சென்னை தலைமை செயலகத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Published Date: September 23, 2022

CATEGORY: ECONOMY

சென்னை செப். 22: தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையை இரண்டு மடங்காகக் குறைத்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதற்கான விவரங்கள் இறுதிக் கணக்கீட்டில் தெரியவரும் எனவும் அவர் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்புடன் 3 விஷயங்களில் தமிழகம் சிறப்பான விளைவுகளைக் கொண்டு வந்துள்ளது. திருத்திய மதிப்பீட்டில் கூறிய அளவில் இருந்து கடன், வருவாய் பற்றாக்குறையைக் குறைத்துள்ளோம். வரவிருக்கும் இறுதிக் கணக்கில் தகவல்கள் தெரியும். வருவாய் பற்றாக்குறை நிதி பற்றாக்குறையை இரண்டு மடங்காகக் குறைத்துள்ளோம். கடந்த நிதி ஆண்டில் 4.61 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறையை 3.25 என்ற அளவுக்குக் குறைப்போம்.

தேவையானதைக் குறைத்தால் வளர்ச்சி வராது. பொருளாதாரத்தை பாதிக்காத அளவுக்கு செய்ய முடியுமா என்று கேட்டால், அதையும் செய்து காட்டியுள்ளோம். நிகழ் நிதியாண்டில் முதல் காலாண்டில் சொந்த வரி வருவாய் உயர்ந்துள்ளது. அதாவது, சொந்த வரிகள் மூலமான வருவாய் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும், வரி அல்லாத வருவாய் 74 சதவீதத்துக்கு கூடுதலாகவும் பெற்றுள்ளோம்.

ஒரே ஆண்டில் நிதிப் பற்றாக்குறையையும் வருவாய் பற்றாக்குறையையும் குறைத்துள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்துவது குறைந்துள்ளது. கடன்கள் மற்றும் அவற்றுக்கான, வட்டியைக் குறைத்து தேவையான அம்சங்களுக்கு மட்டும் செலவுகளைச் செய்துள்ளோம். அதாவது, பொருளாதாரத்தை பாதிக்காத, வளர்ச்சியை பாதிக்காத அளவில் வருவாய் பற்றாக்குறை கடன்கள், வட்டியையும் குறைத்துள்ளோம்.

கடன், வருவாய் பற்றாக்குறையை குறைத்ததால் பணவீக்கம் அதிகமாகியுள்ளதா என்ற கேள்வி உள்ளது. வருவாய் பற்றாக்குறை கடன் வளர்ச்சியையும் அதனால் வட்டி வளர்ச்சியையும் குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்து நேர்மறையான விளைவுகள் கிடைக்கின்றன. இதற்கான புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளன. இதைவிட சிறப்பான நடவடிக்கைகளை கனவில் கூட காண முடியாது. ஒவ்வொரு கோப்பிலும் ஒவ்வொரு திட்டத்திலும் சரியான மேலாண்மை செய்தால் நேர்மறையான விளைவுகள் கிடைக்கும்.

இதற்கு முன்பாக 2014-2019 -ஆம் ஆண்டுகளில் இவ்வளவு கடன் வந்து வரி சரிந்து ஏன் எதிர்மறை வளர்ச்சி ஏற்பட்டது என்பதே எனது கேள்வி. இப்போது அவற்றைத் திருத்தி வருகிறோம்.  எத்தனையோ தவறுகள் நடந்து வருகின்றன. இன்னும் அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டியுள்ளது.

கோயில்கள் தேசியமயம்: 1926- ஆம் ஆண்டிலேயே கோயில்களை நாம் தேசிய மயமாக்கியுள்ளோம். குஜராத்தில் 2010-ஆம் ஆண்டில் ஆக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கோயில்களைப் பிரித்துக் கொடு,  குஜராத்தில் அரசே வைத்துக்கொள் எனச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சட்டம் என்ற நிலை நீட்டித்தால் அதுவே எங்களுக்குப் போதும். நாங்கள் வளர்ச்சியை எட்டி விடுவோம் என்றார் பழனிவேல் தியாகராஜன்.

குறையும் டாஸ்மார்க் வருவாய்

மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியில் டாஸ்மாக் வருவாய் அளவு குறைந்து கொண்டே வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

டாஸ்மாக் மதுபான விற்பனையில் மதிப்புக் கூட்டுவரி,  கலால்வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிகளின் மூலமாக வருவாய்களைப் பெறுவதில் பெரும் பிரச்சனை உள்ளது. வரி வருவாய் சதவீதம் அதிகரிக்கவில்லை. மேலும், தமிழகத்தில் எந்தவரியை எடுத்துக் கொண்டாலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

சொத்துவரி,  தண்ணீர் வரி, மின்சாரக்கட்டணம், பதிவுக்கட்டணம் போன்றவை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படவே இல்லை. அரசுக்கு எங்கிருந்து பணம் வரும்? நிறைய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

நிகழாண்டு கடன் பெறும் அளவு ரூ. 83,955 கோடி

நிகழாண்டில் தமிழக அரசு கடன் பெறும் அளவை ரூ.83 ஆயிரத்து 955 கோடி என மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

நாம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கூட கடன் அளவை எடுக்க நிதி பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தாலும், மத்திய அரசின் செயல்பாட்டால் நாம் நிர்ணயித்த தொகையைக் கடனாகப் பெற முடியாது. ஆனால், சட்ட அமைப்புப்படி மாநில அரசு என சில உரிமைகள் உள்ளன.

இதனை மீறி கடன் அளவை முடிவு செய்வது நாம் எங்கெல்லாம் சம்பாதிக்கலாம், சம்பாதிக்க கூடாது என்ற வழிமுறைகளையும் மத்திய அரசே  சொல்கிறது. திட்டங்களை நாங்கள் சொல்படி நடத்த வேண்டும் என்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்? எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் பொது விநியோகத் திட்டத்துக்கான செலவை அதிகரித்துள்ளோம். கடந்த நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு பொது விநியோகத் திட்டங்களுக்காக செலவிட்டுள்ளோம் என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Media: Dinamani