அப்போது அவர், முதலமைச்சரும், கட்சித்தலைவருமான மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

Published Date: October 18, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, அக். 18:  மக்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்க கட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

செயற்குழு கூட்டம்

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்.முத்தராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு, வேலுச்சாமி உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், முதலமைச்சரும், கட்சித்தலைவருமான    மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:- பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் தனிப்பட்ட நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஜனநாயகத்தில் பலரது கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. அதிலும் ஒரு கட்சியில் தலைவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவது சிறந்த குணம். அந்த நோக்கத்தில் இந்தக் கூட்டம் கூடி இருக்கிறது.

நமது இலக்குகள் இரண்டே இரண்டு தான். ஒன்று இயக்கத்தில் கொள்கைகளை பரவலாக பரவ விட்டு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். இரண்டாவது இலக்கு, மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் என்னென்ன முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியுமோ, அதனைக் கொண்டு வந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

மக்கள் பணி

மு.க.ஸ்டாலின் போன்று ஒரு புரட்சித் தலைவர் எங்கும் கிடையாது. சாதாரண அடிமட்ட தொண்டனான எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறார். என்னைப் போல உங்களுக்கும் இங்கு பல பொறுப்புகளை அவர் வழங்கி இருக்கிறார். எனவே இந்த பொறுப்புகளில் நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் இன்னும் ஒரு ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தல் வந்துவிடும்.

எனவே அதனைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் சிறப்பாக மக்கள் பணி செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரைக்கும் கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் என்றைக்கும் கேட்டே இல்லை. யாரெல்லாம் எப்போது எல்லாம் சந்திக்க வேண்டுமோ, அப்போதெல்லாம் என்னைச் சந்திக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்

இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும், 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Media: Dhinathanthi