ஜவுளி மீதான வரி உயர்வு நிறுத்திவைப்பு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு

Published Date: January 1, 2022

CATEGORY: GST

நமது டில்லி நிருபர் - நாடு முழுதும் இன்று முதல் அமலாக இருந்த ஜவுளி மீதான 15 சதவீத வரி உயர்வை, பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒத்தி வைத்துள்ளது.

ஜவுளி ரகங்கள் மீது ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வரவிருந்தது. 

குளிர்கால கூட்டத்தொடர்

இந்த முடிவுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் பல எம்.பி.,க்கள் இந்த முடிவை கைவிடும்படி அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில் டில்லியில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் அவசர கூட்டத்தில், இந்த முடிவை ஒத்திவைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக  நிதியமைச்சர் தியாகராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:

ஜன., 1 முதல் அமல்படுத்தப்படுவதாக இருந்த ஜவுளிப் பொருட்கள் மீதான 15 சதவீத வரி உயர்வை நிறுத்திவைப்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து நான்கைந்து முறை ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டதாலும், அனைத்து மாநிலங்களும் வரவேற்பு தெரிவித்ததாலும் இந்த முடிவுக்கு நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.

தகவல் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் அதிகாரிகள் அளவிலேயே நின்று விடுகின்றன. மக்களோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதால் அமைச்சர்களுக்கும் முறைப்படி வந்து சேர வேண்டும். வெறும்  கணக்கு வழக்கு பார்க்கும் விஷயம் மட்டுமல்ல; சமூகச்சூழல் அடிப்படையில் மக்களுக்கு நல்லது எது, - கெட்டது எது என்பது எங்களுக்கே தெரியும். எனவே, அமைச்சர்கள் வரையில் அனைத்தும் - தெரிந்தாக வேண்டுமென வலியுறுத்தினேன்.

ஜி.எஸ்.டி., அமைப்பில் பல்வேறு குழுக்கள் உள்ளன. ஆனால், பல குழுக்களுக்கு இன்னும் வரையறைகள் கூட நிர்ணயிக்கப்படவில்லை. எந்தெந்த குழுக்களில் யார் யார் உறுப்பினர்கள் என்பது கூட பலருக்கும் தெரியாது. பல குழுக்கள் இன்னும் ஒருமுறை கூட்டப்படவில்லை.  குஜராத் அமைச்சர் கேட்டதால் மட்டுமே இந்த கூட்டம் கூட்டப்பட்டது. இதைப்போலவே மற்ற மாநில அமைச்சர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களது கோரிக்கைக்கும் செவிமடுத்து அவசர கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

பல மணிநேரம் ஆலோசனை நடத்தினாலும், எடுக்கப்படும் முடிவுகளை அந்த கூட்டம் முடிந்து மத்திய நிதியமைச்சர் தரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தான் மாநில அமைச்சர்களான எங்களுக்கே தெரியவருகிறது.

இந்த நிலை மாற வேண்டும். 

நிறைய விஷயங்களை ஆலோசிக்காமல் ஒரு கூட்டத்திற்கு என குறிப்பிட்ட ஓரிரு பிரச்சனைகளை ஆராய்ந்து, அந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே மாநில அமைச்சர்கள் முன்பாகவே முடிவை இறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு

ஜவுளி மீதான ஜி.எஸ்.டி., உயர்த்தும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததை திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

 

Media: Dinamalar