Published Date: November 7, 2022
CATEGORY: EVENTS & CONFERENCES
சென்னை, நவ.7- கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல்முறையாக பயிர்க் கடன் அளவு ரூ.10,000 கோடியைத் தாண்டி 2021- 22ம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10.292.02 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 8.44,082 விவசாயிகளுக்கு ரூ.6341.89கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 2021-22-ல் 5,87,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 2,80,565 நபர்களுக்கு ரூ.1.730.81கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 1,40,722 எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1,12,537க்கு ரூ.741.78கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள 697 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1,54,847 விவசாயிகளுக்கு ரூ.1022.57கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 14,51,344 எண்ணிக்கையிலான நகைக்கடன்கள் ரூ.5,013.33 கோடியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 13,12,717 எண்ணிக்கையிலான குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர்.
1,17,617 எண்ணிக்கையிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,755.99 கோடியில் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட இருக்கின்றது. இதன் மூலம் 15,88,309 எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பலர் அடைவார்கள். நடப்பாண்டில் 14,457 எண்ணிக்கையிலான குழுக்களுக்கு ரூ.474.33 கோடியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடத்தில் வகித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 6,063 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.28கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.75.75 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சரால் இடம் தானமாக வழங்கப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
நாட்டிலேயே முதல்முறையாக தேசிய அளவிலான கூட்டுறவு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் மேலாண்மைக் கல்வி நிலையம் கொடைக்கானல் வட்டம், மன்னவனூர் கிராமத்தில் உருவாக்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதிலும் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் 6,970 நியாய விலைக் கடைகளுக்கு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலம் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டொன்றுக்கு 300 புதிய கடைகள் வீதம் கட்டப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 282 கடைகளுக்குக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களிலும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கணினி மயமாக்கல் பணிகளால் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் இதுவரை 808க்கு மேற்பட்ட சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரூ.365.00 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாகக்குழு கலைக்கப்பட்டும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளும் முடிவடைந்துள்ளன.
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்குப் பொதுவான ஒரு மொபைல் செயலி உருவாக்கப்படும். தமிழ்நாடு முழுவதிலும் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நியாய விலைக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்குப் பணிநியமான ஆணைகள் வழங்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது
Media: Tamil Murasu