு, அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, முறையான கடன், மரபு மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமநிலை, தரவு நிர்வாகம் ஆகிய 12 பிரிவுகளில் தலா இருவர் நியமனம் செய்யப்படுவர். மீதமுள்ள ஆறு பேர் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் கண்காணிப்புப் பிரிவில் ஈடுபடுத்தப்படுவர்.

“அறிஞர்கள் வழிகாட்டலில் புத்தாய்வுத் திட்டம்’

புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டுதலில் முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை சென்னையில் வியாழக்கிழமை அவர் தொடக்கி வைத்த பிறகு, சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவல்:

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளைஞர்களும், 12 முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தவுள்ளனர். அவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் டப்லோ முதலிய அறிஞர்கள் வழிகாட்டயுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திராவிட மாடல் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவற்றின் வெற்றிக்குப் பங்களிக்கவும் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இளைஞர்களின் ஆற்றல், தமிழ்நாட்டின் தனித்துவமான ஆட்சி நிர்வாகம், உலக அளவிலான சிறந்த உத்திகள் ஆகிய மூன்றும் ஒரு புள்ளியில் இணைவதுதான் புத்தாய்வுத் திட்டத்தின் சிறப்பம்சம்.

பலரது சிந்தனைகள், பலரது கனவுகள் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையாக திராவிட மாடல் அரசு திகழ வேண்டும். இளைஞர்களது புதுமையான சிந்தனைகள் அரசுடன் கைகோர்க்க வேண்டும்.  அரசு இயந்திரத்தில் இளைய, புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான பாதை வகுக்கப்படுகிறது என்று தனது பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பணிகள் என்ன?  30 பேரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பர். மேலும், அவற்றை மதிப்பீடு செய்வது, இடையூறுகளைக் கண்டறிவது, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுக்க உதவுவது ஆகியன இவர்களது முக்கியப் பணிகளாகும். அரசு நிர்வாகப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள உதவும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இளம் வல்லுநர்கள் 30 பேருக்கும் மடிக்கணினிகளை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட இளம் வல்லுநர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65ஆயிரமும், பயணச் செலவு, கைப்பேசி பயன்பாடு ஆகியவற்றுக்காக ரூ.10 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Media: Dinamani