கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 15 ஆயிரம் கோடிக்கு தவறான முறையில் பயிர், நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.

Published Date: September 25, 2022

CATEGORY: CONSTITUENCY

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 15 ஆயிரம் கோடிக்கு தவறான முறையில் பயிர், நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார், தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு 3,873 பேருக்கு ரூபாய் 94 லட்சத்து 62 ஆயிரத்து 362 மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்குரிய உதவித்தொகையை உயர்த்தாமல் இருந்தது சமூக நீதிக்கு எதிரான செயல் கூடிய சீக்கிரம் இதை மாற்றுவோம். சில “டேட்டாக்களை” கொண்டு தவறு நடக்காமல் உண்மையான பயனாளிகளுக்கு அரசுத் திட்டங்களைக் கொண்டுபோய் சேர்ப்பதை இலக்காக வைத்திருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தபோது அதிமுக கொண்டு வந்த விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தவேண்டியிருந்தது இந்த இரண்டு திட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு தவறான முறையில் பயிர்,  நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் திருத்துவது எங்களது கடமை. ஏழை, சாமானிய மக்களுக்கு போக வேண்டிய நிதியை திட்டமிட்டு முறைகேடு செய்திருக்கிறார்கள்.

முதல்வர் கொடுத்த வாக்குறுதிப்படி பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் உண்மையிலேயே ஏழையாக இருப்பவர்களைக் கண்டறிந்து வருகிறோம். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நிதிநிலை சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் இந்திராணி, சு.வெங்கடேசன் எம்பி, தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.மு. பூமிநாதன்,  தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கே.எம்.சி. லிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Media: The Hindu