Published Date: September 24, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை, செப். 23: அறிவைப் பெருக்கிக் கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுமார் 200 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழா அரங்குகளை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். பின்னர், புத்தகத் திருவிழாவை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட அரங்கை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பாடப் புத்தகங்களைத் தாண்டி பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரிய தகவல்களைக் கற்றறிந்து பயன்பெற முடியும்.
நான் பள்ளி, கல்லூரிகளில் படித்ததோடு, புத்தகங்களை வாசித்ததன் மூலமாக அறிவைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது. மாணவப் பருவத்தில் ஒரு சில நாள்கள் வகுப்பறைக்குச் செல்லாமல் கூட இருந்திருக்கிறேன், ஆனால், புத்தகம் வாசிப்பதை தவறவிட்டது இல்லை என்றார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் பேசுகையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இளைஞர்களின் புத்தகம் வாசிக்கும் பழக்கம் திசை மாறி விட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. நாளுக்கு நாள் இளைஞர்களின் வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருகிறது. வரும் தலைமுறை படைப்பாற்றல் மிகுந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதற்கு புத்தக வாசிப்பு அடித்தளமாக இருக்க வேண்டும் என்றார்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வ.இந்திராணி, சட்டப்பேரவை உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், துணைமேயர் டி.நாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.வயிரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செ.சரவணன் வரவேற்றார். மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் நன்றி கூறினார்.
புத்தகத் திருவிழா அக்டோபர் 3 ஆம் தேதி வரை காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிலரங்கம், கலைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாலை நிகழ்வுகளில் சிந்தனை அரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Media: Dinamani