மாநில அரசு முன்னெடுப்பில் நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுத்து வருகின்றன.

Published Date: September 9, 2022

CATEGORY: EVENTS & CONFERENCES

  

நாட்டிலேயே வழக்குகளை விரைந்து முடிப்பதில் சென்னை ஐகோர்ட் முதன்மையானதாக திகழ்கிறது," என, ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசினார். கோவை, ரேஸ்கோர்ஸ்சில் அமைந்துள்ள மாநில நீதித்துறை அகாடமி மண்டல மையத்தில், விருந்தினர் மாளிகை திறப்பு விழா நடந்தது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்தார். உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாய், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினர்.

நிதியமைச்சர் தியாக ராஜன் பேசியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு நிகராக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

ஜனநாயகத்தை காக்கும் கடைசி பொறுப்பு நீதித் துறைக்கு தான் உள்ளது. அதிகமான வழக்குகளை கையாளும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களை வலுப்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது:

 மாநில அரசு முன்னெடுப்பில் நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுத்து வருகின்றன.

 சென்னை ஐகோர்ட்டுக்கு 7 ஏக்கரில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வழங்கப்பட்டது. புதிய கோர்ட் கட்டடம் கட்ட, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

 நாட்டிலேயே சென்னை ஐகோர்ட் தான் அதிக வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது. இங்கு 109 சதவீதம் வழக்குகள் முடித்து  வைக்கப்படுகின்றன.

அதாவது, தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விட முடித்து வைக்கப்படும் வழக்குகள் அதிகம். நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதி பணியிடங்களே இருக்கும் நிலையிலும், வழக்குகளை விரைந்து முடிக்கிறோம்.

சென்னையில் நடந்த தலைமை நீதிபதிகள் மாநாட்டில் சென்னை     ஐகோர்ட் நாட்டிலேயே வழக்குகளை விரைந்து முடிப்பதில் முதன்மையானதாக திகழ்வதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாராட்டினார். தமிழக அரசின் உதவியில்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார். நீதிபதிகள், வக்கீல்கள், நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Media: Dinamalar