/

தமிழக அரசின் நிதிநிலை நிலையற்ற ஒரு கட்டத்தை அடைந்துள்ளது நிதித்துறைக்கும், தமிழக அமைச்சரவைக்கும் இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து போதிய புரிதல் இல்லாததே நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயம்

Published Date: February 11, 2019

மாநில வருவாய் சந்தித்துள்ள சரிவு, தொடர்ந்து உயர்ந்துவரும் கடன் சுமை, அதையொட்டி உயர்ந்துகொண்டே செல்லும் வட்டிச்சுமை, உட்கட்டமைப்பு முதலீடுகளில் அக்கறையின்மை, முன்னுக்குபின் முரணான அறிவிப்புகள் என எண்ணற்ற நிதி சார்ந்த பிரச்சனைகளில் நம் மாநிலம் சிக்கியுள்ளது.

இவை இன்றோ நேற்றோ முளைத்தவை அல்ல. இந்த பிரச்சனைகள் குறித்தும் அதற்குண்டான தீர்வுகளை நோக்கி நாம் பயணிப்பது எப்படி என்பது குறித்தும் 2017ம் ஆண்டே, சட்டமன்றத்தில், 2017-18ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது நான் நிகழ்த்திய உரையில் முன்வைத்துள்ளேன்.

இருந்தும், இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அதே பிரச்சனைகள் இன்று பன்மடங்கு பெருகியுள்ள வேளையில், அதற்குண்டான தீர்வுகளை நோக்கி செல்லாமல், மீண்டும் மீண்டும் நாடு சுபீட்சமாக இருப்பதை போன்ற ஒருவித  மாயதோற்றத்தை உருவாக்கி மக்களை ஏமாற்ற முற்படுகிறது அதிமுக அரசாங்கம். 

எங்கள் கழகத்தின் சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள இரண்டு அறிக்கைகளும் இவற்றை தெள்ளத்தெளிவாக விளக்குகின்றன.

 

மாநில வருவாய்

முதன்மையாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது தொடர்ந்து சரிவை மட்டுமே கண்டுவரும் நம் மாநில வருவாயை தான்.  உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு அனைத்து நாடுகளும் ஸ்தம்பித்து நின்ற ஆண்டுகள் 2007, 2008 மற்றும் 2009.  உலகமே நிதி நெருக்கடிக்கு உள்ளான அந்த மூன்று ஆண்டுகள் தலைவர் கலைஞர் மேற்கொண்ட நிதி மேலாண்மை பொருளாதார வல்லுனர்களே வியக்கும் அளவில் அமைந்தது.

திமுக-வின் 2006-11 ஐந்தாண்டுகால ஆட்சியில், தலைவர் கலைஞர் தொலைநோக்குப் பார்வையோடு கொண்டு வந்த தொழில்துறை கொள்கைகள், முறையான செயல்திட்டங்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களின் காரணமாக மாநிலத்தின் உற்பத்தித்திறனுக்கு நிகரான மொத்த வருவாய் 14.50% உயர்ந்திருந்தது.

 

கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR)

மாநில வருவாய்

வட்டியில்லா வருவாய் செலவீனம்

செலுத்தப்படும் வட்டி

மொத்த கடன் உயர்வு

மூலதன முதலீடுகள் (உதய் திட்டம் நீங்கலாக)

உத்தேச ஜிடிபி வளர்ச்சி

திமுக

( 2006 – 11 )

15.40%

18.90%

13.03%

12.22%

27.06%

19.64%

அதிமுக (ஜெ)

( 2011 – 16 )

11.26%

13.75%

16.66%

16.22%

8.20%

18.52%

ADMK (இபிஎஸ் & ஓபிஎஸ்)

( 2016 – 18)

8.12%

7.24%

21.08%

15.76%

-5.98%

9.10%

 

இதனையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 2011-16 ஐந்தாண்டுகால ஆட்சியில் 10.64% என்றளவுக்கு வருவாய் குறைந்திருந்தது. அதன்பின்னர், திரு. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரு. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து முதல்வர்களாக பொறுப்பேற்ற பிறகு, 2016-20 ஆட்சிகாலத்தில் மாநில வருவாய் 11.45% நிலையை எட்டியுள்ளது.

அதேபோல், 2006-11 திமுக ஆட்சிகாலத்தில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் 14.50% ஆக இருந்தபோது, மாநில அரசின் பங்கு 10.60% மற்றும் மத்திய அரசின் பங்கு 3.90% ஆக இருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பங்கு குறைந்து 3.25% ஆகவும், மாநில அரசின் பங்கு 9.60% ஆகவும் இருந்தது.

 

ஆனால் தற்போதைய திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சிகாலத்தில், மாநில அரசின் பங்கு பெருமளவில் குறைந்து 7.55% ஆகவும், மத்திய அரசின் பங்கு 3.29% என்ற நிலையில் 0.4% உயர்ந்திருக்கிறது.

மாநில அரசின் உற்பத்தித்திறன், மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை விட மிகவும் வேகமாக குறைந்து வருவதால் இந்த உயர்வு காணப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தின் உற்பத்தித்திறன் கடும் வீழ்ச்சியில் உள்ளது புலப்படுகிறது.

நம் மாநிலத்தின் நிதிநிலை கலைஞரின் ஆட்சிக்கு பின்னர் தொடர்ந்து சரிவை கண்டிருந்தாலும், அம்மையார் ஜெயலலிதா பூரண உடல்நலத்துடன் பணியாற்றிய வரையில், அவை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு நானே புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்துள்ளேன்.

 

கடனும் – வட்டியும்

 

 

 

 

 

வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் மேலும் மேலும் கடனுக்கு உள்ளாகி வட்டிசுமையையும் அதிகரிக்கும் கடன்பொறியில் நம் மாநிலம் சிக்கியுள்ளது மிகவும் வேதனையளிக்க கூடியது.

வருவாய் விழுக்காட்டில் வட்டி செலுத்துதல் (அதிமுக) தொடக்கம் முடிவு
திமுக 2006 - 11
18%
16%
அதிமுக (ஜெ) 2011 - 16
16%
20%
அதிமுக (இபிஎஸ் & ஓபிஎஸ்) 2016 - 18
20%
25%

 

தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், மாநிலத்தின் வருவாயில் 17.78% வட்டி கட்டப்பட்ட நிலையை மாற்றி, 2011 ஆம் ஆண்டு, வருவாயில் 16.04% பங்கு மட்டுமே வட்டியாக செலுத்தும் அளவுக்கு நிதி மேலாண்மை சிறப்பாக கையாளப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 2011-2016 ஆட்சிகாலத்தில் மாநில வருவாயில் 20.32% வட்டியாக செலுத்தப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. அவருக்குப் பிறகு, திரு. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரு. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து முதல்வர்களாக பொறுப்பேற்ற பிறகு, 2016-20 நிதியாண்டு காலத்தில் மாநில வருவாயில் இருந்து 24.05% வட்டியாக செலுத்தப்படவுள்ளது.

மக்களையும் மாநிலத்தையும் வளப்படுத்த தெளிவான திட்டங்களோ, கொள்கைகளோ இல்லாமல் இந்த அரசு பயணிப்பதை நிதிநிலை அறிக்கையில் உள்ள இரு முக்கிய தரவுகளின் மூலம் நாம் காணலாம்.

வேலைவாய்ப்பு

முதலாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த சரியான கொள்கைகளோ, திட்டங்களோ இந்த அரசிடம் இல்லை என்பது அவர்கள் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையின் மூலமாகவே வெட்ட வெளிச்சமாகிறது. 2019-20ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் படி, 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்புள்ள 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதன் மூலமாக 10.45 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கான வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.30 லட்சம் முதலீடு செய்யப்படுகிறது.

வியக்கத்தக்க வகையில், அதே நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 19.50 லட்சம் குறு - சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் (MSME) ரூ.2.12 இலட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு, 1.23 கோடி நபர்களுக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதன்படி, ரூ.1.70 இலட்சம் முதலீட்டில் ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் குறு – சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர, மானியங்கள், விதி விலக்குகள், நிலம் வாங்குவதில் சிறப்புரிமை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியமில்லை. 

 

மின்மிகை மாநிலம் ?

அதேபோல்,  மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்திறன் 30,191 மெகாவாட் என நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது தமிழ்நாட்டில் 16,572 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. அதன்படி, 8 ஆண்டுகளில் சராசரியாக 7.8% ஒட்டுமொத்த மின்திறன் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளது.

பொதுவாக ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) அல்லது மாநிலத்தின் மொத்த உற்பத்தி (GSDP) அதிகரிப்பதை 3 அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். ஒன்று, வங்கிக்கடன் 2 மடங்குக்கு மேல் அதிகரிப்பது. இரண்டு, மாநிலத்தின் வரி வருவாயானது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனைவிட அதிகமாக இருப்பது. மூன்று, தொழில்துறை வளர்ச்சி மற்றும் தனிநபர் வாழ்க்கைத்தர உயர்வினால் அதிகரிக்கும் மின் பயன்பாடு ஆகிய காரணங்களால் மின்சாரத்தின் தேவை ஆண்டுதோறும் 15% முதல் 18% அதிகரிப்பது.

ஆனால், தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் பெருமளவில் முடங்கி போயுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே, மின்மிகை மாநிலம் என கூறுவதில் அடிப்படை ஆதாரமும் இல்லை, தற்போது நம் மாநில வளர்ச்சி குன்றியுள்ள சூழலில் அதில் பெருமையும் இல்லை.

அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை

உலக வங்கி (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Develoment Bank), ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA), ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KfW) ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களில் இருந்து மொத்தம் ரூ.51,861.54 கோடி கடனுதவி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கைகள் வெளியிட வேண்டும்.

அதேபோல, உழவர் பாதுகாப்புத் திட்டம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு செலுத்தப்படும் காப்பீட்டுக் கட்டணம், வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கைகளாக வெளியிட வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை

ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநிலத்துக்கான பங்கான ரூ. 5,909.16 கோடி, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய மான்யத் தொகைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகப் பணிகளுக்கான மான்யத் தொகைகளில் ரூ.4,412.32 கோடி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான மான்ய தொகையாக ரூ.4,187.1 கோடி என பதினான்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவையில் உள்ளது.

உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான வழிகாட்டுதலில் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்களை மாநில அரசு எதிர்க்காமல் அலட்சியம் காட்டுவதால் மாநிலத்தின் நிதிச்சுமை ரூ. 353.55 கோடியிலிருந்து ரூ.1,526.46 கோடியாக அதிகரித்துள்ளது. 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரை நடைமுறைக்கு வந்த ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் 30% குறைவடைந்துள்ளது. இப்படி பல்வேறு வகைகளில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிதிருந்தாலும், நிலுவைத் தொகைகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் மத்திய மோடி அரசின் புகழ் பாடி வருகிறது அதிமுக அரசு.

ஒரே கட்சியினால் நடத்தப்படும் அரசு, அதே நிதியமைச்சர், அதே செயலாளர் இருந்தும், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நிதிநிலையை மதிப்பீடு செய்யும் திறன் ஆண்டுக்கு ஆண்டு மோசமடைந்து வருகிறது.

உதராணமாக, 2001ம் ஆண்டு ரூபாயின் மதிப்பை கொண்டு 2019ம் ஆண்டு ரூபாயை மதீப்பீடு செய்யக்கூடாது. ஏன் செய்யக்கூடாது என்பதை பள்ளியில் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களை கேட்டால் கூட தெளிவாக புரியும் வகையில் பதில் அளிப்பார்கள். ஆனால், நிதி துறையையே கையாளும் அமைச்சர் அதுபோன்ற வேடிக்கையான ஒப்பீட்டை, சட்டமன்றத்தில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் முன்வைக்கும் முன், துறையில் பணிபுரியும் பொருளாதார நிபுணர்களிடம் சிறிது கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நிதிநிலை குறித்த போதிய விவரங்களும், தரவுகளும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வெளியிடபடுவதில்லை. இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஒரு ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விரிவாகவும், முழுமையாகவும் அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு.  குடிமக்கள் பார்வையிடும் வகையில் நிதித்துறை சார்ந்த அனைத்து தரவுகளையும், புள்ளிவிவரங்களையும் இணையத்தில் வெளியட முன்வராதது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

 Articles Year Wise: