Published Date: December 21, 2022
CATEGORY: ECONOMY
சென்னை, டிச. 21: - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், தலைமை கணக்கு அதிகாரிகள் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர்கள் அந்தஸ்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளை பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களுக்கு நிதி கட்டுப்பாட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள், தலைமை கணக்கு அதிகாரிகளாகப் பணியமர்த்துகிறது.
இந்த அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த தொடர்ச்சியான அறிவு பரிமாற்றம் தேவைப்படுகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத்துறை மற்றும் நிதித்துறை இந்திய பட்டைய கணக்காளர்கள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் கே. விஜயேந்திர பாண்டியன், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் ஜெய்குமார் பத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Media: Dhinathanthi