Published Date: November 17, 2021
CATEGORY: ECONOMY
கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மீட்க ஒன்றிய அரசு உதவ வேண்டும்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
சென்னை, நவ. 17- கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மீட்பதற்கான விரிவான தொகுப்பை ஒன்றிய அரசு அறிவிக்கவேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் தலை மையிலான ஆலோசனைக் கூட் டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டு கோள்விடுத்துள்ளார்.
இந்தியாவில் தொழில் முதலீடு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதியமைச்சர் களுடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காணொலி வாயிலாக நேற்று (16.11.2021) ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பேசிய தாவது:
கரோனா தொற்றின் சவாலை எதிர்கொண்ட போதிலும், வருவாய் வரவுகளை ஈட்டுவதிலும், தொழில் முதலீட்டிலும் தமிழ் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடந்த இரண்டு தொழில் முதலீட்டுக்கூட்டங்களில் ரூ.21,021 கோடி மதிப்பிலான முதலீடுகள், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
ஒன்றிய அரசின் பல்வேறு துறை கள் தொடர்பான அனுமதிகளை ஒருங்கே பெறுவதற்காக தேசிய ஒற்றைச்சாளர இணையவழி அமைப்பான மாதியம் சிறப்பாக செயல்படுகிறது. அதேநேரம், அனுமதிக்குப் பிந்தைய சேவைகள், குறைதீர்ப்பு செயல்முறைகளுக்கு இந்த இணையதளத்தில் வழிவகை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ சாதனங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும்.
சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய 4 முக்கிய விமான நிலையங்களை விரிவுப்படுத்தும் திட்டத்தில் உள்ள இடையூறுகளுக்கு தீர்வு காண ஒன்றிய அரசு ஒத்துழைக்க வேண்டும். கூடுதல் வர்த்தகம்மற்றும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக விரைவில் அறிவிக்க வேண்டும்.
புறத்துறைமுக திட்டத்துடன் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்பதற்கான விரிவான தொகுப்பை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கான தளவாட செலவை குறைக்கும் வகையில், சென்னை கன்னியாகுமரி சாலை முழுவதையும் 8 வழிச் சாலையாக மேம்படுத்தவேண்டும்.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய அளவில் தொடர்ந்து நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். தமிழ்நாட்டில் அதிகளவில் காற்றாலை மின் உற்பத்தி திறன் உள்ளது. புதுப் பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், கடலில் காற்றாலை மின் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் இன்றி மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்க வேண்டும். கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் திறனை அடிப்படையாகக் கொண்டு அந்த வரம்புகள் தீர்மானிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு நிதியுதவி வழங்கும் அமைப்பிடம் இருந்து மாநிலத்துக்கு ஆண்டுக்கு ஒரு திட்டம் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
Media: Hindu Tamil