/

காஸ்கேட் அமைப்பு மாநாட்டில் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் உரை

Published Date: March 23, 2019

ஆளுநர், மாநாட்டு தலைவர், நிர்வாகிகள், என்னை அறிமுகப்படுத்தி பேசிய திரு. வேணுகோபால் மேனன் மற்றும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் என் காலை வணக்கத்தையும் உங்களுடன் உரையாட வழங்கப்பட்ட இந்த வாய்ப்பிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவனாக இருந்த காலத்தில் இருந்தே, இன்டெராக்ட் மற்றும் ரொட்டராக்ட் சங்கங்களுடன் இருந்த தொடர்பு காரணமாக எனக்கு ரோட்டரியுடன் ஓரளவு பரிச்சியம் உள்ளது. ஒரு மக்கள் சேவகனாக, மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் அரசாங்கங்களே செய்ய முடியாது என்றும், நம் சமுதாய முன்னேற்றத்திற்கு ரோட்டரி போன்ற சங்கங்கள் முக்கியம் என்பதும் எனக்கு புரிகிறது. நான் இங்கு அழைக்கப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், கோவை வந்ததிலும் எனக்கு மகிழ்ச்சியே. இங்கே ஒளிபரப்பப்பட்ட கானோளிகளில் நீங்கள் கண்ட நீதி கட்சி தலைவர்கள் பலர், நான்கு ஐந்து தலைமுறைகளாக கோவைக்கும் என் குடும்பத்திற்குமான பிணைப்பு ஆழமானது. நான் லாரென்ஸ் லவ்டேல் பள்ளியில் தான் படித்தேன், எனவே நான் இங்கு பலமுறை வந்துள்ளேன். 30 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்தப்பின், இந்திய திரும்பினேன். 2012-13ம் ஆண்டில் ஒரு CII நிகழ்ச்சியில் உரையாற்ற வந்ததில் இருந்து பலமுறை நான் கோவை வந்துள்ளேன். ஆனால் நான் இன்று இங்கு வந்ததில் இரு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, சென்ற மாதம் ICAI நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தேன், கடந்த ஆண்டு PSG கல்வி குழுமத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தேன், இப்படி நான் அடிக்கடி கோவை வருவதால், உங்கள் தொகுதி கோவையா அல்லது மதுரையா என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த மாவட்டம் முழுவதிலும் ஒரேயொரு திமுக சட்டமன்ற உறுப்பினர் தான் உள்ளார் என்பதால் நான் இங்கு வருவதில் தவறில்லை என்று பதிலளித்தேன்.

இரண்டாவதாக, இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, ஒரு நல்ல கலந்துரையாடல் இருக்க வேண்டிய நிலையில், என்னை இங்கு பேச அழைத்துள்ளார்கள். ஆனால் நான் அதற்கு சரியானவன் அல்ல. ஏனெனில் நான் பொதுவாக மாநில சுயாட்சி, ஜனநாயகத்தின் நிலை, தமிழகத்தின் நிதிநிலை போன்ற மிகவும் தீவிரமான தலைப்புகளிலேயே உரைகள் நிகழ்த்தி உள்ளேன். எனவே இந்த மாநாட்டில் எந்த தலைப்பில் நான் உரை நிகழ்த்துவது என்று மாநாட்டு தலைவருடன் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தபோது தற்பொழுது சமூகத்தில் நிலவும் ஒரு பெரிய விவாதமான கோவில்களை அரசிடம் இருந்து மீட்பது குறித்து பேசலாம் என்று முடிவு செய்தேன்.

எனவே நான் தங்களுடன் தற்பொழுது ஏன் கோவில்கள்  அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறித்து  முதற்கட்டமாக பேசலாம் என்று முடிவு செய்துள்ளேன். இதுபோன்ற ஒரு நிலையில் நாம் ஏன் உள்ளோம் என்பது குறித்து பேசினால், இந்த விவாதத்தை பற்றி சிறிது அறிந்துகொள்ள உதவும். என் கவலை என்னவென்றால், தொலைக் காட்சியிலும் சரி பொது இடங்களிலும் சரி நிறைய சத்தம் கிடைக்கிறதே ஒழிய, எந்தவிதமான தகவலும் கிடைப்பதில்லை.

எனவே சிறிது பின்னோக்கி சென்று நம் வரலாறு குறித்தும் இயற்றப்பட்ட சட்டங்கள் குறித்தும் அவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பது குறித்தும் சிறிது பார்ப்போம்.  கோவில்களை மீட்டெடுப்போம் எனும் இந்த இயக்கம் குறித்து விவாதிப்பதற்கு முன் அதற்கான காரண காரியங்களை அறிந்து கொள்வோம்.

நம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நாம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பல ஆயிரம் ஆண்டு வரலாற்றை உடைய, பல மன்னர்களை, பலவிதமான அரசாங்கங்களை, படையெடுப்புகளை சந்தித்த ஒரு இனம் என்பது புரியும். எனவே நாம் இன்று பார்ப்பது பல காலகட்டங்களில் பலவிதமான பரிணாமங்களை கடந்து வந்த ஒரு ஒரே ஒரு புள்ளி தான். இந்தியா ஒரு ஜனநாயக நாடக 1947ஆம் ஆண்டு உருவான வரை உள்ள ஒரு புள்ளி.

அதை மேலும் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தால் நம் தமிழகம், இன்று நாம் காணும் நம் மாநிலம், 2000 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய சேர சோழ ராஜ்யங்களுக்கு இடையே இருந்தது. காலங்கள் செல்ல செல்ல சிறிது சிறிதாக பல மாற்றங்கள் நம்மை நோக்கி வந்தது. கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு, முகலாய அரசர்களின் படையெடுப்பு என்றும் அதன்பின்னர் ஏகாதிபத்திய அரசுகளான போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சு அரசாங்கங்கள், பிரிட்டிஷ் அரசாங்கங்கள் என்றும் மாறியது. ஒரு காலகட்டத்தில் மதராஸ் மாகாணத்தின் பெருமளவு பகுதி கிழக்கிந்திய கம்பெனியினால் நிர்வகிக்கப்பட்டது. ராபர்ட் கிளைவ் அதை நிர்வகித்தார். நாம் இன்று காணும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அவரால் தான் நிறுவப்பட்டது.

அதன் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் அனைத்து உடைமைகளையும் இங்கிலாந்து அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அதன் பின்னர் நாம் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் ஒரு அங்கமாக இருந்தோம். அதன் பின்னர் ஒரு ஜனநாயகமாக உருவேடுத்தோம். எனவே, பொது சொத்துக்கள் அதாவது அரண்மனைகள், நிலங்கள், பழமையான கோவில்கள், இவற்றை நிர்வகிக்கும் உரிமை பல காலத்தில் பலரிடம் இருந்து வந்தது.

உதாரணமாக, நான் மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பாண்டிய அரசர்கள், சேர அரசர்கள் நிர்வாகத்தினர். அதன் பின்னர் கில்ஜி அரசர்களிடம் வந்தது. அதன் பின்னர் விஜயநகர அரசர்களால் அது மீட்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அது கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தின் நிலங்களில் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பின்னர் அது இங்கிலாந்து அரசின் ராஜ்யத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. தற்போது இந்திய அரசாங்கத்தின் நிலங்களுக்கு உட்பட்ட ஒரு பகுதியாக உள்ளது.

எனவே நம் வரலாற்று உடமைகள், அதாவது அரண்மனைகள், நிலங்கள் அருங்காட்சியகங்கள், கட்டுமானங்கள், கோவில்கள் என  ஒரு காலத்தில் எவையெல்லாம் ஒரு அரசருக்கு உடைமையாக இருந்தனவோ அவையெல்லாம் தற்பொழுது ஒரு ஜனநாயகத்தில் மக்களின் உடைமைகளாக இருக்கின்றன. ஏனெனில், அதுதான் ஒரு ஜனநாயக நாட்டின் வரைமுறை. இதுபோன்ற சூழ்நிலைகளில் பலமுறை கைமாறிய இந்த சொத்துக்கள் வரலாற்றின் காரணமாக மக்களின் உடைமைகளாக இருக்க வேண்டிய இந்த சொத்துக்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கைகளில் உள்ளது இயற்கையானதே.

ஆனால் இது அவ்வளவு எளிமையாக நடந்து விடவில்லை. இங்கிலாந்து அரசாங்கத்தின் கீழ் ஒரு விதமான பிளவு இருந்தது. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உடைமைகள் மற்றும் கிருத்துவ மதத்தை சார்ந்தவர்கள் உடமைகள் என்று இருவேறு விதமாக பிரிக்கப்பட்டிருந்தது.

ஏனெனில் ஏகாதிபத்திய அரசுகள் பெரும்பாலும், அதாவது இங்கிலாந்து பிரான்ஸ் போர்ச்சுகீசிய அரசுகள் இவை அனைத்திலும் தேவாலயங்கலின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

இங்கு உள்ளவர்களில் எத்தனை பேர் வாடிகன் நகருக்கு சென்று உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. உலகின் 60 நாடுகளுக்கும் மேல் நான் சென்றுள்ளேன். ஆனால் வாடிகன் நகரில் நான் கண்ட கட்டுமானங்களும் கட்டிடங்களும் மிகவும் புகழ் மிக்கவை. 200 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இயக்கம் ரோமாபுரி அரசரை, புனித ரோமாபுரி அரசராக மாற்றும் அளவிற்கு வளர்ந்து நின்றது.

எனவே ஏகாதிபத்திய அரசுகள் பலவற்றில் அரசாங்கங்களை விட தேவாலயங்களை அதிகாரம் உடையவர்களாக இருந்தனர்.  தமிழகத்தில் உள்ள தேவாலயங்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆளுமைக்கு முன்னர் இருந்த தேவாலயங்கள், எவையெல்லாம் நாட்டுடமையாக்க படவில்லையோ ஆர்கிடெக்சர் சர்வே ஆப் இந்தியாவினால் நிர்வாகிக்கப் படவில்லையோ அவையெல்லாம் சீரழிந்து நிர்கதியாக நிற்கின்றன.

தனுஷ்கோடிக்கும் தரங்கம்பாடிக்கும் சென்றவர்கள் பலர் அங்கு பல தேவாலயங்கள் சீரழிந்து உடைந்த நிலையில் உள்ளதை காணலாம். ஏனெனில் அவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைவிடப்பட்டவை. எனவே எந்த நிர்வாகமும் இல்லாமல் அவை சீரழிந்து விட்டன.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமே உருவாக்கிய தேவாலயங்கள் இன்றளவிலும் பேணிப் பாதுகாக்கப் படுகின்றன.  நம் நாட்டை விட்டு செல்வதற்கு முன் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தேவாலயங்களை நாட்டுடமை ஆக்கும் சட்டத்தை செயல்படுத்தி  இந்தியாவில் ஒரு அதிகார வரம்பை நிறுவி அதன் மூலமாக இந்த தேவாலயங்களை நிர்வகிப்பதற்கான திட்டங்களை வகுத்து சென்றனர். எனவே தேவாலயங்கள் ஒன்று சீரழிந்தன இல்லை எனில் நல்லவிதமான நிர்வாகத்தினுள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசின் முழு கவனமும் பொருளாதார மேம்பாட்டினை நோக்கியே இருந்தது. அவை சமூக இன்னல்களை குறித்து கவலைப்படவில்லை. அப்படியே சமூக கவலைகள் குறித்து கவலைப் பட்டாலும் அதன்மூலமாக பொருளீட்டும் யுத்திகளை மட்டுமே கையாண்டனர். நம்முடைய ஆதாரங்களைக் கொண்டு சென்று அதன் மூலமாக பொருட்களைக் தயாரித்து இங்கு வியாபாரம் செய்தனர். எனவே இங்குள்ள மதம் சார்ந்த உடமைகள் மீது அவர்கள் கையை வைக்க மிகவும் யோசித்தனர். இஸ்லாமிய உடைமைகளாக இருந்தாலும் சரி ஹிந்து மத உடைமைகளாக இருந்தாலும் சரி அவற்றுள் தலையிட அவர்கள் மிகவும் யோசித்தனர். 

 

மிகவும் பொறுமையாக மிகுந்த கவனத்துடன் தான் அவர்கள் முதல்முறையாக 1817ம் ஆண்டு endowment act எனும் சட்டத்தை இயற்றினர். அதன் மூலமாக பொது உடமைகளில் எவ்வாறு நிர்வாகம் நடக்கின்றது என்பது குறித்த தகவல்களை சரி பார்க்க துவங்கினர்.

அதன் பின்னர் ஏறத்தாழ 60 முதல் 70 ஆண்டுகள் வரை எதுவும் பெரிதாக நடக்கவில்லை. ஏனெனில் ஒரு அரசாங்கம் வீழ்ந்து அதன் பின்னர் அங்கு ஏதும் புதுவிதமான சட்டங்கள் இல்லாத பட்சத்தில் எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலை ஏற்படும். அதுதான் இங்கும் ஏற்பட்டது. 1885-86ஆம் காலகட்டத்தில் முதல் முதல்முறையாக ஒரு ஆறு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்து சமயத்தைச் சார்ந்த 6 பேர், பாஷ்யம் அய்யங்கார் முத்துசாமி ஐயர் உட்பட 6 பேர் அதில் இடம் பெற்றனர். இந்த ஆணையம் கோவில்களில் நிர்வாகம் எந்த நிலையில் உள்ளது, சரியாக உள்ளதா அல்லது ஏதேனும் புதிய நிர்வாக முறை தேவைப்படுகிறதா என்று பார்ப்பதற்காக அமைக்கப்பட்டது.

ஆணையம் அதன் ஆய்வை முடித்து விட்டு பெரும்பான்மையான கோவில்களில் பெருமளவிற்கு நிர்வாக திறன் அற்றதாகவும் மாற்றங்கள் வரவேண்டும் என்றும், இதற்குத் தேவையான சட்ட வழிமுறைகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவித்தது.

 அப்பொழுதும் கூட இங்கிலாந்து அரசாங்கம்  நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான உறுதியை காட்டவில்லை. மாறாக உப்பு சப்பில்லாத சில சீர்திருத்தங்களை முன்வைத்தனர். அதையும் சிலர் எதிர்த்தனர். அவை எதிர்க்கப்பட்ட காலகட்டத்தில் ஹிந்து நாளிதழ், அனைவரும் அறிந்ததை போல் பார்ப்பன நாளிதழகவே, கருதப்பட்ட ஒரு நாளிதழ் எதிர்த்தவர்களை மிகவும் கடுமையாக சாடியது. சீர்திருத்தங்களை எதிர்ப்பது தண்டனை சட்டத்தை எதிர்ப்பது போன்றதாகும். குற்றமே நடக்காது என்று கூறுவதை போன்றதாகும் என்று கருத்துக்களை முன்வைத்தது.

சுதந்திரப் போராட்டத்தை அமல்படுத்துவதற்காக 1920ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கம் சில சீர்திருத்தங்களை மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் என்ற பெயரில் முன்வைத்தது. அதன் மூலமாக இரட்டையாட்சி முறை செயல்படுத்தப்பட்டது. அதில் இங்கிலாந்து அரசை சார்ந்தவர்கள் முக்கிய பணிகளான வருவாய் உள்ளிட்டவற்றை தங்களிடம் வைத்துக் கொண்டு இந்திய அரசாங்கத்திடம் பொதுப்பணி போன்றவற்றை ஒப்படைத்தனர். அப்பொழுது 1920ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நீதிக்கட்சியின் அரசாங்கம். நீதிக்கட்சியின் அரசாங்கம் சமூக சீர்திருத்த அரசாங்கமாகவே இருந்தது. அதை போல் ஒரு சீர்திருத்த அரசாங்கம் அதற்கு முன்னரும் இருந்ததில்லை அதற்குப் பின்னும் இருந்ததில்லை.

ஐந்து வருட ஆட்சியில் அவர்கள் அடிப்படையாக சமூகத்தை மாற்றினார். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அது டெல்லியிலும் இல்லை அவ்வளவு ஏன் இங்கிலாந்தில் கூட இல்லை. தலித்துகளுக்கு அதுநாள் வரையில் தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்பட்ட அவர்களுக்கு ஆதிதிராவிடர்கள் எனும் கண்ணியத்தை அளித்தனர். எங்களுக்கு முன்பே நீங்கள்தான் இங்கிருந்தீர்கள், உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று கூறி மாண்பை அளித்தார்கள். சமூக அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. 3% உள்ள மக்கள் 90%  அரசாங்க வேலைகள் அனுபவிக்கக்கூடாது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அவர்களுடைய சமுதாய பிரதிதுவந்தின் அடிப்படையில் அவர்களுக்கு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டனர். 1920-ஆம் ஆண்டு, பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகள் இருவருக்குமே கட்டாய கல்வி சட்டம் இயற்றப்பட்டது. அப்பொழுதே ஒரு சமுதாயம் முன்னேற எது தேவை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். முதல் முறையாக மதராஸ் மாகாணத்தில் பிட்டி தியாகராயர் அவர்கள் இலவச மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். அதன் மூலமாக கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த முனைந்தார்.

நான் கூறியது போல் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட ஒரு அரசாங்கம்  நீதி கட்சி அரசாங்கம். ஆனால் கோவில்களை தேசியமயமாக்குவதில் அவர்கள் தடுமாறினர். 1921ம் ஆண்டு முதல் முறையாக அந்த சட்டம் முன்வைக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆளுநரின் மேஜையில் மேல் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்து, அவர் அதை நிராகரித்து விட்டார். இந்த சட்டத்தின் பின்னால் பெரும்பான்மையை கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.  நீதிக்கட்சியின் பல முன்னோடிகள் என் தாத்தா உட்பட தீவிர இந்து பக்தர்களாக இருந்தனர். பலருக்கு நிலங்கள் பெருமளவில் இருந்தன. அவர்களுடைய சொந்த கோவில்கள் இருந்தன. அந்த கோவில்களில் அவர்கள் தர்மகர்த்தாவும் இருந்தனர் இந்த சட்டத்தை செயல்படுத்தினால் நமக்கு இதன் மீது உள்ள அதிகாரம் போய்விடும் எனும் கவலை அவர்களுக்கு இருந்தது.

இந்து சமயத்தில் மதத்தையும் சாதியையும் பிரிப்பது மிகவும் கடினமான ஒன்று. கோவிலுக்குள் நுழைவது வரை எல்லாவற்றிலும் சாதி முன்னிற்கும். முதல் வாயில் வரை யார் வரலாம், இரண்டாவது வாயில் வரை யார் வரலாம், மூன்றாவது வாயில் வரை யார் வரலாம் என்ற அளவிற்கு பல வரைமுறைகள் இருந்தன. பல முயற்சிகளுக்குப் பிறகு 1925 ஆம் ஆண்டு இந்த சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறார்கள். என் தாத்தா விட்டுச் சென்ற பல தரவுகள் என்னிடம் உள்ளது. அவற்றுள் சில பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதுவரை நான் செவிவழியாகக் கேட்ட ஒரு கதை இது, மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பனகல் ராஜா அவர்கள் ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு சென்று இருந்தார். அவரிடம் கோவில் தர்மகர்த்தா மற்றும் தலைமை பூசாரி இருவரும் இந்த சட்டம் நெடுநாட்களாக விவாதிக்கபட்டுவருகிறது எங்களைப் பொறுத்தவரையில் இது சரியான சட்டம் அல்ல, எனவே இதை நீங்கள் அனுமதிக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அப்படி நீங்கள் அனுமதித்து தான் ஆக வேண்டும் என்றால் எங்கள் கோவிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்றும், அரசியலில் பல செலவுகள் இருக்கும் இதை எங்கள் நல்லெண்ணத்தின் ஒரு அடையாளமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறி அவரிடம் ஒரு பெரிய பெட்டியை வழங்கினார்கள். 1925ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.  பல நிலங்களை இன்றளவிலும் உரிய ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் அந்த ஆண்டில் எங்களிடமிருந்து இடங்களுக்கு நாங்கள் 15,000 ரூபாய் வரி செலுத்தினோம். அன்றைய காலகட்டத்தில் பனகல் ராஜா அவர்களிடம் வழங்கப்பட்ட அந்த பெட்டிக்குள் ஐந்து லட்சம் ரூபாய் இருந்தது என்று கூறப்படுகிறது. நினைத்துப் பாருங்கள் அந்த காலகட்டத்தில் ஐந்து லட்சம் ரூபாய். அதன் மதிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று.

உடனடியாக சென்னை திரும்பிய பனகல் ராஜா அவர்கள், கட்சி கொரடவான என் தாத்தா பி.டி.ராஜன் அவர்களை அழைத்து  இந்த சட்டத்தை நாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஒரே ஒரு கோவிலில் இந்த அளவிற்கான  கணக்கில் வராத சொத்துக்கள்  உள்ளது என்றால் தமிழகம் உள்ளது தமிழகம் முழுவதும் மதராஸ் மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் எந்தளவிற்கு சொத்துக்கள் இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா என்று கேட்டு உடனடியாக அனைவரையும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அழைப்பு விடுக்க சொன்னார். அதன் அடிப்படையில் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அனைவரும் எதிர்பார்த்தது போல் அதன் மீது 40 வழக்குகள் பதியப்பட்டன. அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் எல்லா வழக்குகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டது. சிலர் இதை அரசியல் அறிக்கை என்று நினைக்கலாம். ஆனால் நான் மேலும் சிறிது கூற விரும்புகிறேன்.

1937 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறது அதன்பின்னர் 1937 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை எந்த ஒரு திராவிட கட்சியும் திராவிட கட்சியும் அரசில் பங்கேற்கவில்லை. அந்த காலகட்டத்தில் மதராஸ் அரசாங்கமானது ராஜாஜியின் அவர்களுடைய சுதந்திர பார்ட்டி அல்லது காங்கிரஸ் அரசாங்கம் முதலியவையே இருந்துவந்தன.

ஆச்சாரமான பார்ப்பனரான திரு ராஜாஜி அவர்கள் 1939ஆம் ஆண்டு அனைவரும் கோவிலுக்குள் நுழையும் சட்டத்தை இயற்றுகிறார். 1951ஆம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் அரசாங்கம் நடந்த பொழுது அன்றைய காங்கிரஸ் அமைச்சர் டி எஸ் எஸ் ராஜன் அவர்கள் அவையில் நின்று ஆற்றிய உரையில் நேரு அவர்கள்  ஒரு கோவில்கூட தனிநபர் சொத்தாக இருக்காது 100% அனைத்து கோவில்களும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுப்பார் என்று கூறுகிறார். நேரு அவர்கள் எந்த அளவிற்கு அது குறித்து சிந்தித்து உள்ளார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பழைய வரலாறு பற்றி ரொம்ப பேசவேண்டாம். பத்து வருடங்களுக்கு முன்னர் செல்வோம். பத்து வருடங்களுக்கு முன்னர் மெட்ராஸ் மாகாணத்தையோ, தென்னிந்தியாவையோ சாராத ஒரு மாநிலம் பழமையான பெருமைமிக்க புகழ்மிக்க கோவில்களை அரசுடமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. அது குறித்து பேரவையில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் எதற்காக இது செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அரசு அளித்த பதில்

"அரசு பழமை மிக்க பெருமை மிக்க கோவில்களில் முக்கியமான ஆலயங்களில் திரட்டப்படும் வருமானத்தை சரியான முறையில் நிர்வகிக்கவும் இந்த கோவில்கள் சரியான முறையில் செயல்பட்டு பக்தர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் உரிய முறையில் வசதிகள் செய்து கொடுக்கவும் இதை செய்கிறோம்" என்று கூறியுள்ளது. இது நடந்தது குஜராத் மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டில். அப்பொழுது குஜராத்தின் முதல்வர் திரு நரேந்திர மோடி அவர்கள், தற்போதைய பாரதப் பிரதமர். எனவே நாம் இதில் தெளிவாக இருக்க வேண்டும். இவை அரசியலுக்கு அப்பாற்பட்ட கொள்கைகள்.

தற்பொழுது நான் சில விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன். தமிழகத்தில் 38500 கோவில்கள் உள்ளன. ஏறத்தாழ 4 லட்சம் ஏக்கர் நிலங்கள்  இந்த கோவில்களுக்கு சொந்தம். தமிழகத்தில் அரசாங்கத்திற்கு அடுத்து அதிகப்படியான நிலங்கள் உள்ளது இந்த கோவில்களுக்கு தான். 34500 கோவில்களில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது , 400 கோயில்களில் சராசரியாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு வருடத்திற்கு வருமானமாக ஈட்டப்படுகிறது. ஆனால் இந்த 38,000 கோவில்களை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் எத்தனை கோயில்கள் உள்ளன என்று நினைத்து பாருங்கள். என் தொகுதியில் தெருக்கு மூன்று கோவில்கள் உள்ளன. நான் ஒவ்வொருமுறை பிரச்சாரத்திற்கு செல்லும் முன் அந்த தெருவில் உள்ள ஒரு கோவிலுக்கு என் வார்டு செக்கரட்டரி உடன் சென்று  சென்றுவிட்டு தான் பிரச்சாரத்திற்கு கிளம்புவேன். இப்படி அரசாங்கத்தின் பார்வையில் வராத கோவில்கள் பல லட்சங்கள் உள்ளன. இதற்கும் மேலாக நான் பிறப்பால் ஒரு முதலியார். முதலியார்களுக்கு என காஞ்சிபுரத்தில் ஒரு மடம் உள்ளது. அது தவிர குன்றத்தூர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் என பல நிலையங்களில் எங்கள் பங்கும் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை என் தாத்தா புதுப்பித்த பொழுது காஞ்சி பெரியவர் அவர்கள் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மடமும் அரசு பார்வைக்கு கீழே அல்ல. தமிழகம் முழுவதும் பார்த்தோமேயானால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதீனங்களும் பல லட்சம் கோவில்களும் அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகின்றன. பழமையான கோவில்கள் ராஜாக்களால் கட்டப்பட்ட கோவில்கள் பெருமை மிக்க கோயில்கள் எவை எல்லாம் மக்களின் உடைமைகளாக கருதப்பட வேண்டுமோ அதை மட்டுமே அரசாங்கத்தினால்  நிர்வகிக்கப்படுகிறது.

அடுத்த கேள்வி. திரு வேணுகோபால் மேனன் அவர்கள் இதை என்னிடம் கேட்டார். ஏன் இந்து கோவில்கள் மட்டும் அரசினால் நிர்வகிக்கபடுகிறது. இதற்கு மிகவும் தெளிவான ஒரு பதில் உள்ளது. முதலில் இந்து கோவில்கள் மட்டும் அல்ல, பல இந்துக் கோயில்கள் ஒரு சிறிய அளவிலான கோவில்களை மட்டுமே அரசாங்கம் எப்படி இருக்கிறது. இரண்டாவதாக, இஸ்லாமிய ஆலயங்களுக்கும் உண்டு. இங்கே பல சிறிய அளவிலான மசூதிகளும், ஜமாத்துகளும் அரசு பார்வையின் கீழ் வருவதில்லை. ஆனால் அரசர்களால் கட்டப்பட்ட மசூதிகளும் நேரடியாக ஒரு வாக்ப்ப் ஆணையத்தின் மூலமாக தான் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆணையம் நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நியமிக்கப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் 100% தமிழக அரசால் தான் நியமிக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவ ஆலயங்கள் ஏன் வரவில்லை என்பதற்கு நான் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். ஏனெனில் இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கனவே இந்த சட்டத்தை இயற்றி அதற்குண்டான வரைமுறைகளை தெளிவாக செயல்படுத்தி விட்டுத்தான் இங்கிருந்து சென்றார்கள். எனவே அது குறித்து கேள்வியில் எந்தவிதமான அடிப்படையும் இல்லை.

தற்பொழுது நம் முன் இன்னொரு கேள்வி இருக்கிறது. யார் தேசியமயமாக்க ஆதரவளிப்பார்கள் யார் பொது சொத்தாக இல்லாமல் தனிநபர் சொத்தாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவளிப்பார்கள். நான் தான் அதற்கு சிறந்த உதாரணம். வடபழனி முருகன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் என ஏறத்தாழ 10 க்கும் மேற்பட்ட கோவில்களை என் தாத்தா புதுப்பித்தார். சபரிமலையில் தற்பொழுது உள்ள ஐயப்பன் விக்ரகம் என் தாத்தாவினால் நிறுவப்பட்டது. அவர் ஒரு தீவிர பக்தர். தமிழகத்தின் கொறடாவாக இருந்து கோவில்களை தேசியமயமாக்க ஆதரித்தவர். இதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், நாத்திகவாதத்திற்கும் தீவிரமான ஆத்திக வாதத்திற்கும் நடுவில் ஒரு பெரிய நிலை உள்ளது. நாத்திகவாதி கோவில்களுக்கு என்னவாகிறது என்பது குறித்து எந்தவிதமான கவலையும் அடையப் போவதில்லை ஏனெனில் அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. தீவிரமான ஆதிக்கவாதிகளுக்கு தங்கள் மதம் மட்டுமே சிறந்தது மற்ற மதங்கள் சிறந்தவை அல்ல என்று அவற்றை மிதிக்க பார்ப்பார்கள்.

ஆனால் உண்மையான நம்பிக்கை உடைய ஒருவர், எண்ணமும் செயலும் அந்த மதத்தோடு ஒற்றிப்போன ஒருவர், என் மதம் எனக்கு இந்த அளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்றால், அவருடைய மதம் அவருக்கு முக்கியமாக இருந்து இருந்துவிட்டு போகட்டும், இவருடைய மதம் இவருக்கு முக்கியமாக இருந்துவிட்டுப் போகட்டும், அவர்களுடைய மதம் அவர்களுக்கு முக்கியமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்ற அளவில் தான் இருப்பார்கள், இதற்காகத்தான் நமக்கு செக்யூலரிசம் தேவை. அதுதான் உண்மையான இறைநம்பிக்கை. உண்மையான இறைநம்பிக்கை உடையவர்கள் மட்டுமே கோவில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தனர். நான் உங்களுக்கு பல அய்யர் அய்யங்கார் பெயர்களை கூறினேன். நீதிக்கட்சி அரசால் சட்டம் இயற்றப்பட்ட பொழுது இரண்டு முக்கியமான முடிவுகளை அவர்கள் எடுத்தார்கள். அந்த முடிவுகள் இந்து பக்தர்களின் பயங்களைப் போக்கும் விதத்தில் அமைந்தன.

முதலாக ஒரு சிறப்பு ஆலோசகராக ஒரு தேர்ந்த பின்னாட்களில் மத்திய அரசு அமைச்சரவையில் இடம் பெற்ற திரு என். கோபால்சாமி அய்யங்கார் அவர்களை  இந்து மதம் சார்ந்த எல்லா கோட்பாடுகளும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்தை இயற்றும் படி கூறி நியமிக்கப்பட்டார். இந்து சமய அறநிலைய துறையின் முதல் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பெருமைமிக்க திரு சதாசிவம் ஐயர் அவர்களை நியமித்தனர். எனவே என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், எவ்வாறு செய்கிறோம் என்று நன்கு உணர்ந்து, எது முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற போன்ற செய்கைகளை ஜனநாயக முறையில் செய்தனர்.

தற்பொழுது இந்த கோவில்களை தேசிய மயமாக்ககூடாது அரசு உடைமையாக இல்லாமல் அவற்றை மீட்டு எடுக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஒரு நான்கைந்து கேள்விகளை கேட்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன். வேணுகோபால் மேனனிடம் நான் கேட்கும் கேள்வி கோவிலை அரசாங்கத்திடம் இருந்து மீட்டெடுத்து யாரிடம் கொடுக்கப் போகிறீர்கள். பார்ப்பதற்கு பக்தியாக இருக்கிறார் என்பதற்காக இவரிடம் கொடுப்பீர்களா? அல்லது இவர் சார்ந்த சாதியின் அடிப்படையில் அவரிடம் கொடுப்பீர்களா? அல்லது பணம் படைத்தவர் என்ற முறையில் இவரிடம் கொடுப்பீர்களா? யாரிடம் கொடுப்பீர்கள்? அரசிடம் இருந்து மீட்டெடுத்து யாரிடம் கொடுப்பீர்கள்?

இரண்டாவதாக இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு நிறுவனம் எந்தவித அரசியல் தலையீடு இல்லாமல் நடக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?  ரோட்டரியில் கூட அரசியல் உள்ளதென்று காலையில் என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒருவர் கூறினார். இதுபோன்ற நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு ஆணையத்தை நம்மால் அரசியல் தலையீடு இல்லாமல் அமைக்கமுடியுமா.  நிச்சயமாக முடியாது என்பதுதான் என் பதில். அரசியல் தலையீடு இல்லாமல் எதுவுமே கிடையாது.

அடுத்ததாக நான் கேட்க விரும்புவது அரசாங்கத்தின் பார்வையின் கீழ் கோவில்கள் உள்ளவரை அங்கு கணக்கு வழக்குகளை நாங்கள் பார்வையிடுகிறோம். ஒரு வதந்தி ஒன்று பரப்பப்பட்டுள்ளது, கோவில்களில் ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டால் அதில் 18 பைசா அரசாங்கத்திற்கு செல்கின்றது என்று. இதில் எள்ளளவும் உண்மை இல்லை. முற்றிலுமான ஒரு பொய். தற்பொழுது தான் தமிழக பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை துவக்கி வைத்து விட்டு வந்திருக்கிறேன். இந்து சமய அறநிலைத்துறை நூற்றுக்கணக்கான கோடிகளை கோயில்களுக்கு தருகிறது. இந்துக்கள் தமிழக அரசாங்கத்திற்கு நிதி அளிப்பதில்லை. தமிழக அரசாங்கம் தான் கோயில்களுக்கு நிதி அளிக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கான கணக்கு வழக்குகளை வேண்டுமானாலும் நீங்கள் போய் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இதுதான் தீர்க்கமான உண்மை. அதேபோல் பொது கணக்கு குழுவில் நான் ஒரு உறுப்பினர் என்ற வகையில், வருடத்திற்கு மூன்று நான்கு முறையாவது

கோவில் நிர்வாகங்கள் குறித்து விவாதிப்பது உண்டு. அதில் பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது எவ்வாறு பிரிக்கப்படுகிறது ஒரு குறிப்பிட்ட நபரை ஏன் சில வேலைகளுக்காக பயன்படுத்தி உள்ளார்கள் என பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டு பல்வேறு கணக்குகளை சரிபார்க்க படுகிறது. தற்பொழுது இதுபோன்று கோவில்களை 400 வெவ்வேறு வாரியங்களிடம் கொடுத்துவிட்டால் கணக்கு வழக்குகளை யார் சரிபார்ப்பார்கள்? யாரை நாம் கேள்வி கேட்க முடியும்?

உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தை நான் இப்போது கூறுகிறேன். பல லட்சம் பக்தர்கள் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வராத ஒரு கோவில். இந்த கோவிலின் வாரியத்திற்கு தலைவராக உள்ளவர்களில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நெருக்கமானவர், சமீபத்தில் அந்தக் கோவிலின் வாரியம் மகாராஷ்டிரா அரசுக்கு 500 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்த பக்தர்கள் இது அரசியலுக்கு சென்று அடையும் என்று நினைத்து கொடுத்தார்களா அல்லது கோவிலை பராமரிப்பதற்காக கொடுத்தாரகளா? இப்படி தனித்தனியாக சென்றுவிட்டால் இதுபோன்ற விஷயங்களை யார் கண்காணிப்பது?

என் நேரம் முடிந்து விட்டது என்று கூறி உள்ளார்கள். எனவே கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் சொல்வதைப் போல் இங்கு பல விதமான ஊழல்கள் நடைபெறுகின்றன, இந்து சமய அறநிலையத்துறையில் எதுவுமே சரியில்லை என்று வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக அதை தனி நபர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால். பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, பொது நிறுவன வங்கிகள், சுகாதாரத்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. எல்லா துறைகளிலும் ஏதேனும் குறைகள் இருந்துதான் வருகின்றன. அதற்காக நாம் அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துவிட முடியுமா? அரசாங்கத்தை இழுத்து மூடி விடலாமா? பல்கலைக்கழகங்களை தனியாருக்கு மட்டும் என்று ஒதுக்கி விடலாமா? அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுத்து விடலாமா? நீராதாரங்களை தனியாருக்கு கொடுத்து விடலாமா? நமக்கு உள்ள இந்த நிர்வாக கோளாறுகளுக்கான தீர்வு நிர்வாகத்தை சரி செய்வது மட்டுமே. அதை விடுத்து அராஜகத்திற்கும் குழப்பத்திற்கும்  வழிவகுத்து விடக்கூடாது.

உங்கள் நேரத்திற்கு மிகவும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் கூறிய கருத்துக்களின் மூலம் ஒரு விவாதம் துவங்கும் என்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். இந்த மாநாடு நல்லபடியாக நிறைவடைய என் வாழ்த்துக்களை கூறி விடைபெறுகிறேன். நன்றி.

 Articles Year Wise: