பரந்தூர் விமான நிலைய திட்டம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்ததாக தகவல்

Published Date: December 23, 2022

CATEGORY: ECONOMY

சென்னை: வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவதால், அதற்கான ஒப்பந்தங்கள், அனுமதிகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் தெரிவித்தார்.

டெல்லியில் 15-வது நிதிக்குழுவில் பங்காற்றியவர்கள் எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர், தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை சந்தித்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தேன். தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து அவரிடம் தெரிவித்தேன். சாலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்தேன்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அவருடன் நான் பங்கேற்றபோது, கோரிக்கைகள் சில வைத்தேன். நேரில் வந்து பார்க்கும்படி கூறினார். அவரைச் சந்தித்து, மதுரையில் வெளிவட்டச் சாலை பணிகளை விரைவுபடுத்தவும், மதுரை-கொச்சி நெடுஞ்சாலை பணிக்கு, விரிவான திட்ட அறிக்கை அளித்த பின்னரும் அப்பணிகள் தொடங்காதது குறித்து கோரிக்கை விடுத்தேன். அவரும், பல திட்டங்களை என்னிடம் தெரிவித்தார்.

விளக்கங்கள் அளித்தார். பல புதிய நிதித்திட்டங்களையும் தெரிவித்தார். நீர் மேலாண்மை உள்ளிட்டவை குறித்தும் தெரிவித்தார். தனிப்பட்ட கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்.

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்தேன். மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து அளித்து, மத்திய பாதுகாப்புப் படை சுங்கத்துறை வசதிகள் செய்ய வேண்டும். நில எடுப்பு முடித்த பின்னரும், விமான நிலைய விரிவாக்கம் நிலுவையில் உள்ளது குறித்து விவரிக்கப்பட்டது. பரந்தூர் விமான நிலையத்துக்கான விண்ணப்பம் வந்துள்ளது. அதற்கான அனுமதி பணிகளையும் விரைவுப்படுத்த உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள வருவாய்த்துறை செயலரும்,     ஜி.எஸ். டி. கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளருமான மல்ஹோத்ராவை சந்தித்து ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான விஷயங்கள், இருவகையான வரிவிதிப்புகள், புதிய கோரிக்கைகளை வைத்துள்ளேன்.

வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின்போது நிதி தொடர்பாகவும், வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள், உலக வளர்ச்சி வங்கிகள் தொடர்பாகவும் நான் பேசினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Media: The Hindu