Published Date: December 19, 2022
CATEGORY: CONSTITUENCY
மதுரை, டிச. 19:- ‘மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும்’ என, மதுரை நுகர்பொருள், ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
இவ்விழாவில் சங்கத் தலைவர் குற்றாலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், “ ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மதுரை கீழமாசி வீதி கடைகளை அகற்ற அரசு முயற்சிக்கிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்றார்.
அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: மதுரை விமான நிலையம் கூடுதல் சேவைகளுடன் தரம் உயர்த்தப்படும். மதுரையின் வளர்ச்சிக்காக முடக்கி வைத்துள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சில மாதங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் மதுரையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி., வரியில் உள்ள குளறுபடிகள் மதுரையில் நடைபெறும் அடுத்த கவுன்சில் கூட்டத்தில் நிவர்த்தி செய்யப்படும், என்றார்.
சங்க நிர்வாகிகள், “ மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும். மின்சார கட்டணத்தைக் குறைக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்” என வலையுறுத்தினார்.
துணைமேயர் நாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், அசோகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல் சங்கர், செயலாளர் மோகன், நிர்வாகிகள் அப்துல் ஹமீது, பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Media: Dinamani