சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் பேச்சு.

Published Date: November 16, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, நவ.14- நாடகக் கலைஞர்களின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார் என்று மதுரையில் சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் பேசினார்கள்.

சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் மதுரை, தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத்துடன் இணைந்து தமிழ் நாடகத்தந்தை சங்கரதாஸ் ஸ்வாமிகளின் நூற்றாண்டு நினைவு போற்றும் விழா மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று நடந்தது.  மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு இயல்,  இசை,  நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற  கலைஞர்கள் நல வாரியம் ஆகியவற்றின் தலைவர் வாகை சந்திரசேகர் பேசியதாவது:

நாடகக்கலைதான் தற்போதைய கலைகளுக்கு அடிப்படை. 100 வருடமாக சங்கரதாஸ் சுவாமிகளின் புகழ் நிலைத்திருக்கிறது என்றால், அவர் எந்த அளவுக்கு கலைத்துறைக்கு தனது உழைப்பையும்,  சேவையையும் அளித்திருப்பார் என்பது வியப்பை தருகிறது.  நாடகத்தின் இமயமலை என்று அவரை கலைவாணர் என்.எஸ்.கே.  புகழ்ந்தார்.  அவருடைய நாடகங்கள் அற்புதமானவை. நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம்,  வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் செய்து,  முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார். இதன் மூலம் கலைஞர்களின் வாழ்வு சிறக்கும்.

 இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் வழி நடத்துகிறார் 

 இந்த விழாவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.  பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு நம் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.  கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் தேவையான ஊக்கத்தை அளிக்கும்படி முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் எங்களை  வழிநடத்துகிறார். எத்தனையோ கலைகள் இருந்தாலும் நாடகக்கலைகள் சிறப்பானவை.

நாடகத்தை உருவாக்குபவர்கள், நடிப்பவர்கள் தனித்திறமை கொண்டவர்கள், நாடகக்கலை வளரவும், சங்கரதாஸ்சுவாமிகள் புகழ் மேலும் பரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாடகங்களுக்கு வரவேற்பு

பின்னர் அமைச்சர் பி. மூர்த்தி பேசியதாவது:-

கிராமப்புறங்களில் கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பல நாட்கள் நாடகங்கள் நடக்கும்.  தற்போதும் அவை தொடர்கின்றன.  ஒரு கிராமத்தில் நடக்கும் நாடகத்தைக் கண்டு களிக்க, சுற்று பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கில் ஆர்வத்துடன் வருவார்கள்.  எனக்கும் சிறுவயதிலிருந்தே நாடகங்கள் பார்த்த அனுபவங்கள் உண்டு,

அந்த நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து கிராமங்களில் பெண்கள், பெரியவர்கள் பல நாட்கள் பேசிப்பேசி ரசிப்பார்கள்.   நாடக நடிகர்களை  தேடிப்பிடித்து ஒப்பந்தம் செய்து,  கிராமத்தினர் நாடகத்தை நடத்துவார்கள்.  அது பெரும் கலையாகவே இருந்து வருகிறது.  நாடகங்களுக்கு வரவேற்பு உள்ளது. நாடகங்களில் பங்கேற்றவர்கள் பின்னாளில் திரைப்படங்களில் நடித்து, பெரும் புகழ்பெற்றனர்.  அரசியலிலும் சாதனை படைத்தனர் என்பது வரலாறு,  நாடக வளர்ச்சியில் சங்கரதாஸ் சுவாமிக்கு முக்கிய பங்கு உண்டு.  நாடகக் கலைஞர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம்,  நாடகக்கலைஞர்களின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதுணையாக  இருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் எம்.ஆர்.எம்.  பாலசுப்பிரமணியன் நாடக மன்றம் சார்பில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.

கலையரங்கத்தின் பெயர்

முன்னதாக,  மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏற்கனவே இருந்த கலையரங்கத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம் என்ற பெயர் இருந்தது.  தற்போது அந்த கலையரங்கம்  இடிக்கப்பட்டு,  புதிய  நவீன கலையரங்கம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.   இதற்கும்,  அவர் பெயரை வைக்க வேண்டும் என்று நாடக நடிகர்கள் சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த சங்கரதாஸ் சுவாமிகள் உருவப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.  விழாவில் எம்.எல்.ஏக்கள்    கோ. தளபதி,  பூமிநாதன்,  மதுரை மேயர் இந்திராணி,  தமிழ்நாடு இசை நாடகக் கலைஞர்கள் பேரவையின் மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியன்,  பொருளாளர் சிங்காரவேலன்,  சத்குரு சங்கீத சமாஜத்தின் செயலாளர் ராஜாராம்,  தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்,  மதுரையின் தலைவர் கலைமணி,  இசை நாடக சங்கம்,  காரைக்குடியின் தலைவர் பழ.  காந்தி,  புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க தலைவர் இசையரசன், கரூர் மாவட்ட நாடக நடிகர்கள் முன்னேற்ற சங்கச் செயலாளர் ஈட்டி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Media: DAILYTHANTHI