கொள்கை, வரலாறுகள் அடிப்படையில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளன. இருப்பினும், செயல்பாட்டுத் திறன், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் கூட்டுறவுத்துறை சிறப்புப் பெற வேண்டியது அவசியமாக உள்ளது.

Published Date: November 18, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, நவ.17:  கூட்டுறவுத்துறையின் அனைத்துப் பணிகளும் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட வேண்டியது அவசியம் என்று தமிழக நிதி மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

லாப நோக்கமில்லாமல் சாமானிய மக்களுக்கு சேவையாற்றும் அமைப்பு என்ற வகையில், நீதிக் கட்சி காலத்தில் இருந்தே கொள்கை அடிப்படையில் கூட்டுறவுத் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  அமெரிக்கா உள்பட பல்வேறு அயல் நாடுகளிலும் கூட்டுறவு அமைப்புகள் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

மக்கள் யாரும் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டவை தான் நியாயவிலைக் கடைகள்.  அந்த வகையில் நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனையத்தில் கைரேகை பதியவில்லை என்றாலும் முதியவர்களுக்குப் பொதுவிநியோகப் பொருட்களை விநியோகிக்க வேண்டியது அவசியம்.

கொள்கை, வரலாறுகள் அடிப்படையில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளன. இருப்பினும், செயல்பாட்டுத் திறன், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் கூட்டுறவுத்துறை சிறப்புப் பெற வேண்டியது அவசியமாக உள்ளது.

பல இடங்களில் பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.  இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க கூட்டுறவுத்துறை முழுமையாகக் கணினி மயமாக்கப்பட வேண்டியது அவசியம்.  அவ்வாறு இல்லாமல் வங்கிகளை நிர்வகிப்பது என்பது அந்தத் துறைக்குச் சவாலானது.

நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலமான சேவை,  எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும். குறித்த நேரத்தில்,  குறிப்பிட்ட இடத்தில், குறித்த அளவில் பொருள்கள் வழங்க முனைப்பு காட்ட வேண்டும் கூட்டுறவுத்துறை சிறப்புப் பெற பல வாய்ப்புகள் உள்ளன.  அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பான முறையில் சீரிய சேவையை வழங்கும் துறையாக கூட்டுறவுத்துறை விளங்க வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.56.49 லட்சம்  மதிப்பிலான கடனுதவிகளையும்,   சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்குக்  கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

மாநகராட்சி மேயர்  வ. இந்திராணி,  ஆணையர் சிம்ரன்ஜித்சிங்,  மாவட்ட வருவாய் அலுவலர்  ர.சக்திவேல்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன்,  எம்.பூமிநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரிய கலா,  மாநகராட்சி துணைமேயர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய பேருந்துகள் இயக்கம்:  இதைத் தொடர்ந்து எல்லீஸ் நகர் வழியாக மாட்டுத்தாவணி-திருப்பரங்குன்றத்துக்கும், செல்லூர்- தத்தனேரி வழியாக மாட்டுத்தாவணி- விளாங்குடி ஆகிய பகுதிகளுக்கும் புதிய வழித்தடங்களில் இரண்டு அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Media: Dinamani