Published Date: October 14, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை, அக். 14: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் 10 முக்கிய பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுவை, கலெக்டரிடம் வழங்கினர். இது தொடர்பாக விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கொண்ட மாவட்டக் குழு அமைக்கப்பட்டது இக்குழுவின் முதல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தனர் இதில், எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். பழைய பஸ் நிலையத்தை புதிதாக மாற்றக்கூடாது. கப்பலூர் டோல்கேட் நிரந்தரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘கப்பலூர் டோல்கேட் அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘பின்னணி பாடகர் டி.எம்.எஸ் சவுந்திரராஜனுக்கு, தவிட்டு சந்தையில் சிலையும், நினைவு மண்டபமும் கட்ட வேண்டும்’ என்றார். இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் தளபதி வெங்கடேசன், ராஜன் செல்லப்பா, பெரியபுல்லான், ஐயப்பன், கூடுதல் கலெக்டர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜூத்சிங், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran