Published Date: November 18, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை, நவ.18: கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத்துறை தொழில்நுட்பம் ரீதியிலான துறையாக மாற வேண்டும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
மதுரை மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் மடீட்சியா அரங்கில் நடந்த கூட்டுறவு வார விழாவை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்ததுடன் சிறந்த சங்கங்களுக்குக் கேடயங்களை வழங்கினார். முன்னதாக அவர் கண்காட்சியைப் பார்வையிட்டார். மேலும், அவர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் பயனாளிகளுக்கு ரூ. 56 லட்சத்து 49 ஆயிரத்து 122 மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து அனைவரும் கூட்டுறவு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
இதில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும் போது “கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கூட்டுறவு லாப நோக்கத்தை விட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கும் துறையாக இருக்கிறது. சாமானிய மக்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் உதவ வேண்டும். கொள்கை ரீதியாக கூட்டுறவுத்துறை செயல்படுகிறது. தொழில்நுட்ப ரீதியிலான துறையாக கூட்டுறவுத்துறை முன்னேற வேண்டும். நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்குப் பொருள்களை வழங்கும் அளவிற்கு இத்துறை முன்னேற வேண்டும். முழுவதும் சேவை செய்யும்
துறையாகவும் முன்னுதாரணமாக விளங்கும் துறையாகவும் கூட்டுறவுத்துறை வளர வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங்,. எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran