Published Date: October 6, 2022
CATEGORY: POLITICS
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது, அதற்கான நிதி குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கிறது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
இக்கடிதம் குறித்து பதில் அளிக்க வேண்டியது அரசியல் கட்சித் தலைவர்கள்தான். நான் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லையென்றாலும் மாநில நிதி அமைச்சர் என்ற முறையிலும், சராசரி மனிதனின் பகுத்தறிவு சிந்தனையுடன் சொல்லும் கருத்து என்னவென்றால், நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது தாங்கள் எந்த குழுவும் அமைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டு தற்போது கூறும் கருத்து முரண்பாடாக உள்ளது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
அப்போதே இந்த வழக்கு குறித்து எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க நீதிமன்றத்தை நாடியது. எனவே இந்த கருத்துக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த எங்கள் கட்சியின் தலைமை பதில் அளிக்கும்." என்றவர்,
"ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது பிலாஸ்பூர், மதுரை எய்ம்ஸ். ஆனால், ஒன்று திறக்கப்பட்டுவிட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைடு கேம் ஆடுவது தெரிகிறது.
ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன்தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை.
ஒரு தலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. மேலும் ஒன்றிய அரசு ஏதோ ஒரு புதிய பெயரினை வைத்து திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60 சதவிகிதம் என்றும், மாநில அரசு 40 சதவிகிதம் என்றும் அறிவித்துவிட்டு பின்னர், ஓராண்டு காலம் கழித்து அத்திட்டத்தினை 40 சதவிகிதம் ஒன்றிய அரசு என்றும், மீதமுள்ள 60 சதவிகிதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.
பின்னர் இன்னும் சில ஆண்டுகள் கழித்து 25 சதவிகிதம் ஒன்றிய அரசு வழங்கும் என்றும் மீதி 75 சதவிகிதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது.
ஆனால் அந்தத் திட்டத்திற்கு பிரதமர் பெயரில் திட்டத்தை வகுத்து வைத்துவிட்டு மாநில அரசு அதிக தொகையை வழங்க வேண்டும் என்று கூறுவது சரியான நிலை இல்லை.
மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்துவது தாமதமாகி வருகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிச்சயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், ஒன்றிய அரசு சில மாநிலங்கள் அறிக்கை தரவில்லை என்ற காரணத்தினால் தாமதப்படுத்துகிறது.
மழைக்காலம், மற்ற மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்திட வேண்டும் என நான் வலியுறுத்தினேன்" என்றார்.
Media: VIKATAN