/

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வெளியிட்ட 2020-2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாத உரை

Published Date: February 17, 2020

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வெளியிட்ட 2020-2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை  மீதான விவாதத்தை துவக்கும் வாய்ப்பை எனக்களித்த என் தலைவருக்கு, பேரவையின் எதிர்கட்சித் தலைவருக்கு, தமிழக மக்களின் மாபெரும் நம்பிக்கையாய் விளங்கும் தலைவருக்கு, எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது உரைக்கு அனுமதி அளித்த உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மேன்மை பொருந்திய அவையில் தாங்கள் வகித்திருக்கும் மாண்புமிகு அவைத்தலைவர் பதவியை, என் தந்தை பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் அலங்கரித்த காலங்கள் கடந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த பேரவைக்கு இன்று வருகை தந்திருக்கும் என் தாயார் அவர்களுக்கு, தனிப்பட்ட முறையில், என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையில், ஏறக்குறைய எட்டு கோடி தமிழர்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் தங்கள் அனைவரின் முன் பேச வாய்ப்பு கிடைப்பதின் முக்கியத்துவத்தை உணர்கிறேன். எந்த ஒரு ஜனநாயகத்திலும், இதுபோன்ற ஒரு அவை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதையும் தாண்டி, நூறு ஆண்டுகளுக்கு முன்பே திராவிட கொள்கை வழிவந்த சட்டமன்ற உறுப்பினர்களை வரவேற்ற பேரவை என்ற வகையில் நம் பேரவைக்கு கூடுதல் பெருமை உண்டு.

எனவே, இந்த பேரவையில் பேசும் எவருக்கும், அதற்குரிய மாண்பும், சொல்லவரும் கருத்துக்களில் தெளிவும் மிக முக்கியம். அரசியல் பேசுவதற்கும், ஒரு சார்புடைய விவாதங்களில் எழும் காரசாரமான கருத்துக்களை ரசிக்கவும் வேறு தளங்கள் உள்ளன. ஆனால் இந்தப் பேரவையில் பேசும்பொழுது ஒருவர் முன்வைக்கும் கருத்துக்களின் நோக்கம் மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை உட்பட அனைத்து சட்டங்கள் மற்றும் திட்டங்களின் தாக்கம் மக்களின் வாழ்வுக்கு பயன்படும் வகையில் உள்ளதா என்பதின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

மக்கள் மன்ற விவாதங்களை பொருத்தமட்டில் தமிழக அளவிலும், ஏன் இந்திய அளவிலும் மட்டுமல்ல உலக அளவிலும் கூட பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் ஆகியோரின் ஆளுமைக்கு நிகரான தலைவர்களை காண்பது கடினமே.

2016ஆம் ஆண்டு எனது கன்னி பேச்சின் பொழுது, முன்னாள் முதல்வர் காலம்சென்ற அம்மையாரிடம், தலைசிறந்த தலைவர்களின் கருத்துக்கள் தற்கால சூழ்நிலைகளை மட்டுமல்லாமல் வரவிருக்கும் காலங்களையும் கருத்தில் கொண்டவையாக இருக்க வேண்டும் என்றும் அதன் பொருட்டு, எதிர்கால சந்ததிகளுக்கு தக்க வழிகாட்டியாக அவை விளங்கும் என்றும் தாழ்மையாக கோரிக்கை விடுத்தேன். 

ஆனால், என்னைப் போன்ற ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினர் கூட, எடுத்துரைக்கும் கருத்துக்கள் யாருக்கு சென்று அடைகிறது என்பதின் அடிப்படையிலேயே அவற்றை முன்வைக்க வேண்டும். நாம் வாழும் காலத்தின் மிகப்பெரிய வசதியானது, செய்தித்தாள், நாளிதழ்கள் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் என நம்முடைய கருத்துக்களை பல தளங்களில் தமிழக மக்களுக்கு சென்றடையும் வகையில் முன்வைக்க முடியும். எனவே இந்த மாபெரும் வாய்ப்பினை (சில வேளைகளில்) பயன்படுத்தி ஆங்கில ஊடகங்கள் மூலமாக நாடு முழுவதும், முக்கியமாக மத்திய அரசாங்கத்திற்கும், (காலம் முடிந்த பின்பும் கூட சிறப்பு கால நீட்டிப்பின் மூலமாக செயல்பட்டுவரும்) 15வது நிதிக்குழுவிற்கும் சென்றடையும் வண்ணம் பேசப் போகிறேன். நான் முன்வைக்கும் கருத்துக்கள், அவை ஆங்கிலத்திலா அல்லது தமிழிலா என்றல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் புரியவேண்டும் என்ற வகையில் எனது உரையின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலும் இங்கு கொண்டு வந்துள்ளேன். அதை, இங்கு உள்ள எவர்க்கும், அவர்கள் பிரியப்பட்டால், விநியோகிக்கவும் தயாராக உள்ளேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ஆண்டுக்கு ஒருமுறைதான் விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு (ஏனெனில் பேரவை கூடுவதே ஆண்டுக்கு 30 நாட்கள் என்ற வீதத்தில் தான்) எனக்கு கிடைக்கிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி 4 (தொடர்ந்து முன் வைக்கப்படும்) கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் முன்வைக்க விரும்புகிறேன்.

1.      நான் எனது கன்னி பேச்சின் பொழுது குறிப்பிட்டதைப் போல மதுரை  (2000 ஆண்டுகளுக்கும் மேல் பதிவுசெய்யப்பட்ட வரலாறு உடைய) மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நீண்டகால தீர்வு என்பது மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் நகர்புற பெரும் திட்டம் மூலமாக மட்டுமே சாத்தியப்படும். குறைந்தபட்சமாக ஒரு பெரும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2.      அம்ருட் (AMRUT) திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக ஒரு விரிவான புதிய பாதாள வடிகால் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்த ரத்து, ஒப்பந்ததாரர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு தற்காலிக இடையூறுகளை இத்திட்டம் சந்தித்து வருகிறது. மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பல காலமாக தாமதபடுத்தப்பட்ட இத்திட்டத்தை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

3.      மதுரை விமான நிலைய விரிவாக்கம் பல ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதங்களின் காரணமாக தடைபட்டு வருகிறது. அந்த பொறுப்பு தமிழக அரசாங்கத்தையே சாரும். அது குறித்த கேள்விகளை கடந்த 4 ஆண்டுகளில் பலமுறை இந்த பேரவையில் நான் எழுப்பி உள்ளேன். ஆனால், அதற்கான தேவை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏனெனில், பெரிய விமானங்களை இயக்குவதற்கு  DGCA வழங்கிய தற்காலிக சலுகை இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. அந்த துரதிருஷ்டவசமான நிகழ்வு நடக்கும் பட்சத்தில், தற்போதைய பயண அளவு பெரிய அளவில் பாதிக்கப்படும். மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சரும், மாண்புமிகு வருவாய் அமைச்சரும் (மதுரை மாவட்டத்தின் ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்) இணைந்து பணியாற்றி உடனடியாக தேவையான நிலங்களை இந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே கையகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4.      கட்சி வேறுபாடுகளை கடந்து நான் உட்பட பொது கணக்கு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் குழு சந்திப்புகளின் பொழுது, தேர்ந்தெடுக்கப்படாத உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் நமது மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் திறன் நகர திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் எந்தவித கருத்தையோ அல்லது பிரதிநித்துவத்தையோ கேட்காமல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்ற தகவல் தெரியவருகிறது. மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்காமல் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு பொருந்தாத வகையிலும் அவர்களின் நலனுக்கு  முன்னுரிமை அளிக்காத வகையிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முன்னுரிமை, தேர்வு மற்றும் வரைவறிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இருந்தாலும், மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து, திருத்தி அமைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே சென்ற ஆண்டுகளில் செய்ததை போல இந்த ஆண்டும் பேரவைக்கு வெளியே நான் முன்வைத்த சில கருத்துக்களையும் புள்ளிவிவரங்களையும் மாண்புமிகு நிதியமைச்சரின் கனிவான கவனத்திற்கு சமர்ப்பிக்கிறேன். கடந்த ஆண்டுகளைப் போல, எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கும் அதில் உள்ள சில புள்ளி விவரங்களுக்கும் அவர் பதில் அளிக்க விரும்பினால் இந்த அறிக்கை அதற்கு உபயோகமாக இருக்ககூடும்.

தற்பொழுது நிதிநிலை மீதான கவனம். நான் சில முக்கிய விஷயங்கள் குறித்து மட்டுமே மாண்புமிகு நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். நான் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் அவர் சார்ந்த துறை, ரிசர்வ் வங்கி, தணிக்கை குழுவின் அலுவலகம், நிதி ஆயோக் உள்ளிட்ட இதர அரசாங்க அலுவலகங்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமே எழுப்பப்படுகின்றன. மாண்புமிகு நிதியமைச்சர் நான் பயன்படுத்தியுள்ள புள்ளிவிவரங்களில் அல்லது என் கணக்குகளில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கும் பட்சத்தில், தற்போது என் வசம் இருக்கும் தரவுகளை விட, தகுந்த தரவுகள் கிடைக்கப் பெற்றால் மகிழ்ச்சியாக நான் அதை திருத்திக் கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில், சந்தேகங்களைத் தீர்க்க தேவையான கேள்விகளை எழுப்பிய பின்னர், இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ள சில நல்ல அம்சங்கள் குறித்தும் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

கடந்த வெள்ளியன்று ஏறக்குறைய மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக அசாத்திய பலத்துடன், வரலாறு காணாத வகையில் நிதிநிலை அறிக்கை சார்ந்த உரையை பேரவையில் முன்வைத்த மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு முதலில் என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதற்கட்டமாக, இந்த அரசாங்கம் அதன் முழு காலத்தை நிறைவு செய்யாது என்று பலர் நினைத்ததாகவும், அப்படி நினைத்தவர்களின் எண்ணங்கள் உடைத்தெறிய பட்டதாகவும் அவர் கூறினார். அது உண்மைதான். இந்த அரசானது, நான் உட்பட, பலரின் எதிர்பார்ப்புகளையும் மீறி இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது. அதற்கு என் பாராட்டுக்களை இந்த அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே வேளையில் நாம் வாழும் காலம், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிசயமாக, வழக்கத்திற்கு மாறான வகையில் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அந்த வகையில் இந்த காலகட்டம் நமக்கு அளித்த பல ஆச்சரியங்கள் மட்டுமல்லாமல் அதிர்ச்சிகளில், இதுவும் ஒன்று. உதாரணமாக மத்திய அரசின் பிழையான பொருளாதாரக் கொள்கை அவர்கள் 2019ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதை நிச்சயமாக தடுக்கும் என்று பலரும் எண்ணினார்கள். ஆனால் ஆட்சி அமைந்த பின்னர் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். காஷ்மீரில் பல மாத காலமாக நீடித்து வரும் இக்கட்டான சூழ்நிலை யாருமே எதிர்பார்க்காத ஒன்று. அதேபோல CAA/NRC/NPR திட்டம் காரணமாக நாடு முழுவதும் நடக்கும்  போராட்டங்கள் - ஜல்லிக்கட்டு போராட்டங்களை நினைவூட்டும் வகையில் - மத்திய அரசிற்கு எதிராக பரந்து விரிந்து தொடர்ந்து நீடிக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல, தமிழகத்தில் எங்கள் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக 2,05,66082 தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது, தமிழக மக்கள்தொகையில் 25% பேர் அல்லது மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் திமுக முன்னெடுத்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மீண்டும் நிதிநிலை அறிக்கை பக்கம் நம் கவனத்தை திருப்புவோம். தமிழகத்தின் நிதி நிலைமை இது போன்ற ஓர் இக்கட்டான சூழ்நிலையை அடையும் என்பதை யாருமே எண்ணியிருக்க முடியாது. நம் மாநிலத்தின் மொத்த கடன் 4.6 லட்சம் கோடிகளை இந்த ஆண்டின் முடிவில் அடையும் அல்லது பெரியவர்கள் குழந்தைகள் என தமிழகத்தின் ஒவ்வொரு தனி நபர் மீதும் 57800 ரூபாய் தனிநபர் கடன் சுமத்தப்படும்.

நாம் இங்கு எப்படி அடைந்தோம் என்பது எனக்கு மிகவும் தெளிவாக புரிகிறது, ஏனெனில் இது குறித்து கடந்த நான்கு ஆண்டுகளில் எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பின் போதும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். நான் ஏற்கனவே கூறியதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நம் அடிப்படை பிரச்சனை என்பது வருவாய். நம் மாநில மொத்த உற்பத்தியில் வருவாயின் சதவிகிதம் அபாயகரமான அளவிற்கு குறைந்துள்ளது. உறுப்பினர்களின் வசதிக்காக, நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒப்பீட்டளவில் திறன் குறித்து ஆராய வேண்டுமெனில், காலம், மாநிலங்கள், நாடுகள், உத்தேச பணம் போன்றவை தகுந்த அளவீடுகள் அல்ல. ஏனெனில் அனைத்து பணங்களின் (செலாவணி விகிதம் உட்பட) வாங்கும் திறன் மாறிக்கொண்டே இருக்கும். ரூபாயின் வாங்கும் திறனை பணவீக்கம் குறைத்துவிடும். அந்த அடிப்படையில் பல ஆண்டுகள் சார்ந்த ஒப்பீட்டு ஆராய்ச்சி அர்த்தமற்றது.

செயல்திறனை காலம் அல்லது மாநிலங்கள் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்க சரியான அளவுகோல் அக்காலகட்டத்தில் அந்த பகுதி சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை கொண்டே இருக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் மொத்த உற்பத்தி (GSDP) அல்லது தேசிய அளவிலான மொத்த உற்பத்தி (GDP) ஆகியவற்றைக் கொண்டு இருக்க வேண்டும். ஒப்பீடு விதிமுறைகளை குறித்து விவாதித்து வருவதினால் செயல்திறன் சார்ந்த ஒப்பீடுகள் அனைத்தும் 2003 ஆம் ஆண்டு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஏனெனில், இந்திய பாராளுமன்றம் நிதி பொறுப்புணர்வு மற்றும் நிதி மேலாண்மை சட்டத்தை (FRBM Act) அந்த ஆண்டு நிறைவேற்றியது. அதே ஆண்டு தமிழக சட்டமன்றம் நிதி பொறுப்புணர்வு சட்டத்தையும் (FRA Act) நிறைவேற்றியது. அரசாங்க நிதிகளை பொருத்தமட்டில் 2003 ஆம் ஆண்டு என்பது அந்த காலத்திற்கு முன்னரும் பின்னருமான அளவுகோலாக மாறியுள்ளது. அதாவது, கி.மு கி.பி என்று இருவேறு காலகட்டங்களை குறிப்பது போல. இரண்டு காலகட்டங்களின் திறனை ஒப்பிடுவது என்பது ஒரு சட்டம் செயல்படுத்துவதற்கு முன்பாக நடந்த செயல்பாடுகள் குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டபின் ஒப்பிடுவதை போன்றது. இது அனைவரும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் ஒன்று என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற ஆண்டு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதிலளித்த பொழுது இந்த அடிப்படை தத்துவத்தை கருத்தில் கொள்ளாதது துரதிஷ்டவசமானது.

எனவே நான் ஏற்கனவே பலமுறை கூறியதைப் போல நமது அரசாங்கத்தின் வருவாய், மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 3.5% முதல் 4% வரை  சரிந்துள்ளது.

இதற்கு நான் கூறுவதை சான்றாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 2017-18ம் நிதியாண்டு குறித்த தணிக்கை அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.

2017 -2018ம் ஆண்டுக்கான தமிழகத்தின் வரி வருவாய் ரூ.1,46,893 கோடிகள் என 14வது நிதிக்குழு மதிப்பிட்டதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது. இதன் அடிப்படையில் தான் மத்திய வரியில் நமது பங்கு உள்ளிட்ட பல கணக்கீடுகள் நிர்ணயிக்கப்பட்டன. இருந்தும், ஆண்டுக்கான இறுதி கணக்கு வெளியிடப்பட்ட போது வருவாய் உண்மையில் ரூ 93,737 கோடிகள் என்பது தெரிய வந்தது. ரூ 53,156 கோடிகள் பற்றாக்குறை அல்லது மதிப்பீடு செய்யப்பட்டதை விடவும் 36.19% குறைவு. 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி நமது மாநிலத்தின் மொத்த உற்பத்தி (Nominal) ரூ 14,45,227 கோடிகள்.  அதில் 53,156 கோடிகள் என்பது 3.7% (நான் 2017ம் ஆண்டு கூறிய 3.5% முதல் 4% வரை எனும் வரையறைக்குள் இருந்தது).

இதை முன்வைப்பதில் எனக்கு எந்த பெருமையும், மகிழ்ச்சியும் இல்லை. மாறாக இந்த அரசாங்கம் அறிவுரையை ஏற்க தயாராக இல்லை என்பதும் பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதும் எனக்கு கவலையளிக்கிறது. இதுபோன்ற கண்மூடித்தனமான நடவடிக்கை மத்திய அரசாங்கத்தை பின்பற்றும் வகையில் உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் தேவையின் பொருட்டு நாடு முழுவதும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் விநியோகத்தின் பொருட்டு, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு, வரி குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. நாட்டில் வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ளவர்களிடம் பொருளைக் கொண்டு சேர்க்காமல் வசதி வாய்ப்பு அதிகமாக உள்ளவர்களின் வசம் கொண்டு சேர்க்கப் படுகிறது. நிலையை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் சென்ற வழியிலேயே செல்ல வேண்டாம் என்று நிதியமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இனியாவது பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே நான் முன்வைக்கும் அடுத்த கருத்து தவிர்க்க முடியாத செலவினங்கள் மற்றும் கொள்கை சார்ந்த செலவினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்தது.   நாம் அனைவரும் அறிந்தது போல அரசாங்கத்தின் செலவினங்கள் தவிர்க்க முடியாதவை. அதாவது ஓய்வு ஊதியம், சம்பளம், அடிப்படை பராமரிப்பு மற்றும் வட்டி செலவினங்கள் போன்றவை சட்டத்தின் அடிப்படையில் செலவிடப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதற்கு உண்டான விளைவுகள் மிகவும் கடுமையானவை. இந்த செலவினங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டேதான் செல்லும். அதற்கு பணவீக்கம் ஒரு காரணம், நமது கடனும் (அனைத்து அரசாங்கங்களும் மேற்கொள்ளும்) ஒரு காரணம், சட்டரீதியாக சம்பள கமிஷனுக்கு இணங்கி செல்ல வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

சரிந்து கொண்டே செல்லும் வருவாயும் உயர்ந்து கொண்டே செல்லும் தவிர்க்க முடியாத செலவினங்களும் இணையும் ஒரு துரதிஷ்டவசமான நிலை, அரசாங்கத்தை கொள்கை சார்ந்த செலவினங்களுக்கு, நலத்திட்டங்களுக்கு செலவிட முடியாத ஒரு சூழ்நிலைக்குள் தள்ளுகிறது.  எனினும் ஒரு ஜனநாயகத்தில் எந்த அரசாங்கமும் மக்களுக்கு சென்றடையும் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் மீதான செலவினங்களை குறைத்து ஒரு அரசியல் ஆபத்தை சந்திக்க துணியாது. அதன் விளைவாக கொள்கை சார்ந்த செலவினங்களும் உயர்ந்து கொண்டே செல்லும். இவை அனைத்தையும் ஒன்று சேர கருத்தில் கொண்டால் உயர்ந்து கொண்டே செல்லும் வருவாய் பற்றாக்குறைக்கு சிறப்பான வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது புரியும். கடந்த சில ஆண்டுகளாக நாம் இதைத்தான் சந்தித்து வருகிறோம். 2014 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த இக்கட்டான சூழ்நிலை 2016 ஆம் ஆண்டு முதல் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது

கீழேயுள்ள தரவுகளின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நாம் சந்தித்த நிதி பற்றாகுறை குறித்து அறிந்து கொள்ளலாம்.

இதை நீங்கள் கவனித்தால், ஆண்டிற்க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்க்கான நிதி நிலை மதிப்பீடுகள் ஆகியவற்றில் முன்னேற்றத்தை (மாநில மொத்த உற்பத்தியின் ஒரு சதவீதமாக) காணலாம். அண்ணல், இதுபோன்ற ஒரு நல்ல விளைவை நான் எதிர்பார்க்க மாட்டேன் என கூறினாலும் மாண்புமிகு அமைச்சர் என்னை மன்னிப்பார்.  கடந்த சில ஆண்டுகளாக எதிர்நோக்குதல், நிர்வாகம் மற்றும் இறுதிக் கணக்கு ஆகியவற்றில் நான் கண்ட திறனின் அடிப்படியில் மட்டுமே இதை கூறுகிறேன்.

மதிப்பீடுகளுக்கும் உண்மை விளைவுகளுக்கும் இடையேயான இதுபோன்ற மிகப்பெரிய வேறுபாடுகள் இருப்பதால் தான் என்னால் வரவிருக்கும் ஆண்டில் உண்மையில் முன்னேற்றம் இருக்கக்கூடும் என்பதை நம்ப இயலவில்லை. எது எப்படியானாலும் நிதிநிலை மதிப்பீடுகளுக்கு பின்னால் எப்படி செயல்திறன் இவ்வளவு மோசமடைய முடியும் என்ற கேள்வி எழாமலில்லை. என்னுடைய மிகவும் தாழ்மையான கருத்து என்னவென்றால் கடைசி நிமிடத்தில் செய்யப்படும் திட்டமிடாத செலவினங்களின் விளைவே இந்த நிலைக்குக் காரணம். முக்கியமாக 110 விதியின் கீழ் நிதிநிலை அறிக்கைக்கு பின்னர் அறிவிக்கப்படும் திட்டமிடப்படாத செலவினங்கள். அதற்குப்பின் துணை நிதிநிலை அறிக்கை (உதாரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட 7000 கோடி) மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலைக்கு அடிப்படையில் என்ன காரணம் என்பதை தெளிவான புள்ளி விவரங்களுடன் பின்னர் தெரிவிக்கிறேன். தற்போதைக்கு பின்வரும் உண்மை நிலையை எடுத்துரைக்கும் விரும்பத்தகாத கடமை என்னுடையது.

எங்கள் கழகத்தலைவர், பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர், சென்றமாதம் ஆளுநர் உரையின் பொழுது கூறியதைப் போல, எப்படி இது போன்ற இழிவான ஒரு நிதி மேலாண்மை சிறந்த நிர்வாகத்திற்கான விருதை பெறுகிறது என்பதுதான். ஆனால் இங்கு நாம் காணும் விஷயத்தில் உங்கள் தரவரிசை எண் ஒன்று என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை.

இந்த நிதி சீர்கேட்டின் பின்விளைவாக நாம் சந்திக்க நேரும் சில பிரச்சினைகள் பன்மடங்கு உயரும், அவை பொருளாதார புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன

1. மக்கள் நலத் திட்டங்களின் மீதான செலவினங்களை செய்ய தேவையான திறன் குறையும்.

எந்த அரசாங்கமும் தனது கொள்கைகளையும் கணக்குகளையும் எதுவுமே இல்லாமல் ஆரம்பிப்பதில்லை. அதற்கு முந்தைய அரசாங்கத்தின் நிதி மற்றும் கொள்கை சார்ந்த விஷயங்களை தனதாக்கி அதன் பின்னர் அதை உள்வாங்கி/சீர்செய்து/மேம்படுத்தி செயல்படும். அதனடிப்படையில் சரிந்து கொண்டே செல்லும் வருவாய், உயர்ந்து கொண்டே செல்லும் தவிர்க்க முடியாத செலவினங்கள், மக்கள் நலத்திட்டங்களில் மீதான செலவினங்களை செய்ய முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் திறனை குறைத்துள்ளது. பின்வரும் தரவுகள் அதை தெளிவாக எடுத்துரைக்கின்றன.

2. நலத்திட்டங்களில் சிறு முன்னேற்றத்தை அடைய வருவாய் கணக்கில் கடன் பெறுவதற்க்கான அவசியமாக உள்ளது. உண்மையில், சிறிய அளவிலான செலவின உயர்வை காண்பிக்க அரசு வருவாய் கணக்கில் இருந்து கடன் பெற்று வருகிறது என்பதை கீழ்காணும் தரவுகள் விளக்குகின்றன.

இந்த சூழ்நிலையில், 2016ம் ஆண்டிற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட "பரிசுகள்" அனைத்தும் பொங்கலுக்கு குடும்பத்திற்கு 1,000 ருபாய் போன்றவற்றிற்கு முழுமையாக வருவாய் பற்றாக்குறையில் இருந்து மட்டுமே நிதியளிக்கபடுகிறது (மேலும் கடன்), அதன் பொருட்டு நம் எதிர்கால சந்ததியின்(நம் குழந்தைகள்) மீது  இந்த கடன் சுமை திணிக்கப்படுகிறது.

3. வருவாய் ஈட்டாத, உற்பத்தி இல்லாத கடன் அளவு விரைவாக உயர்ந்ததாலும், FRA (2003) நிதி பற்றாக்குறை அளவுகோலின் படி  முதலீடுகளுக்கான கடனை பெறுவதில் சிக்கல்கள் எழும். அதீதமாக சந்தை பாதிக்கப்படும்.

4. அதன் விளைவாக கடனின் அளவும் வட்டி செலவினங்கள் அளவும் விரைவாக அதிகரிக்கும்

5.      அதன் விளைவாக வளர்ச்சிக்கான முதலீடுகளில் மந்தநிலை எதிரொலிக்கும்.

6. முடிவாக, குறைவான முதலீடுகள் காரணமாக வளர்ச்சியே பாதிக்கப்படும் (% of GSDP)

 

அடிப்படை செயல்திறன் மதிப்பீடுகளில் FRA (2003) சீர்கேடு - கடன்/மொத்த உற்பத்தி விகிதம், வட்டி/மாநில சொந்த வருவாய் மற்றும் வட்டி/மொத்த வருவாய் புள்ளிவிவரங்கள் - சட்டத்தின் நோக்கத்தையே குலைக்கும்.

 இந்த கூட்டு நடவடிக்கைளின் மூலமாக ஒவ்வொரு தமிழனின் தலையிலும், அவர்கள் குழந்தைகள் உட்பட ரூ 57, 500 ஏற்றப்பட்டு உள்ளது.

 இப்போது, மாண்புமிகு நிதியமைச்சர் மற்றும் அவரது குழு தேவையில்லாத பயத்தை ஏற்படுத்தி ஒருசார்பான தாக்குதலில் ஈடுபடுவதாக என்னை வர்ணிக்க கூடும். எனவே, முன்பு போலவே, என் வாதத்தை இரு "சார்பற்றவர்கள்" உதவியுடன் கருத்தை முன்வைக்கிறேன் - ரிசர்வ் வங்கியின் வருடாந்திர மாநில நிதி குறித்த அறிக்கை மற்றும் 15வது நிதிக்குழு. பின்வரும் தரவுகள் நம் மாநிலம் அண்டை தென்னகத்து மாநிலங்களை விட மோசமாக செயல்படிருகிறது என்பதை தெளிவுபடுத்தும் - சில ஆண்டுகளுக்கு முன் வரை நாம் அவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்தோம் என்பது வரலாறு.

மத்திய அரசு ஏற்கனவே பல வகைகளில் நம் மாநிலத்தை வஞ்சித்து உள்ளது என்பதை நம் பேரவை அங்கீகரிக்கும். அவற்றுள் மிகவும் கொடிய வஞ்சனை  15வது நிதிக்குழுவின் செயல்பாடுகள். மக்கள்தொகை கணக்கை பல முயற்சிகளின் பயனாக குறைத்த நம் மாநிலம்  1971 மக்கள்தொகை கணக்கெடுப்பை புறக்கணித்து 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை மட்டும் கருத்தில் கொள்வதை, குறிப்பு விதிமுறைகள் எடுத்துரைத்ததை எதிர்த்து நாம் முறையிட்டோம். அன்றைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதற்கு செவிமடுத்து (2018 வரை) திருத்தங்களை மேற்கொள்ள மறுத்துவிட்டார். அனால், 2019ம் ஆண்டு அகஸ்ட் மாதம், நிதிக்குழுவின் காலம் 60 நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அதன் காலம் நீட்டிக்கப்பட்டது - ஒரு முறையல்ல, இருமுறை (2020 அக்டோபர் வரையில்).

காயத்தின் வடு ஆறுவதற்குள்ளாக, மத்திய நிதியமைச்சரிடம் ஜனவரி 2020ல் சமர்பிக்கப்பட்ட 15வது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கையில் மக்கள்தொகை அடிப்படையிலான செயல்திறன் என்ற புதிய மதிபீட்டை அறிமுகம் செய்து, மக்கள்தொகையை கட்டுபாட்டில் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு தண்டனை போலவும் மக்கள் தொகையுடன் கணக்கிடுகையில் மிகவும் நல்ல விதத்தில் மக்கள்தொகைக்கு தொடர்புடையது போலவும் காட்சியளிக்கிறது (எதிர்மறையாக தொடர்புடையது போலல்லாமல்).

பதினைந்தாவது நிதிக்குழு ஏற்படுத்திய விளைவுகள் மீது பல தரப்பட்ட பார்வைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், நம் மாநிலத்தின் நிதி மேலாண்மை எந்த அளவு மோசமாக இருந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக 25 ஆண்டுகளில் முதல்முறையாக, நமது மாநிலத்தின் வரி பங்கீடு உயர்ந்துள்ளது. அதேசமயம் மீதமுள்ள நான்கு தென்னகத்து மாநிலங்கள் அதாவது அந்திர பிரதேஷ் கேரளா கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கோணத்தில் சொல்லவேண்டுமனில் நமது அண்டை மாநிலங்களை விடுத்து நம்முடைய நிதி செயல்திறனை பொருத்தவரை நாம் பிஹர், மத்ய பிரதேஷ் உத்தராகண்ட் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுடன் இணைந்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக நம் மாநிலத்தில் நிதி செயல் திறனுக்கு இதை விட பெரிய அங்கீகாரம் இருக்காது. கர்நாடகா போன்ற மாநிலத்துக்கு இணையாக இருந்த நாம் தற்பொழுது மத்திய பிரதேசம் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு இணையாக உள்ளோம். இது மத்திய அரசும் இந்தியா டுடே ஊடகமும் அளிக்கும் சிறந்த ஆட்சி/நிர்வாகம் போன்ற விருதுகளை தாண்டி நாம் கவனிக்க வேண்டிய தகவலாக இருப்பதாக உணர்கிறேன்.

நான் ஏற்கனவே கூறியதை போல, இந்த நிதிநிலை அறிக்கையில் இடபெற்றுள்ள சில நல்ல அம்சங்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

முதலாவதாக, சென்னை பொருளியல் பள்ளி தனது வளாகத்தில் ஒரு பொது நிதிநிலை அராய்ச்சி மையம் அமைக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை பாராட்டுகிறேன். இது மிகவும் அவசியமான காலத்திற்கேற்ற முடிவு. முழுமையான செயற்பாட்டிற்கு வந்த பின்னர் எதிர்கால நிர்வாகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்.

இதைவிட முக்கியமாக, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) மின் ஆளுமை முயற்சியை நான் மனதார பாராட்டுகிறேன். முன்னேற்றத்திற்கு ஏற்ப அரசாங்க செயல்பாடுகளில் முக்கியமாக தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை  மேற்கொள்ள இது நிச்சியம் வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.

முன்னாள் IAS அதிகரி திரு. S. ஆதிசேஷையா அவர்களின் தலைமையில் செயல்படும் செலவின சீரமைப்பு குழு அளித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளையும் அதன் செயல்பாட்டையும் எதிர்நோக்கி உள்ளேன். அரசாங்க செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அதன் மூலம் அடைய முடியும் என்றும் நம்புகிறேன்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிகளின் நலனிற்காகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர்மரபினர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டதை பாராட்டும் வேளையில், பொது கணக்கு குழு தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் துரைமுருகன், இரு கட்சிகளையும் சார்ந்த குழுவின் சக உறுப்பினர்களான, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் TRB ராஜா, உதயசூரியன், டிஜிபி நடராஜ், டாக்டர் வி.பி.பி பரமசிவம், பி.வி பாரதி மற்றும் குன்னம் ராமச்சந்திரன் என அனைவரின் சார்பாகவும் நான் முன்வைக்க விரும்புவது, மாநிலம் முழுவதும் பல தங்கும் விடுதிகள் பல துறைகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளும், நிதித்துறையின் உள்ளாட்சி தணிக்கை குழுவும் இந்த விடுதிகளின் செயல்பாடுகள் மீதான தங்கள் மதிப்பீட்டையும், தணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கையான சமூகநீதியை நிலைநாட்ட இது மிகவும் முக்கியம் வாய்ந்தது. பொதுக் கணக்குக் குழு நேரில் சென்று பார்வையிட்ட பல விடுதிகளில், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூட மிகப்பெரிய அளவிலான முன்னேற்றம் தேவை என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.

இப்பொழுது என்னுடைய கடைசி முக்கிய விபரம். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் கடைசி பக்கத்தில், இடைப்பட்ட கால நிதிநிலவர திட்டத்தில் (MTFP) ஒரு ஆர்வத்தை கூட்டும் அம்சம் உள்ளது. அதிலுள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் வருவாயாக இருந்தாலும் சரி, செலவினமாக இருந்தாலும் சரி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது ’21-’22 மற்றும் ’22-’23 ஆகிய ஆண்டுகளுக்கான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முதல் பார்வையில், இது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வளர்ச்சி விகிதம் 5% முதல் 10% வரை மட்டுமே இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் திடீரென்று 14% என நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது ஏன் என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஆனால், நம் நிதித்துறை எதிர்நோக்குதலில் முன்னேற்றம் அடைய முயற்சி செய்துவருகிறது என்பது எனக்கு புரிந்தது. இந்த மதிப்பீடுகளை அந்த ஆண்டுகளின் போது, புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்பதையும், அதற்குத் தலைவராக, எங்கள் தலைவரும் எதிர்கால முதலமைச்சருமான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இருப்பார் என்ற அடிப்படையிலும் தெளிவாக செய்துள்ளனர்.  

பேரவைத் தலைவர் அவர்களே, என் தலைவருக்கும் உங்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி கூறி, என் சக உறுப்பினர்களுக்கும், பேரவையில் இவர்களுடன் பணியாற்றுவதை என் பாக்கியமாக கருதுகிறேன், அவர்களின் நேரத்திற்கும், கவனத்திற்கும் நன்றியைக் கூறி என் உரையை முடிவு செய்கிறேன்.

வணக்கம்.

 

 

 Articles Year Wise: