Published Date: November 18, 2022
CATEGORY: EVENTS & CONFERENCES
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் `இவால்வ்' (EVOLVE 2022) என்ற தலைப்பில் தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் மதுரையில் இன்று நடைபெற்றது.
இதில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கி பேசும்போது, ``வருவாய் பற்றாக்குறையை 16,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம். முதல்வரின் உறுதியான ஆதரவு இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது.
தமிழகத்தில் 20 சதவிகிதம் முதியவர்கள் தனிமையில் வாழ்வதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பலர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வராமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி சென்றடைய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வழியாக கொரோனா கால கல்வி இடைவெளி குறைக்கப்பட்டு மாணவர்களிடம் கற்றல் பழக்கம் அதிகரிக்கப்பட்டது. 20,000 மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் வாசிப்பு பழக்கம் அதிகரித்தது தெரியவந்தது.
சமூகநீதியின் கீழ் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முழு உழைப்பை கொடுத்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும் என்பதற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் ஓர் உதாரணம். அதற்காக முழுமையாகப் பணி செய்ததைப் பெருமையாக நினைக்கிறேன். மாணவர்களுக்கான காலை உணவு, மதிய உணவு திட்டத்தில் தமிழக அரசு பல்வேறு புதுமைகளை நிகழ்த்தியுள்ளது.
தமிழக அரசின் ஒவ்வொரு திட்டத்துக்கும் செலவு செய்யும் ஒவ்வொரு தொகையும் சமூக நீதியை நோக்கியே இருக்கும். அரசின் அடிப்படை கட்டமைப்பில் சீர்திருத்தம் தேவை. அனைத்து திட்டங்களும் முறையாக மக்களை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
பொருளாதார மந்த நிலையில் இந்தியா உலக சராசரியைவிட நல்ல நிலையில் உள்ளது. பொருளாதாரத்தில் தமிழ்நாடு எல்லா மாநிலத்தையும்விட நல்ல நிலையில் உள்ளது" என்று பேசியவர், தொழில் முனைவோருடன் கலந்துரையாடிபோது, ``கல்வியில் அடிப்படை சீரமைப்பு தேவை. கல்வி அமைப்பு சுயநலவாதிகளின் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொதுவினியோகத் துறைக்கு மூன்று மடங்கு நிதி செலவிடுகிறது. பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் சந்தை விலை, பொது விநியோக விலையைவிட 300 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதால் கடத்தலுக்கு வழி வகுக்கிறது. அதை சீர் செய்ய வேண்டுமென கூறியுள்ளேன்.
மதுரையின் உட்கட்டமைப்பு சென்னையை ஒப்பிடுகையில் மோசமாக உள்ளது. அதைச் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் அதற்கு உறுதுணை இருக்கிறார் என்றார். மதுரைக்கு தொழில் நிறுவனங்களைக் கொண்டு வந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே இரவில் அனைத்து மாற்றமும் நிகழ்ந்துவிடாது. அதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்றார்.
Media: VIKATAN