Published Date: September 26, 2022
CATEGORY: POLITICS
மதுரை,செப்.26: தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக ஆட்சியிலேயே நிறுத்தி விட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாலிக்கு தங்கம் திட்டம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மின் கட்டணம், சொத்துவரி உயர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் வருவாய் பற்றாக்குறை குறைந்து இருப்பதாக கூறுகிறார். மின் கட்டணம், சொத்து வரி வருமானம் மாநில அரசுக்கா வரப்போகிறது? அதுவும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட கட்டணம் எப்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செய்யும் இது என்ன கணக்கு.
அதிமுக அரசின் தாலிக்கு தங்கம் விலையில்லா மடிக்கணினி, இருசக்கர வாகனம் திட்டம் போன்ற திட்டங்களை திமுக நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார். இது அப்பட்டமான பொய். அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தவில்லை. நிறுத்திவிட்டார்கள்.
எதுவும் தெரியாது
இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஒதுக்கிய நிதியை அப்படியே பெண்களுக்கு படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு செலவு செய்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு நிர்ணயித்த தொகையை விட ஒளிவு மறைவுடன் ரூ.30 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.
அதனை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. அவரது காலில் நீங்கள் வீழ்ந்து இருந்தீர்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு அனுமதித்து இருக்கும் கடன் அளவைவிட குறைவாகத்தான் கடன் வாங்கி இருக்கிறோம். எனது அனுபவத்தின் பலனாக 4.61 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறையை 3.35 சதவீதமாக குறைத்து இருக்கிறேன்.
ஆர்பி உதயகுமாருக்கு கணக்கு, சட்டம், அடிப்படை பொருளாதாரம், நிதி மேலாண்மை என எதுவும் தெரியாது. அரசியலில் தனது இருப்பை தக்கவைக்க இதுபோன்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்
Media: Dhinathanthi