தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Published Date: December 10, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, டிச.10- மதுரை மாநகராட்சி அரங்கில் நேற்று நடந்த விழாவில் தமிழகத் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  மேலும் 53  ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதையும் தொடங்கி வைத்தார்.

தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் ஆறாவது மண்டலம் திரு.வி.க நகரிலும்,  மதுரை மாநகராட்சி,  புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள்,  சேரன்மாதேவி பேரூராட்சி ஆகிய ஐந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களைக் கண்டறிந்து அங்கு இந்த புதியத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழகத்தில் கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மதுரையில் தொடங்கிவைப்பு

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை, மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டஅரங்கிற்கு வந்தார். அங்கு நடந்த விழாவில்,  தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து,  அத்திட்டத்துக்கான ‘ லோகோ’ வை வெளியிட்டார். பின்னர் தூய்மைப் பணியாளர்களைக் கணக்கெடுக்கும் மொபைல் செயலியையும் அறிமுகம் செய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 53,301  தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பொருட்டு, நிகழ்ச்சியில் ஐந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம்,  கையுறை,  கால்உறை,  ஒளிரும் மேல்சட்டை ஆகியவற்றை வழங்கினார்.  இத்திட்டத்துக்கான கள ஆய்வு மற்றும் குறும்படங்களை பார்வையிட்டார். அவரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கவுன்சிலர்களுடன் சந்திப்பு

நிகழ்ச்சி நடந்த அரங்கில் மண்டலத் தலைவர்கள்,  கவுன்சிலர்கள் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்,  அவரிடம் பலர் மனுக்களை அளித்தனர்.

பின்னர் அவர் கார் மூலம் விமான நிலையம் அருகே பெருங்குடி பகுதியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.  முதல்-அமைச்சர் வருகையொட்டி மாநகராட்சி வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மு. கருணாநிதியும் மு.க. ஸ்டாலினும்….

1971-ம் ஆண்டு மதுரை மாநகராட்சிக்கான கட்டிடத்தைக் கட்ட அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். பின்னர் 1975-ம் ஆண்டு மாநகராட்சிக் கட்டிடம் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்குள் எந்த முதல்-அமைச்சரும் வந்ததில்லை.  தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு,  ஐ. பெரியசாமி,  சாத்தூர் ராமசந்திரன்,  பெரிய கருப்பன்,  அனிதா ராதாகிருஷ்ணன்,  ராஜ கண்ணப்பன்,  பி. மூர்த்தி,  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,  எம்.பி.  வெங்கடேசன்,  எம்.எல்.ஏக்கள் தளபதி, பூமிநாதன், தமிழரசி,  வெங்கடேசன்,  மேயர் இந்திராணி பொன்வசந்த்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்  மீனா,  நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா,  மதுரை கலெக்டர் அனீஷ்சேகர்,  மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங்,  காலோன், பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா, அகமதாபாத் நகர்ப்புற மேலாண்மை மையத்தின் இயக்குனர் மன்விதா மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திட்டத்தின் பயன்கள் என்னென்ன?

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

2022-23-ம் ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில் நகரங்கள் தூய்மையாக இருப்பதற்கு நாள்தோறும் அயராது உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.  அவர்களின் வாழ்வினை மேம்படுத்தவும், பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள்,  என மொத்தம் 53,301 பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப்பணியில் உள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இந்த திட்டத்தை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் சிறப்பாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு,  அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குதல் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம்,  காப்பீடு போன்ற அரசுத் திட்டங்களை இணைப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும்.

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து,  பொருளாதாரம் மேம்பாடு அடைய இத்திட்டம் உதவி செய்யும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Media: DAILYTHANTHI