பொது நிர்வாகத் துறையில் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி, இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகள் கழித்து எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

Published Date: September 28, 2022

CATEGORY: CONSTITUENCY

திருச்சி, செப் 27: வெற்றிக்கான இலக்கு சுயலாபத்துக்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்றார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்து சாதனை புரிந்த 17 முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பொது நிர்வாகத் துறையின்  சாதனையாளர் என்ற விருதை பெற்ற பின்னர், அமைச்சர் மேலும் பேசியது:

பொது நிர்வாகத் துறையில் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி, இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகள் கழித்து எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

காரணம் வங்கித் துறையில் நான் சில விஷயங்களை சாதித்து இருந்தாலும், இப்போது நான் அத்துறையில் இல்லை. பொது நிர்வாகத் துறைக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன.

கல்வி நிறுவனங்களில் கற்றலுக்குரிய சூழ்நிலை மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் உள் கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

இத்தகைய சூழலில் கல்வி கற்பவர்கள் வாழ்வில் சிறப்பிடத்தை எளிதில் அடைய முடியும். சாதனைகளால் கிடைக்கும் புகழ் தவிர இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை. ஓய்வில்லாமல் உழைப்பவர்களும், துன்பம் வரும்போது கலங்காமல் இருப்பவர்களும் சாதிக்கின்றனர். நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இங்கு (என்ஐடி) வந்த பிறகுதான் எனக்கு பரந்த எண்ணம் ஏற்பட்டது. பல மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழி பேசும் மாணவர்கள் இங்கு படித்து வந்த நிலையில், நான் இந்தி பேசவும் கற்றுக் கொள்ள தொடங்கினேன். வெற்றிக்கு நிறைய அளவுகோல்கள் உள்ளன. வெற்றிக்கான இலக்கு சுயலாபத்தைக் கடந்ததாக இருந்தால் வெற்றி தானாகவே நம்மை வந்து சேரும் என்றார் அவர்.

 

விருது பெற்ற முன்னாள் மாணவர்கள்

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராஜ் ஐயர், ரங்கநாதன் தாவரி, சீதாராமன் நாராயணன், இந்திய எண்ணெய் கழகப் பொது மேலாளர் டாக்டர் கார்த்திகேயாயினி, முரளி சீதாராமன், ஜெயகர் வேதமாணிக்கம், பிநாத் கல்லாயில், என்.கருப்பையா, கோவிந்தா ஐயர், சௌமன் பாவ்மில்க், வி. கோபி சுரேஷ்குமார், கே. ஸ்ரீனிவாஸ், எம்.சண்முகராஜ், கே.ஸ்ரீ வத்சன், கே.கார்த்திகேயன் கிருஷ்ணசாமி, ஆர்.ஸ்ரீனிவாசன்.

விழாவில், இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் பவன் குமார் சிங், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் ஜி.அகிலா, நிர்வாக குழுத் தலைவர் பாஸ்கர்பட், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே. மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Media: Dinamani