Published Date: October 20, 2022
CATEGORY: ECONOMY
சென்னை: உலகப் பொருளாதார சரிவு வந்தாலும், மத்திய அரசை விட தமிழகத்துக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழக அரசின் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.3,796 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான பதில் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பேசியதாவது:-
பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிவித்த வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறையை விட இறுதிக்கணக்கில் கூடுதலாகக் குறைந்திருப்பதால், கடந்த ஆண்டு இருந்த 4.61 சதவீத நிதிப்பற்றாக்குறை, 3.38 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது மத்திய அரசு அறிவித்த கடன் எல்லைக்குள் குறைவாக வந்ததால் மாநிலத்தின் சுய மரியாதையையும், கடன் வாங்கும் சக்தியையும் அதிகரித்துள்ளோம். உலகப் பொருளாதார நெருக்கடி வரும் என்ற அச்ச சூழ்நிலை உள்ளது. அதுபோல வந்தால், தேவையான கடன் வாங்கும் திறனை உருவாக்கியுள்ளோம். கடன் பற்றாக்குறையைக் குறைத்ததால் ஆண்டுக்கு ரூ.1,240 கோடி வட்டியைக் குறைத்துள்ளோம். 7 ஆண்டுகளாகச் சரிந்த பற்றாக்குறையை நிறுத்துவது சாதாரண காரியம் அல்ல. உலகிலேயே சிறப்பான ஆலோசனை பெறுவதால், முதல்வரின் பாதுகாப்பால் வரும் விளைவு இது.
உலகப் பொருளாதார சரிவு வந்தால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, மற்ற மாநிலங்கள், மத்திய அரசை விட தமிழகத்துக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
Media: The Hindu