Published Date: December 16, 2022
CATEGORY: GST
சென்னை, டிச. 16:- “ஜி.எஸ்.டி., சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் எனக்கு இருந்தால், 100 நபர்களை வைத்து, ஒரே ஆண்டில், அதன் கட்டமைப்பை மேம்படுத்திக் காண்பிப்பேன்”, என, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில், இரண்டு நாள் தேசிய ஜி.எஸ்.டி., கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. இந்தக் கருத்தரங்கைத் துவக்கி வைத்து, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
நாட்டின் வருவாயில், 60 முதல் 65 சதவீதம் வரிவிதிப்பு வாயிலாகக் கிடைக்கிறது. இதில், மறைமுக வரிகளில் ஜி.எஸ்.டி., பங்களிப்பு முக்கியமானது. ஆனால், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அமுல்படுத்துவதில், எந்த முன்னேற்றமும் இல்லை.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடக்க வேண்டிய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், முறையாக நடப்பதில்லை. கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்து, கவுன்சில் உறுப்பினர்களுக்கு, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்; ஆனால் தெரிவிப்பதில்லை.
ஐ.ஜி.எஸ்.டி., எனும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வருவாயில், மாநிலத்தின் பங்கு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று, யாருக்கும் தெரியவில்லை.
மாநிலங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி., வருவாயை வழங்க, இரண்டு மாதங்கள் ஆகிறது. இது ஒரு கறுப்பு பெட்டி கட்டமைப்பாக உள்ளதால், நம்பிக்கை குறைவாக உள்ளது.
ஜி.எஸ்.டி., க்கான சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. இதுபோன்ற பல்வேறு குழம்பங்கள், ஜி.எஸ்.டி., செயலாக்கத்தில் உள்ளது.
ஜி.எஸ்.டி., கவுன்சில், ‘ரப்பர் ஸ்டாம்ப்’பாக மாறி வருகிறது. ஜி.எஸ்.டி., சட்டத்தை அமல்படுத்துவதில் எந்தவித முன்னேற்றமும், திறமையான செயல்பாடுகளும் இல்லை.
இந்தப் பொறுப்பு என்னிடம் இருந்தால், நிதித்துறை நிபுணர்கள், வழக்கறிஞர்கள் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 100 பேரை, முழு நேரப் பணியாளர்களாக அமர்த்தி, ஒரே ஆண்டில் ஜி.எஸ்.டி., செயலாக்கக் கட்டமைப்பை மேம்படுத்திக் காண்பிப்பேன்.
மேலும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவேன். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை. ஜி.எஸ்.டி., மிக முக்கியமானது. இதை செயல்படுத்தும் கட்டமைப்பில் நிறைய மேம்பாடுகள் தேவை.
இவ்வாறு தியாகராஜன் பேசினார்.
இந்தக் கருத்தரங்கில், 20 மாநிலங்களைச் சேர்ந்த ஜி.எஸ்.டி., அதிகாரிகள் பங்கேற்றனர்.
Media: Dinamalar