Published Date: October 21, 2022
CATEGORY: EVENTS & CONFERENCES
சென்னை, அக். 21- நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலுரை வருமாறு:-
பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அறிவித்திருந்த Revised Estimate ல் இருந்த வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறையை விட இறுதிக் கணக்கில் கூடுதல் 9 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்து இருப்பதனால் ஒரு record அளவிற்குப் போன வருடம் இருந்த 4.61% நிதிப்பற்றாக்குறை 2021-22 ஆம் ஆண்டில் வெறும் 3.38% குறைக்கப்பட்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)
இரண்டாவதாக, ஒன்றிய அரசாங்கம் அறிவித்த கடன் எல்லைக்குள் மிகவும் குறைவாக வந்ததனால், மாநிலத்தின் சுயமரியாதையையும், வருங்காலத்தில் கடன் வாங்கும் சக்தியையும் அதிகரித்திருக்கிறோம். ஏனென்றால், 15வது நிதிக் குழுவின் பரிந்துரையில் எந்தவொரு ஆண்டிலும், அவ்வாண்டுக்குரிய முழுக் கடனை வாங்கவில்லையென்றால், அதற்கடுத்த ஆண்டுக்கு அதனை தள்ளுபடி செய்து கொண்டு, அடுத்த ஆண்டுடன் கூட்டிக் கொள்ளலாம். எனவே, உலகப்பொருளாதார நெருக்கடி வரும் என்ற அச்சத்திலிருக்கும் சூழ்நிலையில், இனிமேல் அதுபோன்றதொரு சூழ்நிலை ஏற்பட்டால், தேவையான கடனை வாங்குவதற்கு, ஒரு capacity திறனை உருவாக்கியிருக்கிறோம்.
மூன்றாவதாக, கடனை, பற்றாக்குறையைக் குறைத்ததனால், ஆண்டுக்கு சுமார் ரூ.1,240 கோடி அளவிற்கு வட்டியைக் குறைத்திருக்கிறோம் என்ற நல்ல செய்தியை இந்த அவையில் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இந்தளவுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக சரிந்திருந்த பற்றாக்குறையைத் திருத்த வேண்டுமென்றால், அது சாதாரண காரியம் இல்லை. நாம் எதைச் செய்தாலும், விமர்சகர்கள், ‘இதனுடைய பலம் என்ன? அதனுடைய பலன் என்ன? எதற்காக நோபல் பரிசு பெற்ற பெரிய ஆலோசகர்களைக் கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்பார்கள். ஆனால், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின் விளைவுகள் வரும்போது, ஏதோ வானத்திலிருந்து விழுந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இவை ஒவ்வொன்றும் தினமும் செய்கிற பணியினால், உலகத்திலேயே சிறப்பான நிதி ஆலோசகர்களின் ஆலோசனைகளைப் பெறுவதனால், முதலமைச்சர் அவர்கள் கொடுக்கின்ற பாதுகாப்பினால், வருகின்ற விளைவுகள் ஆகும். அதனால், இவையெல்லாம் ஏதோ வானத்திலிருந்து விழுந்த பலன்கள் இல்லை. (மேசையைத் தட்டும் ஒலி)
இறுதியாக, நான் ஒரே ஒரு கருத்தைத் தெரிவித்து, ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில், அரசியலில் என்னை உருவாக்கியவர், என் தலைவர். எனக்கு வாய்ப்பளித்தவர், என் தலைவர். எனக்கு வழிகாட்டி, என் தலைவர். எனக்கு ஆதரவும், உற்சாகமும் கொடுப்பவர், என் தலைவர். என்னைப் பாதுகாப்பாக வைத்திருப்பவர், என் தலைவர். எனவே, என் தலைவர் இருக்கிற நம்பிக்கையினால், இந்த அவையில் இரண்டு உறுதிகளையளிக்க விரும்புகிறேன்.
Press, இதனை நன்றாக record செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை, எல்லாம் நன்றாக நடந்து, உலகப் பொருளாதாரச் சரிவு வராமலிருந்தால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருக்கும் வரையில், ஒவ்வோராண்டும் மக்களுக்குச் சென்று சேருகின்ற நிதி, உற்பத்தியில் சதவிகிதமாக அதிகரித்துக் கொண்டே போகும்.(மேசையைத் தட்டும் ஒலி)
அதே சமயத்தில், ஒவ்வோராண்டும் பற்றாக்குறை, உற்பத்தியில் சதவிகிதமாகக் குறைத்துகொண்டே போகும். (மேசையைத் தட்டும் ஒலி) ஒருவேளை, ஒரு சிலர் பயப்படுவதைப்போல, ஒரு சூழ்நிலையில் உலகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளினால், மற்ற மாநிலங்களைவிடவும், ஒன்றிய அரசைவிடவும் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்ற உறுதியை நான் இந்த அவையில் அளிக்க விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இவ்வாறு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்கினார்.
Media: Murasoli