Published Date: November 20, 2021
CATEGORY: ECONOMY
ஒன்றிய அரசின் வரி தற்போதும் அதிகமாகவே உள்ளது-2014ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு
பெட்ரோல் -டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்
தமிழக அரசு ஏற்கனவே 3ரூபாய் குறைத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை
சென்னை, நவ20
ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை இன்னும் அதிகமாகவே வசூலித்துக் கொண்டு தான் இருக்கின்றது என்றும், 2014ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்றும் புள்ளி விபரங்களுடன் எடுத்து விளக்கிக் கூறிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு ஏற்கனவே பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைந்துள்ளது என்பதனையும் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நிதி அமைச்சர் பி. டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி, மக்களின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்கா நிலையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், நமது நாட்டிற்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டர் ஒன்றிற்கு 3ரூபாய் குறைத்து அறிவித்தோம். இதனால், ஆண்டு ஒன்றிற்கு மாநில அரசிற்கு ரூ 1,160 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. கடந்த அரசு விட்டுச் சென்ற நிதி நெருக்கடி சூழலிலும் இதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
மாநில அரசுகள் கோரிக்கை!
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் ஏற்பட்ட விலைவாசி உயர்வை குறைக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவும் வலியுறுத்தி வந்தது. பல மாநில அரசுகளும் இக்கோரிக்கையை முன்வைத்தன. ஒன்றிய அரசும் 3.11.2021 அன்று பெட்ரோல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 5 மற்றும் டீசல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 10 எனவும் குறைத்துள்ளது. ஒன்றிய வரிவிதிப்பின் வரிகளை தமிழ்நாடு விதிப்பதால், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் கூடுதலாக 0.64 ரூபாயும் (மொத்தம் ரூ 23.50) குறையும். இதனால், மாநில அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ 5,050 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
ஒன்றிய அரசு அல்லது மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மேலும் இதற்கு நிகராகத் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது ஒரு ஏற்றுக்கொள்ள இயலாத கோரிக்கை.
ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது ஒரு லிட்டர் டீசல் வாங்கும் பொழுது, அதன் சில்லரை விற்பனை விலையை நிர்ணயிப்பதில் பல அம்சங்கள் உள்ளன. அடிப்படை விலை ( கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு விலையை சார்ந்தது) , அதன்மீது ஒன்றிய அரசின் கலால் மற்றும் மேல்வரிகள்/ கூடுதல் கட்டணங்கள், போக்குவரத்துச் செலவுகள், மாநில அரசின் வரிகள் மற்றும் முகவர் கட்டணங்கள். 1.8.2014 அன்று பெட்ரோல் மற்றும் டீசலின் அடிப்படை விலை மற்றும் உலக அளவில் இறக்குமதி விலை, ரூபாய் மதிப்பில் இன்றைய இறக்குமதி விலைக்கு நிகராக இருந்தது.
பெட்ரோலின் அடிப்படை விலையை லிட்டர் ஒன்றிற்கு 48.55 ரூபாய் மற்றும் டீசலின் அடிப்படை விலை லிட்டர் ஒன்றுக்கு 49.69 ரூபாயாக இருந்தது. 7.8.2014ல், ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோலை பொறுத்த அளவில் லிட்டர் ஒன்றிற்கு 9.48 ரூபாயும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 3.57 ரூபாயும் இருந்தன. அச்சமயத்தில், மாநில அரசின் வரிகள் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 15.47 ரூபாயும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 10.23 ரூபாயாகவும் இருந்தன.
ஒன்றிய அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி குறைப்பதற்கு முன்பாக, பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு 32.90 ரூபாயாகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்கு 31.80 ரூபாயாகவும் இருந்தன. இதை, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 21.80 ரூபாயாகவும் ஒன்றிய அரசு தற்போது குறைத்துள்ளது.
கூடுதலான விலை!
அதாவது, 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, ( அடிப்படை விலை ஏறத்தாள சமமாக இருந்த பொழுது) பெட்ரோலுக்கு 18.42 ரூபாயும், டீசலுக்கு 18.23 ரூபாயும் இன்னும் ஒன்றிய அரசு கூடுதலாக விதித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தற்பொழுது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு ரூ 21.46 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்கு ரூ 17.51 ஆகவும் உள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்த கூடுதலான வரியை (பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 9 ரூபாய் இதில்,3 ரூபாய் நாங்கள் ஆகஸ்ட் மாதத்தில் குறைத்தோம் மற்றும் டீசல் மீது ஒரு லிட்டருக்கு 7.25 ரூபாய்) கடந்த அ.தி.மு.க அரசுதான் செலுத்தியது. அமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு ஏற்கனவே பெட்ரோல் மீதான வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ 3 அளவிற்கு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு 14 ஆகஸ்ட் 2021 முதல் அமல்படுத்தப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரிப்பு!
ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தது. மீண்டும் 2014ல் இருந்த அளவிற்கு குறைத்துக்கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்துவிடும். ஏனென்றால், இந்த வரி விதிப்பு அடிப்படை விலை மற்றும் ஒன்றிய அரசின் வரிவிதிப்பின் மீது விதிக்கப்படும் வரியாகும். சில்லறை விற்பனை விலை 06 ஆகஸ்ட் 2014 அன்று ( ஒன்றிய வரி குறைப்பிற்கு முன்) மற்றும் நவம்பர் 4,2021 அன்று ( வரைக் குறைப்பிற்கு பின்) விவரங்கள் பெட்டிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒன்றிய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல, சாத்தியமும் அல்ல, இதனை கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். இதுவே, அனைவரும் பயனடையும் எளிமையான, நியாயமான ஒரே தீர்வாகும். இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்து விடும்( பெரும்பாலான மாநிலங்கள் "ad valorem" வரி முறையைப் பின்பற்றுகின்றன.
ஒரு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
Media: Murasoli