Published Date: November 19, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை, நவ.19: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இணைப்பு ரயில்வே மேம்பாலப்பணிகளை நிதிஅமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் பழங்காநத்தம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியைத் துவக்கி வைத்தார். அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் இப்பாலப்பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்தனர்.அதாவது மதுரை பழங்காநத்தத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் வகையில் மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ் நகரை இணைக்கும் வகையில் ஒரு மேம்பாலமும், அதிலிருந்து பிரிந்து மாடக்குளம் ஜெய்ஹிந்துபுரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலமும் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது மாடக்குளத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மீதமுள்ள மேம்பாலப் பணிகளை முடிக்கும் வகையில் ரூ.16.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகளை நிதிஅமைச்சர் பி. டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அடிக்கல் நாட்டி நேற்று துவங்கி வைத்தார். மொத்தம் 251 மீட்டர் நீளம் கொண்ட பாலப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Media: Dinakaran