பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தனிநபர் அரசியலுக்கோ, சுயநலத்திற்கோ முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இதுபோன்ற கூட்டங்களில் ஜனநாயக முறையில் பலரது கருத்தை விவாதிப்பது எந்த அளவுக்கு நல்லதோ, அதைப்போல தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவது முக்கியமானது.

Published Date: October 18, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை அக். 17: தனிநபர் அரசியலுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என திமுகவினருக்கும் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தினார்.

மதுரை அண்ணா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமை வகித்தார்.

இந்தக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தனிநபர் அரசியலுக்கோ, சுயநலத்திற்கோ முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இதுபோன்ற கூட்டங்களில் ஜனநாயக முறையில் பலரது கருத்தை விவாதிப்பது எந்த அளவுக்கு நல்லதோ, அதைப்போல தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவது முக்கியமானது.

நமக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. கட்சியின் கொள்கைகளின் அடிப்படையில் சமுதாயத்தை முன்னேற்றுவதும், அதற்காக திமுக தலைவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அவரது கரத்தை வலுப்படுத்துவதும் முதல் இலக்காகும். அடுத்ததாக, திமுக ஆட்சி நடைபெறும் காலத்தில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக மதுரை மாவட்டத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாகும். இதை நிறைவேற்றுவதற்காகத்தான் ஒவ்வொருவருக்கும் திமுக தலைமை பொறுப்பு அளித்துள்ளது. இதை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

எனது குடும்ப முன்னோடிகளின் வரிசையில், இப்போது நான் அரசியல் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறேன். திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது வீட்டுக் கதவு திறந்தே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். அனைவரும் இணைந்து திமுக தலைமைக்குப் பெயர் சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், நிர்வாகிகள் வ. வேலுச்சாமி, பெ. குழந்தைவேலு, மா. ஜெயராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இரண்டாவது முறையாகத் தேர்வு செய்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க, மதுரைக்கு வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Media: Dinamani