மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு

Published Date: October 14, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை,அக். 14: மக்கள் நலன் சார்ந்த பண்புகளோடு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என மதுரையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இதற்குத் தலைமை வகித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

மக்கள் நலன் சார்ந்த சிந்தனை, மனிதநேயம் இரக்கம் ஆகிய மூன்று பண்புகளை முன்னிறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரு நாடு வளர்ச்சி அடைய மூன்று திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். முதலாவதாக கர்ப்பிணித் தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் அவர்களுக்கு சரியான முறையில் ஊட்டச்சத்து கிடைப்பதால் பிறக்கின்ற குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இரண்டாவதாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை சிறப்பாக செயல்படுத்தி, சிகிச்சை பெற வருபவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்க வேண்டும். மூன்றாவதாக, முதன்மைக் கல்வியை அனைவருக்கும் சிறப்பான முறையில் கிடைக்கப்பெற செய்வதாகும்

பெண்கள் அவர்களது திருமண வயதிற்கு முன்பாக மிக இளம் வயதில் திருமணம் செய்வதால் அவர்களுக்கும், குழந்தைகளின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். கொரோனோ காலக்கட்டத்தில் அதிகளவில் வளரிளம் பெண்கள் திருமணம் நடைபெற்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வேதனைக்குரிய செய்தியாகும். இத்தகைய பாதிப்புகளை குறைப்பதற்கு இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. முதலாவதாக, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருள்கள் சரியான திறன் கொண்டதாக உள்ளதா? சரியான முறையில் சென்று சேர்கிறதா? என ஆராயப்பட உள்ளது. இரண்டாவதாக, கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

நிகழ்ச்சியில் கலெக்டர் அணிஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங், மண்டலத்தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக ஆரப்பாளையம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

Media: Dinakaran