அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

Published Date: November 4, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, நவ.4: அனைவருக்கும் சமமான உரிமை வழங்குவது ஜனநாயகக் கடமை. அதனை நிறைவேற்ற வேண்டிய பணிகளை முதல்வர் வழியில் மேற்கொள்வேன் என மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மகபூப்பாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலின் புதியக் கட்டிடத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசும்போது “இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது ஏற்பட்ட நெருக்கடி காலக் கட்டத்தில் மக்களுடன் நான் பாதுகாப்பாக உடனிருந்து இருக்கிறேன்.

மகபூப்பாளையம் பள்ளிவாசலுக்காக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் நிலம் வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதனை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த நிலத்தை மீட்டு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலம் மீட்க்கப்படும். அனைவருக்கும் சமமான மரியாதை, வாய்ப்பு, உரிமை வழங்குவது ஜனநாயகக் கடமையாகும். ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றச் செய்ய வேண்டிய பணிகளை என் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் மேற்கொள்வேன்” என்றார்.

நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த். தமுமுக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஐவாஹிருல்லா, எஸ்டிபிஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் , மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கவுன்சிலர் செல்வி செந்தில், மகப்பூபாளையம் ஜமாத் தலைவர் நிஜாம் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran