Published Date: September 25, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை, செப்.25: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவதற்காக குடும்பத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பாக நடந்த பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் நிதி முன்னேற்றம் அடைந்துள்ளது. நிதித்துறையில் செயல்பட ஊக்கம், ஆதரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். அவரது ஆதரவு இல்லையென்றால் நிதியமைச்சராக செயல்பட முடியாது. அனைவருக்கும் உதவி செய்ய அரசிடம் அளவில்லா நிதியில்லை. சமூக நீதி, பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் நிதியைப் பெருக்க வேண்டும். தமிழக அரசு உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை இலக்காக வைத்துள்ளது.
அதிமுக ஆட்சியில் தவறான முறையில் ரூ.15 ஆயிரம் கோடி அளவிற்கு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் பல தவறுகள் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் தவறுகள் களையப்பட்டு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அரசு கலைக்கல்லூரி இடத்திற்கான அடங்கலைக் காட்டி பயிர்க்கடன் பெற்றுள்ளனர். 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயி 1000 ஏக்கர் நெல் வழங்கியதாக, நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் பெற்றுள்ளார். நகையே இல்லாமல் காலி கவரை வைத்து நகைக்கடன்கள் வாங்கி இருப்பதும் தணிக்கையின் போது தெரியவந்தது. அவர்கள் செய்த தவறுகளைத் திருத்தி வருகிறோம். எதிர் வரும் பட்ஜெட்டில் தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும். பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு குடும்பத்தின் உண்மை தன்மையைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள 18 நல வாரியங்களின் பயனாளர்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் செய்த தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னர் மக்கள் கேட்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தில் திமுக ஆட்சி செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மேயர் இந்திராணி பொன் வசந்த், வாரியத் தலைவர், பொன் குமார், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜுத்சிங், எம்எல்ஏ புதூர் பூமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Media: Dinakaran