Published Date: December 2, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை, டிச. 1: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகளைப் பராமரிப்பதற்கு புதிய ‘ஸ்கை லிப்ட் ‘ வாகனத்தை பொதுப் பயன்பாட்டுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ் ஆப், குறுந்தகவல், தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கும், தெருவிளக்கு புகார்களை சரி செய்யும் வகையில் தனியார் நிறுவனத்தின் மூலம் 1,794 தெரு விளக்கு பராமரிக்கும் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தெரிவிளக்கு தொடர்பான புகார்களை உடனுக்குடன் சரி செய்யும் வகையில், மாநகராட்சிக்கு 4 ‘ ஸ்கை லிப்ட் ’ வாகனங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக ஒரு வாகனம் வாங்கப்பட்டது.
இந்த நிலையில், மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஸ்கை லிப்ட்’ வாகனத்தின் பயன்பாட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். மேலும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் வ.இந்திராணி, ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் மு.பூமிநாதன், துணைமேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, துணைஆணையர் முஜிபூர் ரகுமான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Media: Dinamani