மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் இந்த கண்காணிப்பு அமைப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும்.‌ வாரத்துக்கு ஒரு முறையாவது மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகள் தொடர்பாக வந்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Published Date: November 4, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை நவ. 3: மதுரை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த புகார்  கண்காணிப்பு அமைப்பு, புதிய தொலைபேசி எண், மென்பொருள் சேவை ஆகியவற்றை மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மேயர் வ.இந்திராணி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருங்கிணைந்த புகார் கண்காணிப்பு அமைப்பைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

மதுரை மாநகராட்சியில் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாக புதிய புகார் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நவீன தகவல் தொடர்பு அமைப்புகள் மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் மக்கள் பிரச்சனைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகாரின் நிலை ஆகியவற்றையும் இதில் தெரிந்து கொள்ள முடியும்.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் இந்த கண்காணிப்பு அமைப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும்.‌ வாரத்துக்கு ஒரு முறையாவது மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகள் தொடர்பாக வந்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பின்னர், ஒருங்கிணைந்த புகார் கண்காணிப்பு மைய செயல்பாட்டை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய தொலைபேசி, கட்செவி  அஞ்சல் ஆகியவற்றுக்கு 7871661787 என்ற புதிய எண் வியாழக்கிழமை முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி அழைப்பு, கட்செவி அஞ்சல் மற்றும் www.mducorpicts.com. என்ற மதுரை மாநகராட்சி இணையதளம் மூலமாகத் தெரிவிக்கலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் புகார் ஒப்புகை எண் ஒன்று உருவாக்கப்பட்டு பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த ஒப்புகை எண் மூலமாக புகாரின் நிலையை இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

புகார்கள் பதிவு செய்யப்பட்டவுடன் தானியங்கி முறையில் புகாரின் வகைக்கு ஏற்ப மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகாரின் விவரங்கள் தெரிவிக்கப்படும். பெறப்பட்ட புகார்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில், அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பப்படும். புகார் மீது நடவடிக்கை இல்லையெனில், ஆணையரின் மேற்பார்வைக்குக் கொண்டு செல்லப்படும்.

பொதுமக்கள் அளித்த புகார் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பதிலைத் தெரிந்து கொண்டு பதில் திருப்திகரமாக இருந்தால் அவர்கள் நட்சத்திர மதிப்பீடு மூலமாக கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என்றனர்.

நிகழ்ச்சியில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி , பாண்டிச்செல்வி , முகேஷ் ஷர்மா, துணை ஆணையர் முஜிபூர் ரகுமான், கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், நகரப் பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Media: Dinamani