Published Date: December 8, 2022
CATEGORY: ECONOMY
சென்னை, டிச. 8: தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்று வேளச்சேரியில் நடைபெற்ற தமிழ்நாடு நிதிநிலை மாநாட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சார்பாக, தமிழ்நாடு நிதிநிலை குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு பொருளாதார குழுத் தலைவர் கோபால் மகாதேவன் தலைமை வகித்தார்.
இக்கருத்தரங்கில், நிதிஅமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:
அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீடு 3 மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 18 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை தமிழகத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.
இதன்மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகத்தை 3வது இடத்துக்கு முன்னேற்றி தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி உள்ளோம்.
நமது பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளது.
இந்நிறுவனங்களில் அதிகவேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. வங்கி முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நிதிநிலை சார்ந்த முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளது. தமிழ்நாடு அரசு தகுந்த நிதிநிலை நடவடிக்கைகளை மேற்கொண்டாதால் ஜிடிபி மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Media: Dinakaran