நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்!

Published Date: November 26, 2022

CATEGORY: GST

புதுடெல்லி, நவ.26: தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையான ரூ.11 ஆயிரத்து 185 கோடியே 82 லட்சத்தை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதுடெல்லியில் நடைபெற்ற மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்த ஆலோசனை மேற்கொள்ளும் வகையில் மாநில நிதியமைச்சர்கள் பங்குபெற்ற பட்ஜெட்டுக்கான முன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.11.2022) புதுடெல்லியில் நடந்தது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு, மாநில அரசுகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு நிலுவையில் உள்ள நிதியை அளிப்பதுடன், முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது வருமாறு:-

ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் விதமாக நடத்தப்படும் இந்த பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் உலகளாவிய பொருளாதார மந்த நிலை நிலவி வரும் சூழலில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

மாநிலங்களின் வளர்ச்சிக்கு உரிய பங்கு!

ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் போரால் உருவான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் மாநில அரசுகள் சந்தித்த பொருளாதார சவால்களுக்கு ஒன்றிய அரசு கைகொடுத்து உதவுவது அவசியம்.

ஒன்றிய அரசு தொடர்ந்து தீர்வைகள் மற்றும் கூடுதல் வரி விதிப்பு மூலம் வரி வருவாயைப் பெருக்கி வருகிறது. அவ்வகையில் 2011-12-ஆம் ஆண்டு காலத்தில் 10.4 சதவிகிதமாக இருந்த அந்த வரி வருவாய் 2021-22 கால         கட்டத்தில் 26.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில நிதி ஆதாரத்தைப் பாதிக்கும் அந்த வரிவிதிப்பை அடிப்படை வரி விதிப்புகளுடன் ஒன்றிணைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும்.

மாநில நிதி சுயாட்சி குறைக்கப்படும் வகையில் மத்திய வரிகள் மீது அளிக்கப்படும் மானியங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தமிழகத்திற்கான மத்திய வரிகள் மீது அளிக்கப்படும் மானிய பங்கு 2012-13 காலத்தில் 45 சதவிகிதமாக இருந்த நிலையில், 2021-22 கால கட்டத் தில் 94 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை!

மேலும் கொரோனா பெருத்தொற்று ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மாநிலங்கள் மெதுவாக மீண்டு வரும் நிலையில், தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுகிறேன்.

தமிழக அரசின் 5 சிறப்புத் திட்டங்களுக்காக 15-வது நிதிக்குழு ரூ.2,200 கோடி என்ற அளவில் நிதியளிப்பு செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஒன்றிய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி திட்ட நிதியை அளிக்க வேண்டும்.

பேரிடர் தடுப்பு நிதி உடனே வழங்குக!

மேலும் 15-வது நிதிக்குழுவின் அறிக்கையில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 2021- 22 முதல் 2025-26 கால கட்டத்திற்கான தேசிய பேரிடர் தடுப்பு நிதியாக ரூ.500 கோடியை வழங்க பரிந்துரை செய்துள்ளது. அந்த நிதியுதவியை விரைவில் வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் உள்ள ஒரு பயனாளிக்கு ஒன்றிய அரசு ரூ.1.5 லட்சம் மற்றும் தமிழக அரசு ரூ.7 லட்சமும், கிராமப்புறங்களில் உள்ள ஒரு பயனாளிக்கு ரூ.72 ஆயிரமும், தமிழக அரசு ரூ.1.68 லட்சமும் பங்களிப்பு வழங்குகின்றன. தற்போதைய விலைவாசியில் ஒன்றிய அரசின் பங்களிப்புத் தொகை உயர்த்தி வழங்கப்படுவது அவசியமானதாகும்.

ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியை அகற்ற இரு அரசுகளும் தலா 49 சதவிகித பங்களிப்பு செய்வது மிக அவசியமானது.

நிதியை உயர்த்தி வழங்குக!

கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மேம்படும் வகையில் வேளாண்மை, பால் உற்பத்தி, மீன் வளம் உள்ளிட்ட துறைகளுக்கான கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை நபார்டு மூலமாகவும், பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிதி, மீன்வள உள்கட்டமைப்பு நிதி ஆகியவற்றையும் உயர்த்தி எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுகிறேன்.

நாட்டிலேயே முதன்முறையாக சர்வதேச 'பர்னிச்சர் பார்க்' தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் அந்தத் துறையின் போட்டிகளை எதிர் கொண்டு சர்வதேச அளவில் சந்தைப்படுத்த ஏதுவாக மரங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைத்து அறிவிக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை!

சென்னை மெட்ரோ 2- ஆம் கட்டப்பணியை இருதரப்பும் 50:50 என்ற பங்க ளிப்பின் அடிப்படையில் ஒப்பளிப்பு செய்து உரிய நிதியை வரும் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு வழங்குவதுடன், தமிழகத்துக்கு உரிய ரெயில்வே திட்டங்க ளையும் வழங்கிட வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப்பணி களை முழு வீச்சில் தொடங்கி நடத்த வேண்டுவதுடன், தமிழகஅரசு அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கத்தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்                                      உரையாற்றினார்.

Media: Murasoli