அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

Published Date: December 21, 2022

CATEGORY: ECONOMY

சென்னை: கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கருவூலம் மற்றும் கணக்குத்துறையானது, கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், தலைமை கணக்கு அதிகாரிகள் மற்றும் உதவிக்கணக்கு அலுவலர்கள் ஆகிய தரத்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளைப் பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களுக்கு நிதிக் கட்டுப்பாட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள், தலைமைக் கணக்கு அதிகாரிகளாகப் பணியமத்துகிறது.

இந்த அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த, தொடர்ச்சியான அறிவு பரிமாற்றம் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறை மற்றும் நிதித் துறையில் உள்ள பிற துறை அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு முதன்மையான தொழில்முறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது மிகவும் உதவியாக இருக்கும்.

அந்த வகையில், நேற்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் செயலர் இடையில், தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவன செயலாளர் சி.ஏ.ஜெய்குமார் பத்ரா, நிதி மற்றும் கருவூலக் கணக்குத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Media: The Hindu